சுட்டிப் பையன்
இ.ப.இனநலம்,
8ஆம் வகுப்பு, பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி,
ஜெயங்கொண்டம்.
ஓர் ஊரில் ஓர் அழகான வீடு. அதில் அம்மா, அப்பா ஒரு பையனுடன் வாழ்ந்து வந்தார்கள். அந்தப் பையன் மிகவும் சுட்டியாக இருந்தான். அம்மா, அப்பா, யார் பேச்சையும் கேட்பதில்லை. எப்பொழுது பார்த்தாலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டேயிருப்பான். இப்படியே போனால் பையனை நல்வழிப்படுத்த முடியாது என்று அவனை விடுதியுடன்கூடிய பள்ளியில் சேர்க்க அவனது அப்பா முடிவெடுத்தார்.
அவன் போக மாட்டேன் என்று அழுது அடம்பிடித்தான். ஒரே பையனைப் பிரிய அவனுடைய அம்மாவுக்கும் முடியவில்லை. அம்மாவும் அழுதார்கள். ஆனால் அவனுடைய அப்பா பிடிவாதமாக ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். ஹாஸ்டலுக்குள் அனுப்பும்வரை அம்மாவும், பையனும் பிரிய மனமில்லாமல் கட்டிக் கொண்டே வந்தார்கள்.
ஹாஸ்டல் வார்டன், நீங்கள் கவலைப்படாமல் போங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றார். அழுதுகொண்டே சென்ற அம்மாவை அப்பா சமாதானப்படுத்தினார். நம் பையன் நன்றாக வரவேண்டுமென்றால் இந்தப் பிரிவை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று கூட்டிப்போனார்.
அந்த விடுதியின் விதிப்படி 3 மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோர்கள் வந்து பிள்ளைகளைப் பார்க்கலாம். அம்மாவும், அப்பாவும் 3 மாதம் கழித்து மகனைப் பார்க்க வந்தார்கள். காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அவனுடைய அம்மா ஒரு முடிவோடு வந்தார். பையன் நம்மைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து என்னால் இங்கு இருக்க முடியவில்லை கூட்டிக்கொண்டு போங்கள் என்று அழுவான்.
இதைக் காரணமாக்கியே அவனைக் கூட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும். என்ன ஆனாலும் இதுதான் முடிவு என்று ஹாஸ்டலுக்கு அப்பாவோடு வந்தார்கள். அவர்களை வரவேற்ற விடுதிக் காப்பாளர் உதவியாளரை அழைத்து பையனைக் கூட்டிவரச் சொன்னார்.
பையன் கூடவே மூன்று நண்பர்கள் வந்தார்கள். அம்மாவைப் பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கதறுவான் என்ற நினைத்ததற்கு மாறாக, அம்மா அப்பாவைப் பார்த்து லேசாகச் சிரித்துக் கொண்டே வாங்கம்மா வாங்கப்பா என்றான். அம்மா பாசமாக அவனைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். ஆனால் கட்டிக் கொண்ட அம்மாவின் கையை விலக்கி விலக்கிவிட்டான். அம்மாவுக்கு ஏமாற்றமாகயிருந்தது. அப்பா வாங்கிவந்த திண்பண்டங்களை எல்லாம் கொடுத்தார்.
10 நிமிடம் நின்று பேசியவன், சரி நான் போய்ட்டு வர்றேம்மா என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் போகத் தொடங்கினான். போகும்போது மனசுக்குள், அம்மா எனக்கும் உங்களை ஓடிவந்து கட்டிக்கணும் போலிருந்தது. ஆனால் என்னோட நண்பர்களுக்குப் பெற்றோர்கள் இல்லை.
அவுங்க மனசுல நீங்க என்னோட பாசமா இருக்கிறதப் பார்த்தா ஏக்கமா இருக்குமில்லையா? அவர்கள் மனசு கஷ்டப்படக் கூடாதுன்னுதான் நான் ஒதுங்கி ஒதுங்கிப் போனேன். நான் என்றைக்குமே உங்களோட அன்பான மகன்தானம்மா என்று நினைத்துக் கொண்டான். அதை அவனுடைய அப்பா புரிந்து கொண்டு அம்மாவுக்கு எடுத்துச் சொன்னார்.
ஒரு சுட்டிப் பையன் பொறுப்பான பையனாக மாறிவிட்டான்.