ஒபாமாவின் குழந்தைப் பருவம்
ஸ்டான்லி ஆன் டன்ஹாம் என்ற வித்தியாசமான பெண்மணியைத்தான், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தன்னிடமுள்ள சிறந்த இயல்புகளுக்குக் காரணம் என்று பெருமை கொள்கிறார்.
அது ஒரு மதிய உணவு நேரம். இந்தோனேஷியத் துணியில் தயாரிக்கப்பட்ட ஒரு நீண்ட பாவாடை அணிந்து முக்கிய விருந்தினரான ஆன் சோடோரோ (Ann Soetoro) வந்திருந்தார். தன்கூடவே, ஒன்பது வயதான தனது மகன் பாரக் ஒபாமாவையும் அழைத்து வந்திருந்தார். ஒபாமா பாதி கென்யா நாட்டவனாக ஹவாய் தீவில் பிறந்ததாகக் கூறினார்.
ஜகார்தாவிலிருந்த தங்கள் வீட்டிலிருந்து தாம் வருவதாகவும் அவர் கூறினார். பாரி (Barry) என்று செல்லமாக அழைக்கப்பட்ட தனது மகனுக்கு(பாரக் ஒபாமாவுக்கு) ஜாவாவைச் சுற்றிப் பார்த்த பிறகு, அவன் படிப்பைத் தொடருவதற்காக ஹவாய்க்குத் திரும்ப அனுப்பப்படப் போவதாகக் கூறினார்.
எப்படிக் கைகுலுக்க வேண்டும் என்பதைப் பாரிக்கும் கற்றுக் கொடுத்தார். பிறகு, அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஓர் ஆங்கிலப் பயிற்சிப் புத்தகத்தைத் தான் சோபாவில் உட்கார்ந்து கொண்டு அவனுக்குப் புரட்டிக் காண்பித்தார். உணவின்போது, உணவருந்தும் மேசையின்மீது பாரி உட்கார்ந்து, சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பேசவில்லை. சிறிது நேரம் வெளியே போக, அவன் அனுமதி கேட்டான். ஆன், விருந்தளிப்பவரிடம் அனுமதி பெறும்படிச் சொன்னார். அதன்படி அனுமதி பெற்று, பாரி கீழிறங்கி, மற்றொரு பையனுடன், தரையில் விளையாட ஆரம்பித்தான்.
பிறகு எல்லோரும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள். பாரி அவர்களுக்கு முன்பு ஓடினான். எதிரே, இந்தோனேஷியச் சிறுவர் கூட்டம் ஒன்று, பாரி இருந்த திசையில் கற்களை வீசிக் கொண்டும், இனத்தைக் குறிக்கும் வசை மொழிகளைக் கூறிக் கொண்டும் வந்தனர். பாதிக்கப்படாதவனாகக் காணப்பட்ட பாரி, டாட்ஜ்பால் ஆட்டம் ஆடுவதைப் போல டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டான். இந்தோனேஷியாவில் தங்களுக்கு உள்ள மரியாதைக் குறைவைத் தெரிந்திருந்தும், கலப்பினத்தில் பிறந்த தனது குழந்தையை அழைத்து வந்தார் ஆன்.
இந்தோனேஷியர்கள் அமெரிக்கர்களைவிட இனவெறுப்பு மிகுந்தவர்கள். இச்சூழலில் அச்சம் தவிர்த்தலை ஒபாமாவிற்கு அவரது தாய் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஒரு குழந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த மாதிரிப் பயிற்சி இந்தோனேஷியாவில் அவசியமாயிருந்தது. பாரிக்கு மரியாதை பற்றியும் ஆன் சொல்லிக் கொடுத்திருந்தார். இந்தோனேஷியக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் காட்டும் கீழ்ப்படிதலையும் ஒபாமா அறிந்து வைத்து இருந்தான்.
அவைகளை இந்தோனேஷிய முறையிலேயே அவன் அறிந்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் ஒபாமாவால் அமெரிக்க ஜனாதிபதியாகச் சிறந்து விளங்க முடிகிறது. அமைதியான, நாகரிகமான, இரக்கமான இயல்புகள் கொண்ட இந்தோனேஷியச் சூழலில் அவர் வளர்ந்துள்ளதால் அமைந்துள்ளன. அவர் பண்பாடுகளின் சங்கமமாக இருப்பதால், நடைமுறை உலகியல் அறிந்தவராகவும் உள்ளார்.
ஆசியப் பழக்க வழக்கங்களையும் அமெரிக்க நெறிமுறைகளையும் கொண்டு இருப்பதால் ஒபாமாவால், பொறுமையாக, அமைதியானவராக, ஒரு நல்ல கேட்பாளராகவும் இருக்க முடிகிறது. இந்தோனேஷியாவில் ஒரு நல்ல கேட்பாளராக இல்லாவிட்டால் வெளியேறிவிட வேண்டியதுதான்.
1967ஆம் ஆண்டு, ஆன் சோடாரோ இந்தோனேஷியாவிற்கு தனது ஆறு வயது மகனுடன் வந்தபோது, நாடு அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது. டச்சுக்காரர்களின் பல நூற்றாண்டு ஆட்சிக்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 17,500 தீவுகளைக் கொண்ட இந்தோனேஷியா சுதந்திர நாடு ஆயிற்று.
ஒழுங்கற்று இருந்த கிராமங்களாலும், காடுகளாலும், வயல் நிலங்களாலும், சகதிப் பகுதிகளாலும் இணைத்துக் கோர்க்கப்பட்டிருந்த நகரம்தான் வரவேற்றது. குறுகிய சந்துகள் எல்லாம் மறைந்து உடைந்துபோன நகர கிராமங்கள் போல மாறி காம்பங்ஸ் (Kampungs) என்று அழைக்கப்பட்டன.
ஓடைகளின் இருபுறங்களிலும் வரிசையாக குடியிருப்புகள் தோன்றின. அவையே பொதுக் கழிப்பிடமாகவும், துவைக்கும் இடங்களாகவும், சாக்கடைகளாகவும் மாறிப் போயின. மேற்கத்தியர் அபூர்வமாகத்தான் இருந்தனர். கறுப்பினத்தார் இன்னும் அபூர்வம். ஆனால், ஜாகர்தாவிற்கு ஒரு மந்திர வசியம் இருந்தது.
மக்கள், வீதிகளில் முஸ்லீம்களின் வழிபாட்டு அழைப்புக் குரல்களையும், வியாபாரிகளின் வண்டிகள் உருண்டோடும் ஒலியையும் நினைவுகூர்ந்து கொண்டனர். 1967இல் ஜாகர்தா இருட்டிலிருந்து வெளிவந்தது. அரசு, காவல்துறையினர் பற்றிக் கவலைப்படாதவர்களுக்கு வாழ்க்கை எளிதாக இருந்தது. அமெரிக்கர்களை இந்தோனேஷியர்கள் வரவேற்றனர். வாழ்க்கைச் செலவு குறைவாகவும் வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் ஆயிற்று.
முதல் கணவரான பாரக் ஒபாமா ஸ்நாவை 1960இல் ஹவாய் பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். முதல் வருட மாணவியாக அமெரிக்காவின் சீட்டில் நகரத்திலிருந்து அவர் அப்போதுதான் தனது பெற்றோருடன் வந்திருந்தார். அவரது முதல் கணவர் அயல்நாட்டு மாணவர் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் கென்யாவிலிருந்து ஹவாய் வந்திருந்தார். விரைவில் ஆன் தாயானார். இருவரும் மணந்து கொண்டனர்.
பாரக் ஒபாமா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தான். ஆனால், ஆனின் முதல் கணவருக்கு, தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கென்யாவில் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, ஒரு மனைவியும் இருந்தாள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டுப் பிறகு திரும்பவும் ஆப்ரிக்கா செல்ல வேண்டும் என்று இருந்ததால், அவர் ஆனையும் பாரியையும் பிரிந்தார். பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் வந்து இருந்த மற்றொரு மாணவரான, லோலோ சோயெட்ரோ என்பவரை ஆன் சந்தித்தார். ஒபாமாவை மணவிலக்கு செய்தவுடன், இருவரும் மணந்து கொண்டனர். லோலோ 1966ஆம் ஆண்டு ஹவாய் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பட்டம் வாங்கியவுடன் திரும்பவும் ஜாகர்தா நகருக்கு அழைக்கப்பட்டார்.
ஒரு வருடம் கழித்து, ஆனும் அவரது மகன் பாரியும் லோலோவுடன் இந்தோனேஷியாவுக்குப் புறப்பட்டனர். அங்கே ஆன் தனக்கென ஒரு வேலையைத் தேடிக் கொண்டார். அரசு நிதி பெற்று நடைபெற்ற, கலாச்சாரத்தால் வேறுபட்டவர்களின் நட்பை வலுப்படுத்தும் நிறுவனம் அது. எப்போதாவது தான் வேலை பார்க்கும் இடத்துக்கு ஆன் தன் மகனை அழைத்து வருவார். அவன் வேறுபட்டு இருப்பதாகச் சொல்லி மற்ற ஊழியர்கள் அவனிடம் கலாட்டா செய்வார்கள்.
ராணுவ வேலையில் இருந்து வெளிவந்த பிறகு லோலோ, கலிபோர்னியா யூனியன் ஆயில் கம்பெனியின் ஜாகர்தா ஆபிசில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனும் ஒரு தனியார் பயிற்சிப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். 1970இல் ஆன் தன் இரண்டாவது குழந்தையை, மாயா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்தார்.
லோலோவின் புதிய வேலை அவரது போக்கையே மாற்றிவிட்டது. அவரது சொந்தக் கலாச்சாரத்தையே அவர் இகழ்ந்துவிட்டதாக ஆன் நம்பினார். லோலோவின் வியாபாரத் தொடர்புள்ள நண்பர்களுடனும் சமமாகப் பழக அவரால் முடியவில்லை. நீ அமெரிக்கனாக மாறி வருகிறாய் என்று லோலோவிடம் சொல்லி ஆன் குறைபட்டுக் கொண்டார்.
கணவன், மனைவி உறவு நாளுக்கு நாள் மோசமடைந்தது. அவர்கள் இருவரும் எப்போதாவது வாக்குவாதம் செய்து கொள்வதை, குழந்தை பாரியால் கேட்க நேர்ந்தது. ஆனால் ஆன், குழந்தைகள் இருவரிடத்திலும் பிரியமாக இருந்தார்.தன் குழந்தைகளுடன் ஆன் விளையாடுவார். அவர்களைச் சிரிக்க வைப்பார்.
ஆனால், நேர்மை, கடின உழைப்பு, மற்றவர்க்கு உண்டான தன் கடமையை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் அவர் உறுதியாக இருப்பார். தன்னை ஒருநாளும் ஆன் அடித்து வளர்க்கவில்லை என்று மகன் ஒபாமா கூறியிருந்தாலும்கூட, ஆனுடன் பணிபுரிந்த ஒருவர், நினைவுகூர்ந்து சொல்வதாவது:_ பாரியை ஒழுங்குபடுத்த, தேவைப்படும்போது அவனை அடித்தும் இருக்கிறேன் என்று ஆன் கூறியுள்ளார்.
மகள் மாயா, நாங்கள் பிறருடன் படிக்கும்போது ஒருபொழுதும் முரட்டுத்தனமாகவோ, கீழ்த்தரமாகவோ அல்லது ஆணவமாகவோ நடந்து கொள்ள எங்கள் தாயார் அனுமதிக்கமாட்டார்கள். ஓரளவு பணிவுடனும், பரந்த மனதுடனும் நடக்க வேண்டும்; படிக்க வேண்டும். யாரைப் பற்றியாவது நாங்கள் கடுமையாகப் பேசினால்கூட, மற்றவர்கள் கருத்தை எடுத்துச் சொல்லி இப்பொழுது எப்படி உணருகிறீர்கள் என்று எங்களைக் கேட்பார் என்று சொல்லியுள்ளார்.
ஆன், தன் மகன் பாரி, மிகவும் திறமை படைத்தவனாகவும், அசாதாரணமான மூளைத்திறன் கொண்டவனாகவும் இருப்பதால் உலகத்தில் அவனால் எதையும் செய்ய முடியும். ஏன், அமெரிக்காவின் ஜனாதிபதியாகக்கூட வரமுடியும் என்றும் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.
ஆன் தன் குழந்தைகள் இந்தோனேஷியாவைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அங்கே நண்பர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும் விரும்பினார். மேலும் அவர்கள் சிறந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமென்றும், அதற்கு இந்தோனேஷியப் பள்ளிக்கூடங்கள் ஏற்றதாக இல்லை என்றும் எண்ணினார். பாரியை இந்தோனேஷியாவில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலும் பின்பு, ஒரு முஸ்லீம் பள்ளிக்கூடத்திலும் சேர்த்தார்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஜாவா மக்கள் சுய அடக்கத்தையும், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வதிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சுய அடக்கம் பள்ளிக்கூடங்களிலேயே, பிறரை ஏளனப்படுத்துவதின் மூலம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
மக்கள் உடல் நிறத்தைக் கேலி செய்கிறார்கள். கருத்த உடல் நிறம் கேலிக்குரியதாகி விடுகிறது. ஒரு குழந்தையை ஏளனம் செய்வது, அக்குழந்தையை அதிகம் பாதிப்பது தெரிந்தால் ஏளனம் அதிகமாகி விடும். அவன் அதைச் சட்டை செய்யாமல் விட்டுவிட்டால், ஏளனம் நின்றுவிடும். இதை பராக் ஒபாமா புரிந்து கொண்டான்.
பாரியின் உண்மையான வாழ்க்கை அமெரிக்காவில்தான் என்று முடிவெடித்துவிட்ட ஆன், அதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார். ஜாகர்தாவில், ஒபாமாவின் படுக்கை அறைக்குள் காலை 4 மணிக்கே நுழைந்துவிடும் ஆன், அவனுக்கு ஆங்கிலப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். அவன் பள்ளிக்குச் செல்லும் வரையில் 3 மணி நேரம் சொல்லிக் கொடுப்பார். ஒபாமா தடுக்கும்போது, உன் அறை ஒன்றும் நான் வந்து போவதற்கான உல்லாசப் பயண இடமன்று என்று சொல்வார்.
ஆறு வயதிலேயே பாரியை ஜாகர்தாவுக்கு இடமாற்றம் செய்த ஆன், திரும்பவும் 10 வயதில் அமெரிக்காவுக்கு அனுப்பினார்.
ஜாகர்தாவில் பாரி கழித்த ஆண்டுகள் பல வழிகளில் அவனது வாழ்க்கையைச் செதுக்கி உள்ளது. ஆன், தனது விருப்பத்திற்கேற்ற முறையில் முக்கியமான இரண்டுவித அனுபவங்களைக் கற்றுக் கொள்ள உதவினார். முதலில், அவன் வெளிநாடுகளில் அசாதாரணமான சாகசங்கள் செய்வதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்திக் கொள்ளவும் பெரிதுபடுத்திக் கொள்ளவும் உதவினார்.
அவன் தன்னை ஒரு அமெரிக்கனாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக, அவன் அமெரிக்கா திரும்பவும், 13 முதல் 19 வயது வரையான இளம்பருவ வாழ்க்கையை அமெரிக்காவில் அனுபவிக்கவும் ஆன் உதவினார்.
– ஆர்.ராமதாஸ்