கட்.. கடா.. கட்.. தந்தியின் கதை
மோர்ஸ் பலகை(morse key)
பிஞ்சுகளே… என்னடா இது கட்..கடா…ன்னு ஒரு தலைப்புன்னு யோசிக்கிறீங்களா? காரணம் இருக்கு. தந்தி கேள்விப் பட்டிருக்கீங்களா? நீங்களெல்லாம் செல்பேசிக் குறுஞ்செய்திக் காலத்தில் பிறந்தவர்கள் அல்லவா! உங்களுக்கு தந்தி பற்றித் தெரிய வாய்ப்பில்லைதான்.
நமது பிஞ்சு வாசகர்களான ராஜபாளையம் எஸ்.யாழ்பிரபா, எஸ்.எழில்மதி ஆகியோர் தந்தி பற்றி நமது பெரியார் பிஞ்சு இதழில் அதன் வரலாற்றை எழுதச் சொல்லிக்கேட்டு நமக்குத் தந்தி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக் காக மட்டுமல்லாமல் பிஞ்சு வாசகர்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக இந்தக் கட்டுரை.
மனிதனின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் முன்னோடி இந்தத் தந்தி. அதாவது இங்கிலீஷில் இதனை TELEGRAM என்று சொல்லுவார்கள். இந்தத் தந்தியை அனுப்பும் இயந்திரத்துக்கு TELEGRAPH MACHINE என்று பெயர்.
பாரோன் பாவெல் ஷில்லிங்
கம்பிகளின் மூலம் தகவல்களை அனுப்பும் முறைதான் தந்தி. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குத் தகவல் அனுப்ப இந்தத் தந்தியைத்தான் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டு மக்கள் பயன்படுத்தி வந்தார்கள்.
1832ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த பாரோன் பாவெல் ஷில்லிங் (Baron Pavel L’vovitch Schilling) என்பவர் தந்தி அனுப்பும் கருவியை உருவாக்கினார்.
சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ்
1844ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் முதல் தந்தியை, சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் என்ப வர், அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து பால்டிமோருக்கு சோதனை முறையில் அனுப்பினார். இவர்தான் தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கியவர். அதனால்தான் அந்த மொழிக்கே மோர்ஸ் கோட் (MORSE CODE) என்று பெயர்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு குறியீடு இருக்கும். அந்தக் குறியீட்டை மோர்ஸ் பலகையில் (morse key) அழுத்தி மறுமுனைக்குப் புரிய வைப்பார்கள். அதனை அங்குள்ளவர் புரிந்துகொண்டு செய்தியை எழுதிக்கொள்வார். அந்தச் செய்தி ஒரு தாளில் எழுதப்பட்டு சம்பந்தப்பட்டவருக்குக் கொடுக்கப்படும். இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே தந்தி அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மோர்ஸ் பலகை இயந்திரத்தில் கட்..கடா..கட்… என்று எழுப்பப்படும் ஓசையிலேயே செய்திகள் புரிந்து கொள்ளப்படும்.
தொலைப்பேசியை கிரஹாம் பெல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை தந்தி சாதனம்தான் உலகின் தகவல் தொடர்புக் கருவியாக இருந்தது. அதாவது, புறாக்களின் கால்களில் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்த காலத்திற்கு அடுத்தபடியாக, தகவல் அனுப்பும் முதல் அறிவியல் சாதனம் தந்தி அனுப்பும் கருவிதான்.
தந்தி இயந்திரம்
தொலைப்பேசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு தந்தியின் பணி குறையத் தொடங்கியது. ஆனாலும், வசதி படைத்தவர்களே தொலைப்பேசியைப் பயன்படுத்தக்கூடிய நிலை இருந்ததால், ஏழை, நடுத்தர மக்களின் அவசரத் தொடர்புக்கு தந்தியைத்தான் நூறாண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தினார்கள். பெரும்பாலும் அவசரச் செய்திக்கே தந்தி அனுப்புவார்கள். அதாவது, உடல்நலமின்மை, மரணம், ஊருக்குப் புறப்படுதல் போன்ற செய்திகள் இடம்பெறும்.
வாழ்த்துத் தந்திகளும் பிரபலம். பிறந்தநாள் மற்றும் திருமண வாழ்த்துகள் தந்தி வழியாகக் கொடுப்பது நீண்ட நாட்களாக உள்ளது. 1850ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி கொல்கத்தாவில் தந்தியைப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்தச் சேவை 1854ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு அளிக்கப்பட்டது. கம்பிகளால் இணைக்கப்பட்ட தந்தி சேவை 1902ஆம் ஆண்டு முதல், கம்பியில்லா தந்தியாக இயங்கியது.
பெரியார் பிஞ்சுக்கு வந்த கடைசித் தந்தி
1927ஆம் ஆண்டு முதல் இந்தியா இங்கிலாந்து இடையே வான் வழியில் அலைவரிசைகள் மூலம் தந்தி சேவை தொடர்ந்தது. தந்தி கருவி பரிணாம வளர்ச்சி அடைந்தது. தட்டச்சு இயந்திரம், கணினி என கால மாற்றத்திற்கேற்ப பயணப்பட்டது. தற்போது செல்பேசிக் காலம் வந்துவிட்டதால், முற்றிலும் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் தந்தி சேவையை இந்திய அஞ்சல் துறை 2013 ஜூலை மாதம் 14ஆம் தேதியோடு நிறுத்திவிட்டது. இந்தியாவில் 163 ஆண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்த தந்திக்கு விடை கொடுக்கப்பட்டுவிட்டது.
உங்களில் பலர் தந்தி அனுப்பும் அலுவலகத்தைக்கூடப் பார்த்திருக்கமாட்டீர்கள். நான் பழைய மோர்ஸ் பலகை மூலம் தந்தி அனுப்புவதையே பார்த்திருக்கிறேன். இனி நீங்கள் அருங்காட்சியகங்களில் இந்தக் கருவிகளைப் பார்க்கலாம்.
– பிஞ்சு மாமா