சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 12
இந்து மக்கள் இஸ்லாமியப் பெயர்
– ச.தமிழ்ச்செல்வன்
பணக்காரச் சாமி ஒன்றுதான். ஏழைச்சாமிகளோ பல. எல்லா மதங்களிலும் இரண்டு வகைச் சாமிகளும் உண்டு. ஏழைச்சாமிகளைப் பற்றித்தான் இப்போது நாம் விரிவாகப் பார்த்து வருகிறோம். ஏழைச்சாமிகளை கிராம தெய்வங்கள் என்று சொல்வார்கள். நாட்டுப்புறத் தெய்வங்கள் என்றும் சொல்வார்கள். சிறுதெய்வங்கள் என்றும்கூட சொல்வார்கள். நாம் ஏழைச்சாமிகள் என்றே சொல்வோமே.
சென்ற அத்தியாயத்தில் தஞ்சாவூரில் உள்ள தர்கா ஒன்றின் கதையைப் பார்த்தோம். தர்கா என்பது இஸ்லாமிய மதத்தின் நாட்டுப்புறத் தெய்வம் எனலாம்.
மகாகவி பாரதி பிறந்த எட்டயபுரம் என்கிற ஊரைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த ஊரில் வாழ்ந்து மறைந்த இன்னொரு புலவரும் உண்டு. அவர் பெயர் உமறுப்புலவர். நாம் தமிழ்ப்பாடத்தில் படிக்கிற இலக்கியமான சீறாப்புராணத்தை இயற்றியவர். அவர் இறந்து அடக்கமாகி இருப்பது எட்டயபுரத்தில்தான். பாரதியார் பிறந்தவீடு இருக்கிற தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி உமறுப்புலவரின் சமாதி (அடக்கம் செய்யப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடம்) உள்ளது.
உமறுப்புலவர் இஸ்லாம் மதக்காரர். ஆனால் அவர்மீது பிற மதத்தினரும் அன்பும் மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். எட்டயபுரம் வட்டாரத்தில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் உமறுப்புலவர் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுகிறார்கள். உமறுத் தேவர், உமறுக் கோனார் என்று பலர் அப்பகுதியில் இருப்பதை இப்போதும் நாம் காணமுடியும். நம்பிக்கையும் மதிப்பும் இருந்தால் யாரும் ஜாதி மத வித்தியாசம் பார்ப்பதில்லை.
தூத்துக்குடியில் ரொண்டோ என்று ஒரு கிறித்தவ பாதிரியார் இருந்தார். பாதிரியார் என்றால் தெரியுமல்லவா? கோவில்களில் வழிபாடுகளை வழிநடத்தும் பூசாரிகள் தெரியும். அதுபோல கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைகளை வழிநடத்துபவர் பாதிரியார். ரொண்டோ, மதவேலைகள் மட்டுமல்லாமல் மக்களுக்கு நிறைய உதவிகளும் செய்வார். மருத்துவ உதவி, பண உதவி, கல்வி உதவி என்று பல உதவிகள். அதனால் அவர்மீது மக்கள் மிகுந்த பிரியமாக இருந்தார்கள்.
ஒருநாள் அவர் இறந்து போனார். மக்கள் மிகவும் வேதனைப்பட்டார்கள். அழுதார்கள், கதறினார்கள். அப்புறம் கண்ணீரோடு அவரை அடக்கம் செய்தார்கள். அவருடைய மறைவுக்குப்பிறகு பிறந்த குழந்தைகளுக்கு ரொண்டோ என்று பெயர் வைத்தார்கள். இப்போதும்கூட தூத்துக்குடியில் ஒரே வீட்டில் பெரிய ரொண்டோ, சிறிய ரொண்டோ என்று அண்ணன் தம்பிகளுக்குப் பெயர்கள் இருப்பதை நாம் காண முடியும்.
அவருடைய சமாதியை மக்கள் வழிபடத் தொடங்கினார்கள். மலர்கள் சொரிந்தார்கள். அந்தச் சமாதிக்கு எண்ணெய் கொண்டுபோய் ஊற்றினார்கள். சமாதியின் மீது வழியும் எண்ணெயை வழித்து ஒருகிண்ணத்தில் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். உடல் நலம் இல்லாதவர்கள் உடம்பில் அந்த எண்ணெயைப் பூசினால் உடம்பு சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை பரவியது. கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் அந்த எண்ணெயைத் தடவினால் கஷ்டமில்லாமல் சுகப்பிரசவமாகக் குழந்தை பிறக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
ஆக, இறந்துபோன பாதிரியார் இப்போது ஏழை மக்களின் சாமியாக மாறிவிட்டார். இப்படித்தான் சாமிகள் பிறக்கின்றன, பரவுகின்றன. அது எல்லா மதங்களிலும் உண்டு.
அறிவியல் பார்வையுடன் எல்லாவற்றையும் பார்க்கும் நாம் சாமிகளையும் அப்படித்தானே பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் பல வரலாற்று உண்மைகள் அடங்கியுள்ளன. பல விதமான மனித உணர்வுகள் அடங்கியுள்ளன. பொதுவாக தாத்தா, பாட்டி பெயரை பேரப்பிள்ளைகளுக்கு வைப்பார்கள். ராமசாமி மகன் மாடசாமி, மாடசாமி மகன் மறுபடியும் ராமசாமி, இப்படியே வந்த தொடர்ச்சி இப்போது ராமசாமியின் பேரன் ரமேஷ் என்று நாகரிகமாக மாற்றம் அடைந்துள்ளது.
இதே பழக்கப்படிதான் சாமிகளின் பெயரை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கமும் வந்திருக்கும். ஒரு அன்பின் அடையாளமாக வைப்பதுதானே பெயர். பிற்காலத்தில் மதங்களைச் சிலர் உருவாக்கி அதை மக்களைப் பிரிப்பதற்காக பயன்படுத்தலானார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளில் நாகூர்கனித் தேவர், நாகூர்கனி நாடார் என்று இந்துக்கள்கூட பெயர் வைக்கிறார்கள். நாகூர் என்பது நாகப்பட்டினத்தை அடுத்த ஒரு ஊர். அந்த ஊரில் அடக்கமாகியுள்ள இஸ்லாமியப் பெரியவர் சாகுல் ஹமீது என்பவரின் தர்கா உள்ளது. அவரைத்தான் நாகூர் ஆண்டவர் என்று மக்கள் சொல்கிறார்கள்.
ஆனால் இது என் மதம், அது உன் மதம், உன் சாமிப் பெயரை நான் வைக்கமாட்டேன் என்று வம்புக்குக் கிளம்பினார்கள் சிலர். அவர்களை நாம் மதவாதிகள் என்று சொல்கிறோம்.
அந்த மதவாதிகள்தான் இப்படி எந்தச் சாமிப் பெயரையும் எந்த மதத்துக்காரரும் வைக்கும் நல்ல பழக்கத்தைத் தடுக்கிறார்கள். வரும் காலத்திலாவது நாம் இதை மாற்ற வேண்டும்.
இதுவரை நாம் விதவிதமான ஏழைச்சாமிகளின் கதைகளைப் பார்த்துவிட்டோம். இனி பணக்காரச் சாமிகள் அல்லது மதச்சாமிகள் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு இரண்டு சாமிகளுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளைப் பார்க்க இருக்கிறோம்.
(தொடரும்)