சிங்கத்தையே எதிர்கொள்ளும் ஒட்டகச்சிவிங்கி(GIRAFFE)
ஆப்ரிக்காவில் காணப்படும் ஒட்டகச் சிவிங்கி உலகின் மிக உயரமான விலங்கு ஆகும். பாலூட்டி வகையைச் சேர்ந்தது. கி.மு.46ஆம் ஆண்டு ஜூலியஸ் சீசரால் அய்ரோப்பியர்களுக்கு முதன்முதலாக அறிமுகமானது.
நீண்ட கழுத்துக்கென்றே பெயர் பெற்ற ஒட்டகச்சிவிங்கிகள் 18 முதல் 20 அடிவரை உயரம் கொண்டவை. இதன் இதயத்திலிருந்து 10 அடி உயரத்தில் இருக்கும் மூளைக்கு, ரத்தம் மேல் நோக்கிச் செல்ல வாய்ப்பில்லை. எனவே, இதன் கழுத்தில் ரத்தத்தைப் பம்ப் செய்து தருவதற்கு வால்வுகள் உள்ளன. இந்த அமைப்பு வேறு எந்த உயரினத்திலும் இல்லை.
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வதைப் போல, ஒட்டகச்சிவிங்கிகளை ஆள் பாதி கழுத்து பாதி என்று சொல்லலாம். 20 அடி உயரம் உள்ள ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மட்டும் 10 அடிவரை இருக்கும். எனினும், கழுத்தில் இருக்கும் சர்ச்விக்கல் எலும்புகள் மனிதனுக்கு உள்ளதுபோல் ஏழு தான் உள்ளன.
ஜிராஃபிடே (Giraffidae) என்ற குடும்பத்தில் உள்ள இரண்டு பிராணிகளுள் ஜிராபா கேமைலோபார்டிஸ் என்ற விலங்கியல் பெயரினைக் கொண்டது.
ஒட்டகச்சிவிங்கிகள் சுமார் 1,500 கிலோ எடைவரை (ஒன்றரை டன்) இருக்கும். இதன் வயிற்றைத் தவிர உடல் முழுவதும் சிறுத்தையைப் போன்ற வடிவமைப்புப் புள்ளிகள் காணப்படும். 12 முதல் 15 வரை குழுக்களாக உலவும். இவை மிகவும் சாதுவானவை. ஓடும் வேகமும் குறைவுதான். ஆபத்து என்று பயந்து திமுதிமுவென ஓடினாலும், அந்த ஓட்டத்தில் சத்தம் மட்டுமே இருக்குமே தவிர வேகம் இருக்காது. ஒட்டகச்சிவிங்கியின் தோல் பார்ப்பதற்கு வலைப்பின்னல் போல அழகாக இருக்கும்.
தாவரங்களை உண்டு வாழும் இதற்கு நன்கு சுழலும் நீண்ட நாக்கும், அனைத்துத் திசைகளிலும் ஒரு கருவியைப் போல இயங்கும் மேல் உதடும் உண்டு. இவற்றைப் பயன்படுத்தி உயரத்தில் உள்ள இலைகளையும், மொட்டுகளையும் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும். ஆனால், தரையில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கும்போது, சிரமப்பட்டு முன்னங்கால்களை அகல விரித்து வைத்துக் கொண்டோ அல்லது சிறிது வளைத்துக் கொண்டோ படாதபாடுபட்டுக் குடிக்கும்.
20 அடிகள் வரை வளர்ந்திருக்கும் இவற்றால் 2 அடி உயரத்தைக் கூட தாண்ட முடியாது. நீச்சலும் தெரியாது என்பதால் தண்ணீரிலும் இறங்காது.
இரண்டு சிறிய கொம்புகள் தோலால் மூடப்பட்டு கொம்பு உள்ளே இருப்பதே தெரியாமல் அமைந்திருக்கும். சிலவற்றிற்கு கூடுதலாக ஒரு ஜோடிக் கொம்புகள் இருக்கும். மேலும் கொம்புகளுக்கு நடுவில் ஒரு கொம்பு முளைத்து வந்தால் அதற்கு வயதாகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
எதிரிகளைத் தாக்கும்போது கால்களை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. சிங்கத்தைக்கூட உதைத்தே கொன்றுவிடும் ஆற்றல் இவற்றின் கால்களுக்கு உண்டு.
பிறந்து சில மணி நேரத்திலேயே எழுந்து ஓடும். இவை சுமார் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. உடல் திசுக்களில் தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்வதால், கொஞ்ச நாள்களுக்கு நீரில்லாமல் தாக்குப் பிடிக்கும் தன்மையுடையவை.