பிஞ்சுகள் பக்கம்
விண்வெளி ஆசை
இங்கிலாந்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் டெக்ஸ்டர் விண்வெளிக்குச் செல்வதைத் தனது லட்சியமாக நினைத்துள்ளார். எனவே, நாசா விண்வெளி மய்யத்திற்கு, அன்புள்ள நாசா, என் பெயர் டெக்ஸ்டர். நீங்கள் செவ்வாய் கிரகத்திற்கு 2 பேரை அனுப்பப் போவதாக அறிந்தேன்.
எனக்கும் அங்கு செல்ல ஆசையாக உள்ளது. இப்போது எனக்கு 7 வயதாகிறது. வருங்காலத்தில் விண்வெளிக்குச் செல்ல ஆசைப்படும் நான் விண்வெளி வீரராக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.
சிறுவனின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி நாசா பதில் கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து, டெக்ஸ்டரின் ஆர்வத்திற்கு நாசா அனுப்பிய பதில் டெக்ஸ்டரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாசா அனுப்பிய புகைப்படங்களை டெக்ஸ்டர் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக டெக்ஸ்டரின் தாய் கத்ரினா தெரிவித்துள்ளார்.
நாட்டியக் கலைச்செல்வி
தமிழர்களின் தொன்மையான கலைகளில் நாட்டியக் கலையும் ஒன்று. மனிதன் பேசத் தொடங்கிய காலத்தின் முன்னேயே அங்க அசைவுகளின் மூலம்தானே செய்திகளை விளக்கியிருப்பான்? அதன் பரிணாமமான நாட்டியக் கலையின் ஒரு வடிவமே பரதக்கலை. அந்த நடனக் கலையைப் பயின்று அரங்கேற்றம் செய்திருக்கிறார் ஒரு பெரியார் பிஞ்சு.
வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தைச் சார்ந்த பி.ராமு – சி.பி.நந்தினி ஆகியோரின் மகள் ரா.சினேகா, சென்னை முகப்பேர் வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படிக்கிறார். பரதநாட்டியத்தில் மட்டுமன்றி, கவிதை, புகைப்படம் எடுத்தல், நுண்கலை மற்றும் காய்கறிகளைக் கீறி அழகுபடுத்துவதிலும் ஆர்வமுடையவராகத் திகழும் இவர்,
நாட்டியப் பயிற்றுநர்கள் மதுரை திரு ஆர்.-முரளீதரன் மற்றும் திருமதி சித்ரா முரளிதரனிடமும் பரதம் கற்றுக் கொண்டு தனது கலைத் திறமையை கடந்த ஜூன் 22 அன்று அரங்கேற்றம் செய்தார். விரைவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்களுக்கு ஏற்ப நாட்டியம் ஆடத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளார் சினேகா.
அறிவுச் சிறுவன் ஆடம்
பிரிட்டனில் வசித்து வரும் இரண்டரை வயதுக் குழந்தை ஆடம் கிர்பி அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்று அறிவுத்திறனாளர் குழுவான மென்சாவில் இடம் பெற்றுள்ளார்.
ஷேக்ஸ்பியரின் எழுத்துகளை வாசித்துக் காட்டியதுடன், பிரெஞ்சு மற்றும் ஜப்பான் மொழி எழுத்துகளையும் படித்துள்ளார் ஆடம். மேலும், ரசாயனப் பொருட்களின் பெயர்களை வரிசை மாறாமல் படித்துக் காட்டி, 100 வார்த்தைகளை எழுத்துக் கூட்டியும் படித்து தனது அறிவாற்றலை நிரூபித்துள்ளார்.
பொதுவாக இரண்டரை வயதுக் குழந்தைகள் சிரமப்பட்டு மெதுவாகப் படிப்பர். ஆனால் ஆடம், சாதாரணமாகப் படித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரே மாதிரியான உருவம் கொண்ட காண்டாமிருகம், நீர்யானை போன்றவற்றைக் காட்டினால்கூட சரியாகச் சொல்லிவிடுவான் என்று கூறியுள்ளனர் ஆடமின் பெற்றோர்களான டீன், கெர்ரி ஆன் தம்பதிகள்.
ஆடமின் புத்திக்கூர்மை அளவு 41ஆக உள்ளது. இது, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோருக்கு இணையான அறிவாற்றலைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
உலகிலேயே மிகக் குறைந்த வயதில் இக்குழுவில் இடம்பெற்ற பெருமையை ஆடம் பெறுவதாக மென்சா அறிவுத் திறனாளர் குழுவின் முதன்மைச் செயல் அலுவலர் ஜான் ஸ்டிவனேஜ் கூறியுள்ளார். இதற்கு முன்பு, ஆறு வயதுச் சிறுவன் டான் ரோபர்ட்ஸ் இக்குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– க.கார்த்திகா,
10, அ, நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
நெசவாளர் காலனி, அருப்புக்கோட்டை