உலகின் பெரிய கடல்வாழ் உயிரினக் காட்சியகம்
மிருகக் காட்சியகம் பார்த்திருப்பீர்கள். காட்டில் வாழும் விலங்குகள் அங்கே இருக்கும். நம் சென்னைக்கு அருகில் வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. இது மனிதர்கள் பார்த்து மகிழ அமைக்கப்பட்ட விலங்குகளின் நகரம்.
இதேபோல கடலில் வாழும் உயிரினங்களைக் காண நாம் கடலுக்கடியில் சென்று பார்க்க முடியாதல்லவா? அதனால்தான் கடலின் அடியில் நாம் சென்றால் எப்படி இருக்குமோ, அப்படியே இருக்கும்படி அமைக்கப்பட்ட காட்சியகத்தை இங்கிலீஷில் aquarium என்கிறார்கள். நாம் தமிழில் கடல் வாழ் உயிரினக் காட்சியகம் என்று அழைக்கலாம்.
இதனை உருவாக்க மிகப் பெரும் செலவு ஆகும் என்பதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெரிய அளவுக்கு அமைக்க முடியாமல் இருக்கிறது. நமது நாட்டில் aquarium என்றால் அது பல வகை வண்ண மீன்கள் வளர்க்கும் சிறு தொட்டிகளை விற்கும் அங்காடிகளையே குறிக்கும்.
நம் மக்கள் அதிலும் மூடநம்பிக்கையைப் புகுத்திவிட்டார்கள். வாஸ்து மீன் என்று சொல்லி ஒரு வகை வெள்ளி நிற பளபளக்கும் மீனை பல இலட்சம் கொடுத்து வாங்கி வீட்டில் வைக்கிறார்கள். அதில் ஒரு மீன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. பல வகை அரிய வண்ண வண்ண மீன்களைப் பார்த்து மகிழும் நிலையைக் கெடுத்து, ஒரு மீனை மட்டுமே வளர்க்கும் மூடநம்பிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள். சரி, இவர்கள் இப்படித்தான், போகட்டும். நாம் இப்போது தெரிந்து கொள்ளப்போவது உலகின் பெரிய கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தைப் பற்றி.
வளர்ந்த நாடுகளில் (அதாவது பணக்கார நாடுகள்) பெரும் தொகை செலவழித்து இந்தக் காட்சியகங்களை அமைக்கிறார்கள். 1.அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள The Georgia Aquarium, 2.ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள Sydney Aquarium, 3.துபாயில் உள்ள Dubai Aquarium & Discovery Center, 4.போர்ச்சுகல் நாட்டில் லிஸ்போனில் உள்ள Oceanario de Lisboa, 5.ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள The Okinawa Churaumi Aquarium
ஆகியவை உலகின் முதல் பெரிய 5 கடல்வாழ் காட்சியகங்கள்.
இவற்றில் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள காட்சியகமே உலகின் மிகப் பெரிய கடல்வாழ் உயிரினக் காட்சியகம். தி ஜியார்ஜியா அக்வேரியம் என்னும் பெயர் கொண்ட இக்காட்சியகம் 31 ஆயிரம் கியூபிக் மீட்டர் பரப்பளவில் (அதாவது சுமார் 11 இலட்சம் அடி) அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 500 அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. ஏறத்தாழ ஒரு இலட்சத்து 20 ஆயிரம் உயிரினங்கள் வாழவைக்கப்பட்டு நம் கண்களுக்கு விருந்தாகியுள்ளன. பெலூகா வகைத் திமிங்கிலங்கள், பலவகை டால்பின்கள், பெரிய வகை சுறா மீன்கள், கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய skate மற்றும் ray மீன்கள் இங்கு உள்ளன.
2012 ஆம் ஆண்டில் அரிய வகை தவளைகளும் இங்கு விடப்பட்டன. பவளப்பாறைகள் உள்ளிட்ட கடலினுள் உள்ள உயிரின வாழ்நிலையை அப்படியே நம் கண்முன் நிறுத்தும் காட்சியகமாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள். 30 மீட்டர் நீளமுள்ள கண்ணாடிச் சுரங்கப் பாதையின் வழியே பார்வையாளர்கள் நடந்து சென்று காணும் வகையில் வசதிகள் கொண்ட இந்தக் காட்சியகம் அமெரிக்கா செல்லும் அனைவரையும் ஈர்க்கிறதாம்.
நீங்கள் அமெரிக்கா சென்றால் போய்ப் பார்த்து வாருங்கள். அமெரிக்காவுக்குப் போகாமலேயே பார்க்க வேண்டுமா? இதோ உங்களுக்காகவே இருக்கிறது இணையதளம். இந்த இணையதளத்திலும் பார்க்கலாம். அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கும், விலங்கியல் படிக்கும் மாணவ, மாணவியர்க்கும் மிகுந்த பயனளிக்கும்.
– அன்பன்