நீதிக்கதை
குரங்கும் டால்பினும்
சில மாலுமிகள் கடற்பயணம் மேற்கொண்டனர். நீண்ட பயணத்திற்குத் துணையாக மாலுமி ஒருவர், தனது வளர்ப்புக் குரங்கையும்கூட கொண்டு வந்திருந்தார். வெகு தூரத்தில் அவர்கள் கடலுக்குள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பயங்கரமான புயல் கப்பலைக் கவிழ்த்துவிட்டது.
எல்லோரும் கடலில் விழுந்தார்கள். அந்தக் குரங்கு தான் கடலில் மூழ்கிவிடுவோம் என்று உறுதியாக நம்பியது. அப்பொழுது திடீரென ஒரு டால்பின் அங்கு தோன்றியது. அது குரங்கைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டது. ஒரு தீவை அடைந்தபோது டால்பின் முதுகை விட்டுக் குரங்கு இறங்கியது.
நீ இந்த இடத்தை இதற்குமுன் பார்த்திருக்கிறாயா? என்று டால்பின் குரங்கிடம் கேட்டது.
அதற்குக் குரங்கு, ஆம். இந்தத் தீவின் அரசர் எனது நண்பர். உண்மையில் நான் இந்தத் தீவின் இளவரசன்; உனக்குத் தெரியுமா? என்று கேட்டது.
அந்தத் தீவில் யாருமே வசிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட டால்பின், அப்படியானால் நீ இளவரசன்; இப்போது நீ அரசனாகவே இருக்கலாம் என்று சொன்னது.
நான் எப்படி அரசனாக முடியும்? என்று குரங்கு திருப்பிக் கேட்டது.
நீந்த ஆரம்பித்த டால்பின், அது எளிதானது தானே? யாருமில்லாத இந்தத் தீவில் இனிமேல் நீதான் அரசன் என்று சொல்லிவிட்டுப் போயிற்று. நீதி: பொய் சொல்பவர்களும் வீண் பெருமை பேசுபவர்களும் கடைசியில் துன்பத்தைத்தான் சந்திப்பார்கள்.