அன்பு மடல் 8
படிப்பைவிட முக்கியம் எது?
பாசத்திற்குரிய பேத்தி பேரன்களே,
எங்கள் அன்பும் வாழ்த்தும். என்ன இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளாக உள்ள உங்களைப் போன்ற இளந்தளிர்கள் எல்லாம், எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, ஆத்திரப்படுவது, அளவுக்கு மீறி வெட்கப்படுவது-_வேதனைப்படுவது, விரக்தியடைவது போன்ற உணர்வுகளுக்கு ஆளாகின்ற செய்தி ஏடுகளில் நாளும் வந்து கொண்டுள்ளன.
கிரிக்கெட் பார்க்க அனுமதிக்கவில்லை, டி.வி. சேனலில் விரும்பிய சேனலைப் பார்க்க அனுமதிக்கவில்லை, சினிமாப் பார்க்கக் காசு கொடுக்கவில்லை என்று நான் தூக்கு மாட்டிக் கொள்கிறேன்; ஆசிரியர் வகுப்பறையில் கண்டித்தார், அதனால் அவமானப்படுத்தப்பட்டதாக ஒரு கற்பனையில் தற்கொலை செய்துகொள்வதை நினைத்து எம் நெஞ்சமெல்லாம் வேதனைப்படுகிறது.
பெற்றோர்களோ ஆசிரியர்களோ நமது பிள்ளைகளை நல்வழிப்படுத்தினால்தான் _- அதுவும் -_ இந்த வயதுதான் உரிய பருவம் என்று கருதி- உரிமை எடுத்துக் கொண்டு கண்டிக்கிறார்கள்.
அந்தக் கண்டிப்பு தண்டனை அல்ல. நம் பிள்ளைகளே _- செல்லப் பேரன் பேத்திகளே, அது தேவையான ஒழுக்கத்திற்கான அரு மருந்து _- சற்று கசப்பு மருந்து.
அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்களே, அதன் பொருள் இதுதான்:
சிறுவயதில் நம் பிள்ளைகளை _- எது சுண்ணாம்பு எது வெண்ணெய்? என்று புரிந்துகொள்ள இயலாத மனப்பக்குவம் உள்ள, எதையும் விளையாட்டு மனப்பான்மையுடன் விளைவுகளை அறியாது வினையாற்றும் பருவத்தில் உள்ள உங்களைப் போன்றவர்களை நல்வழிப்படுத்தத்தானே பெற்றோர்களோ ஆசிரியர்களோ உங்களைக் கடிந்து கொள்கிறார்கள் _- அதை மிகவும் கொடுமையான தண்டனை என்றோ, அவமானப்படுத்துவதற்கு உரியது என்றோ ஒரு அவசரகதி முடிவுக்குத் தாவிக் குதித்து, திரும்பிட முடியாத நிலைக்குச் செல்லும் அந்தப் பிள்ளைகளால் அவர்களுக்கும் லாபமில்லை; அவர்களைப் பெற்று வளர்த்திட பெரும் துன்பங்களைச் சுமந்த பெற்றோர்களுக்கும், அவர்களை உலகில் சிறந்த அறிவாளிகளாக்க வேண்டும் என்று கருதி கற்றுக் கொடுக்கும் கடமை ஆசான்களான ஆசிரியர்களுக்கும் என்றும் நீங்காப் பழியும் அவப் பெயரும்தானே மிச்சம்?
யோசித்தார்களா அந்த அவசரப் புத்திக்காரர்களான அந்த முடிவெய்திய மூடத்தினால் முடக்கப்பட்ட முன்கோபிகள்.
சில பிள்ளைகள் தொட்டாற் சுருங்கியோ, சிணுங்கியோ விடுவதுபோல, கோபத்துடன் அல்லது வெறுப்புடன் அல்லது ஒரு மாதிரி அலட்சியத்துடன் தாய் தந்தை, தாத்தா பாட்டி, குடும்பத்து உறுப்பினர்களிடம் நடந்து கொள்ளுகின்றனர்!
இப்படிப்பட்ட மனப்போக்கை சிறுவயதில் வளர்த்துக் கொண்டவர்கள், பிறகு அவர்கள் வளர்ந்த பின்பு மிகவும் கஷ்டப்பட -_ திருந்தமுடியாமல் _ திக்குமுக்காடி மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாதவர்களாகவே ஆகி நிற்பது வழமையாகவும் வாடிக்கையாகவும் ஆகிவிடுமே!
இன்னும் சிலர் பெற்றோர்களை _ ஆசிரியர்களைத் தண்டிப்பதாகத் தவறாக எண்ணிக்கொண்டு தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்ளுகிறார்கள்.
இது கொடுமையிலும் கொடுமையாகும்! கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் சென்று தங்களது உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வது, பசி, பட்டினியோடு இருந்தால் படிப்பு ஏறுமா மூளையில்?
இல்லை பணம் கையில் உள்ளது; வெளியில் சாப்பிடுகிறோம் என்றால் எதற்காக தேவையற்றுப் பணத்தை _ அப்படி வீணே செலவு செய்ய வேண்டும்?
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற ஒரு பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?
பல வீடுகளில் தவறுக்காக, தந்தையர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளிடம்கூட, அவர்களது தாயார்கள் திருட்டுத்தனமாகவாவது _ அதாவது தந்தைக்குத் தெரியாமலாவது உதவிடுவார்கள் -_ காரணம் அவர்களது பாசம் கைம்மாறு கருதாது, தன்னலம் துறந்த பாசம் பிள்ளைகளே.
எனவே, இந்த இளவயதில் உங்கள் படிப்பைவிட பண்பும் பழக்கவழக்கமும் சகிப்புத் தன்மையும், பொறுமையும் வெறுப்பும் கோபமும் அண்டாதவர்களாக நீங்கள் நடந்து கொண்டால் அது யாருக்கு லாபம் தெரியுமா?
உங்கள் பெற்றோர்களுக்கா? அல்ல அல்ல! உங்கள் ஆசிரியர்களுக்கா? அல்ல, அல்ல.
பின் யாருக்கு?
உங்களுக்கு,
உங்களுக்கு
உங்களுக்குத்தான்
உணர்ந்து கொள்ளுங்கள்; அதன்படி நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் அன்பு பொங்கும் தாத்தா
கி.வீரமணி
//