உண்ணுவதை எண்ணுவதைப் பொறுத்தே உங்கள் வாழ்வு!
வாழ்வு என்பது பிறக்கும் நேரத்தைப் பொறுத்ததோ, கடவுள் எழுதிய விதியைப் பொறுத்ததோ அல்ல என்பதை இதற்கு முன் விளக்கி இருக்கிறோம்.
காரணம், நேரம் என்பது கிழமை என்பது ஒரு காலக்கணக்கீடு. அது பிற்காலத்தில் மனிதன் தன் வசதிக்காக வகுத்தது. எனவே, அது நம் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது. கோள்களின் (கிரகம்) இயல்பும் நம் வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. காரணம், கோள்களுக்கே மனிதன் சென்று ஆய்கிறான். அது மனிதச் செயல்பாடுகளை நிர்ணயிப்பதில்லை என்பது அறிவியல்ரீதியாக உறுதி செய்யப்பட்ட உண்மை.
நாம் பிறந்த குடும்பம் நம் வாழ்வைத் தீர்மானிக்குமா? நமது வசதியையும் வாய்ப்பையும் குடும்பம் தீர்மானிக்கலாம். மாறாக, நம் வாழ்வைத் தீர்மானிக்க முடியாது.
நாம் பிறந்த ஜாதி நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கலாமே தவிர, தடுத்துவிட முடியாது. தந்தை பெரியார் போன்றோரின் போராட்டங்களால் அத்தடைகூடத் தகர்க்கப்பட்டு ஒதுக்கீட்டு உரிமை உயர்விற்கு உதவுகிறது.
படிக்கும் பள்ளியும் வாழும் ஊரும் தீர்மானிக்குமா என்றால் இல்லை. காரணம், அவை மட்டுமே வாழ்வை, உயர்வை, ஆற்றலை, அறிவைத் தீர்மானிப்பதில்லை. கிராமப்புறத்தில் கொட்டகையில் படித்தவர்கள் எல்லாம் உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.
அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர்களே இதற்குச் சான்று. அப்படியென்றால், நம் வாழ்வை, உயர்வை, வளத்தை, நலத்தை, பெயரை, புகழைத் தீர்மானிப்பவை எவை? சுருங்கச் சொன்னால் உண்ணும் உணவும் எண்ணும் எண்ணமுமே தீர்மானிக்கின்றன.
உண்ணும் உணவு
விலை உயர்வான உணவு என்று அதற்குப் பொருள் அல்ல. உயர்விலை உணவு என்றாலே அது உடலுக்குக் கேடு என்று உறுதியாகச் சொல்லலாம். காரணம், அது செயற்கையாய் இருக்கும். வேதிப்பொருள்கள் கலக்கப்படும். பதப்படுத்தப்பட்டிருக்கும். சுவை மிகுந்திருக்கும் அளவிற்குக் கேடும் ஒளிந்திருக்கும்.
விலை குறைந்த கம்பு, கேழ்வரகு, சோளம், வரகு, கொள்ளு, கீரைகள், கொய்யா, நெல்லி, நாவல், பேரிக்காய், பப்பாளி, பழைய சோறு, வெண்டை, அவரை, பீர்க்கங்காய், சுரைக்காய், வாழைப்பழம், முட்டை இவற்றை முறையாக அளவோடு உண்டாலே உடலுக்கு வளமும் நலமும் அறிவுக் கூர்மையும் தானே வரும்.
மலிவான மணத்தக்காளி, மாங்காய், பொன்னாங்கண்ணி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பில்லை, மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவை மலிவானவை. அதேநேரத்தில் உடலுக்கு நலத்தை – பலத்தைத் தரக்கூடியவை. இஞ்சி, பூண்டு, வெங்காயம் மூன்றும் கொழுப்பை அகற்றும். (குறைக்கும்). இதயம் காக்கும்.
பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை கண்ணுக்கும் முடிக்கும் மிகச் சிறந்த உணவுகள். முட்டையில், வாழைப்பழத்தில், பப்பாளியில், ஆப்பிள், பேரீச்சையில் உள்ளதைவிட சிறந்த சத்துகள் உள்ளன. எனவே, திட்டமிட்டுத் தேர்வு செய்து உணவுகளை உண்டால் குறைந்த செலவில் நிறைந்த சத்துகளைப் பெற முடியும்.
மேலும், சுவைக்காக உண்பதைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கும் நலத்திற்கும் உகந்ததை உண்ணவேண்டும். வசதியானவர் 1000 ரூபாயில் பெறும் சத்துகளை ஏழைகள் 100 ரூபாய் செலவில் பெறமுடியும். எதைத் தேர்ந்தெடுத்து உண்கிறோம் என்பதிலேதான் அது அடங்கியுள்ளது. எண்ணெயில் வறுத்த உணவுகள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், அடைக்கப்பட்ட பண்டங்களைத் தவிர்த்து இயற்கையான பசுமையான உணவுகளை, பழங்களை, கீரைகளை அதிகம் உண்டாலே உடல் வளமாகவும் நலமாகவும் இருக்கும். எனவே, பிஞ்சுகள் சிறுவயதுமுதலே உணவைத் தெரிந்து, புரிந்து உண்ண வேண்டும்.
எண்ணும் எண்ணம்
நம் வாழ்வு நலமாக, வளமாக, நீண்ட நாள் அமைய நல்ல உணவு எப்படிக் கட்டாயமோ அதேபோல் நமது உயர்வான வாழ்வுக்கு நாம் எண்ணும் எண்ணங்கள் முதன்மையானவை. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் _ எண்ணுவதெல்லாம் சிறந்ததாக இருக்கவேண்டும். நல்லவற்றை, உயர்ந்தவற்றை, சிறந்தவற்றை எண்ணும்போது நமது உள்ளமும் உடலும் நலம் பெறும். மகிழ்வும் நிம்மதியும் நிறைவும் ஏற்படும். உள்ளத்தனையது உயர்வு என்பதன் பொருள் எண்ணத்தனையது உயர்வு என்பதே.
நம் எண்ணங்களே செயல்களாக மாறும். செயல்களே நமது வாழ்வின் சிறப்பை, உயர்வை, சாதனைகளைத் தீர்மானிக்கின்றன.
எனவே, நாம் எண்ணுவதெல்லாம் அறிவுக்கு உகந்ததாய், மனித நேயமுடையதாய், உலகுக்கு நன்மை பயப்பதாய், நல்லனவாய், உயர்வானதாய் இருக்க வேண்டும்.
நமது எண்ணங்கள் சிறக்க நல் நூல்களைப் படிக்க வேண்டும். நல்லோர் சொற்களைக் கேட்க வேண்டும். நல்லவர்களுடன் பழக வேண்டும். உடலுக்குக் கேடு பயக்கும் உணவுகள் நம்மைக் கவரும். அதேபோல் வாழ்வுக்குக் கேடு தரும் செயல்கள் நம்மைக் கவரும். எனவே, கவருவதை உண்ணுவதும் எண்ணுவதும் கூடாது. உகந்ததை, உண்ணவும் வேண்டும் எண்ணவும் வேண்டும்.
அது நம் வாழ்வை நலமுடனும், வளமுடனும், நிறைவுடனும் அமைக்கும். பெரியவர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.
– சிகரம்