அறிஞர் அண்ணா பிறந்த நாள் : செப்டம்பர் 15
பெரியார் சுவாமிகள்
ஒரு சமயம் பெரியாருடன் அண்ணா வடநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பத்து நாட்கள் ஹரித்துவாரில் தங்கி இருந்தார்கள். காலஞ்சென்ற பேரறிஞர் எம்.என்.ராய் இல்லத்தில் தங்கி பெரியார் வால்மீகி இராமாயணத்தினைப் பற்றி குறிப்புகள் எடுத்தார். அவருக்கு உதவியாக அண்ணா உடனிருந்தார். அப்போது கடுமையான குளிர். கங்கையில் நடுப்பகல் இரண்டு மணிக்குக் கால் வைத்தாலும் உடலை நடுங்க வைக்கும் குளிர்.
ஹரித்துவார் சாதுக்களின் கோட்டை. எந்தத் தெருவுக்குச் சென்றாலும் சந்நியாசிகள். மாலை வேளைகளில் பெரியார் உலாவச் செல்வார். வெண்ணிற தாடி, பொன்னிற மேனி, ஆரஞ்சு நிற சால்வை. அண்ணாவோ கொட்டும் குளிருக்குப் பயந்து முரட்டுத் துணி சட்டையும் போட்டுக்கொண்டு அதற்குள் கரங்களை விட்டுக்கொண்டு கைகட்டிய வண்ணம் அவர் பின்னால் சென்றார்.
தினமும் புதுப்புது சந்நியாசிகளைக் காணும் ஹரித்துவார் மக்கள் இவர்கள் போகும் காட்சியைக் கண்டு வியந்தனர்.
இதுவரை காணாத மகிமை பொருந்திய குருமகான், தன் பிரதமச் சீடருடன் செல்கிறார் என்று எண்ணிக்கொண்டு, பயபக்தியுடன் கைகூப்பித் தொழுதனர். சிலர் காலில் விழுந்து வணங்கினர். இதைப் பார்த்து அண்ணா சிரித்துவிட, பெரியார், பேசாமல் வா அண்ணாதுரை… என்று கூறியபடி தாடியைத் தடவிக் கொண்டாராம்.
சாதுக்களையும் சாமியார்களையும் சந்நியாசிகளையும் கண்டித்து வந்த பெரியாரை, சாமியார் என்று எண்ணி ஹரித்துவார் மக்கள் வணங்கியது வேடிக்கைதான்.
#####
நாலணா, காலணா எது பெரிசு?
ஒரு சமயம், அறிஞர் அண்ணா சேலத்தில் உள்ள நண்பர் வீட்டில் பகல் உணவு அருந்தச் சென்றிருந்தார். இலை போட்டவுடன் முதலில் அப்பளமும் முட்டையும் வைத்தார்கள். சிறிது காற்றடிக்கவே அப்பளம் இலையிலிருந்து பறந்துவிட்டது. உடனே அண்ணா…
முட்டையின் விலை என்ன? என்றார். நாலணா என்றார் நண்பர். அப்பளத்தின் விலை என்ன?- என்றார். காலணா என்றார் நண்பர்.
உடனே அண்ணா, பார்த்தீர்களா? காலணா தலைவிரித்து ஆடுகிறது. நாலணா அமைதியோடு இருக்கிறது என்று சொன்னதும் சாப்பாட்டு மேஜை கலகலப்பு மேஜையானது. இப்படி அண்ணாவின் நகைச்சுவை உணர்வு பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
#####
இருப்பதைக் கொடுங்கள்
அண்ணா முதலமைச்சராக இருந்த சமயம், அவருடைய காஞ்சிபுரம் வீட்டில் திடீரென்று ஃபிரிஜ் இருப்பதைப் பார்த்தார். வியப்புடன், இதை எப்போது வாங்கினீர்கள் என்று வீட்டாரிடம் கேட்டார்.
மாதத் தவணையில் வாங்கினோம். நீங்கள் இங்கே வரும்போது, உங்களுடன் வரும் அதிகாரிகள் குளிர்ந்த நீர் கேட்கிறார்கள். கடைக்குப் போய் வாங்கிவர வேண்டியிருக்கிறது என்று மருமகள் விளக்கமளித்தார்.
நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் போதும். நமது வசதிக்கேற்ப வாழ்வதுதான் சரியான முறை என்றார்.
#####
கலங்கினார் அண்ணா
கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக் குடும்பம் தாங்க முடியவில்லை. ஆகவே, தொத்தா தான் அணிந்திருந்த நகைகளில் ஒவ்வொரு நகையாக அடமானம் வைத்து, அந்தப் பணத்தை அண்ணாவின் கல்லூரிச் செலவுக்குப் பயன்படுத்தி வந்தார்.
தொத்தா.. நான் கல்லூரிக்கு இனி போகப் போவதில்லை.
பதறிப் போய், ஏன்… ஏன்… துரை! இப்படிச் சொல்றே என்று தொத்தா கேட்டார்.
பின்னே என்ன?… நானும்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க நகைகளை வித்து என்னைப் படிக்க வைக்கிறீங்க. வீட்டையெல்லாம் வறுமையாக்கிவிட்டு நான் படிக்க வேண்டாம்.
அப்படிச் சொல்லாதேப்பா, நகை இருக்கும், போகும். நீ படிச்சுச் சம்பாதிக்கிறபோது தானாக வரும். எங்களுக்கு என்ன சொத்து இனி வேணும்? நீயும் உன் படிப்பும்தான் எங்க சொத்து. எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று தெரிஞ்சுக்கிட்டு நீ படிச்சா போதுமப்பா என்று தொத்தா பேசியதைக் கேட்டு அண்ணா கண் கலங்கினார். அன்றிலிருந்து படிப்பில் அதிக கவனம் செலுத்தினார்.
கல்லூரி வாலிபர்கள் பொழுதுபோக்கிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதைப் பார்த்துச் சபலமேற்படுகிறபோதெல்லாம் தொத்தாவின் நகைகள் அடமானத்தில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் வெறுங்கழுத்தோடு தொத்தா இருக்கிற காட்சியையும் நினைத்துக் கொள்வார் அண்ணா.
லட்சியவாதிகள் இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை இந்தச் சேதி உணர்த்தும்.
நூல்: அண்ணா 100 ஆபூர்வ அனுபவங்கள்
தொகுப்பு : சபீதா ஜோசப்