கற்கும் கலை
– சிகரம்
பிஞ்சுகளின் முதன்மையான வேலை கற்றல். இளமையில் கல் என்றது இதன் அடிப்படையில்தான். கற்றல் என்பது குழந்தையின் அறிவை, ஆற்றலை, விழிப்பை, தெளிவை, உண்மையைக் கொடுக்கக் கூடியது.
கல்வியில்லாதவர் கருத்துக் குருடர்கள் ஆவர். அதனால்தான் வள்ளுவர் கண்ணுடையர் என்பவர் கற்றவரே என்றார். உரிமையுடன், வஞ்சிக்கப்படாமல் வாழ கல்வி கட்டாயம். அதனால்தான் ஆதிக்கம் செய்ய எண்ணியவர்கள் கல்வியைக் கொடுக்க மறுத்தனர். அடித்தட்டு மக்கள் கல்வியின்றி அடிமைப்பட்டுக் கிடந்தது இதனால்தான்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோர் அயராது உழைத்து, போராடி கல்வி உரிமை எல்லோருக்கும் கிடைக்கச் செய்தனர். அப்படி அரிதாய்க் கிடைத்த கல்வியை கண்ணுங்கருத்துமாய் கற்று உயர வேண்டும்; உலகிற்குப் பயன்பட வேண்டும்.
ஆனால், அக்கல்வியை பிஞ்சுகள் பலரும் பிடிக்காத ஒன்றாய் எண்ணும் மனநிலை மாற்றப்பட வேண்டும். கல்வியை ஆர்வத்துடன் கற்க நம் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விருப்பமின்றித் திணிக்கப்படும் எதுவும் வெற்றியளிப்பதில்லை. கல்வி, கற்க இன்பம் தரக்கூடியதே! ஆனால், அதை அளவுக்கு மீறித் திணிப்பதாலும், அதை மட்டுமே திணிப்பதாலும் அது வெறுப்பாக மாறுகிறது. எனவே, பெற்றோரும் மற்றோரும் கல்வியைத் திணிப்பது தவறு. கல்வியை விருப்பத்துடன் கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு, குழந்தைகள் விரும்பும் ஆடல், பாடல், விளையாட்டு என்று அவர்கள் செய்ய வாய்ப்பளித்து, அத்தோடு இடையிடையே கல்வியையும் சேர்த்துக் கொடுத்தால் கல்வி விருப்பத்துக்குரியதாய் மாறும்.
கற்பதும் கற்பிப்பதும் ஒரு கலை. கற்பிப்பதில் ஆசிரியர் பெற்றோர் அரசு என்ற மூன்று அங்கங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. கற்பது பிள்ளைகளின் (மாணவர்களின்) பணி. எனவே, கற்றலை விருப்பம் உடையதாய், எளிமையானதாய், ஆற்றல் உடையதாய் ஆக்கும் பணி முதலில் கூறிய மூன்று அங்கங்களின் பணி.
ஏட்டுக் கல்வி என்பதற்குப் பதிலாக செய்முறைக் கல்வி, மூளைக்கு மட்டுமே முழுநேர வேலை என்பதற்குப் பதிலாய் உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைவும், மகிழ்வும் தரும் உடற்பயிற்சி, கலைப்பயிற்சி, பொழுதுபோக்கு போன்றவை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.
இளம் வயதில் விளையாட்டுடன் கூடிய கல்வியும், பள்ளிப் படிப்பில் செய்முறையுடன் கூடிய கல்வியும், கல்லூரியில் ஆய்வு, விவாதம், ஆக்கங்கள் சார்ந்த கல்வியும் கொடுத்தால் கல்வி விருப்பம் உடையதாய் மாறும். குறிப்பாக மனப்பாடம் செய்யும் கல்வி கற்றல் முறையை மாற்றினாலே, கல்வி விருப்பம் உடையதாய் மாறும்.
அதேபோல் கற்போர், ஆர்வத்துடன் கற்றால் மட்டுமே அது மகிழ்விற்குரியதாயும், அறிவுக்கும், ஆக்கத்திற்கும் உதவுவதாய் அமையும்.
எனவே, தங்களுக்கு எது விருப்பமோ, எதில் சாதிக்க, ஆக்க ஆர்வமோ அதைத் தேர்வு செய்து கற்றால் கல்வி விருப்பம் உடையதாய் மாறும்.
விரும்பியதைக் கற்பது மகிழ்வளிப்பது போலவே, விரும்பும் நேரத்தில் கற்பதும் மகிழ்வளிக்கும்.
விளையாடும் நேரத்தில் விளையாடுதல்; தூங்கும்போது உரிய நேரம் (6 மணி நேரம்) தூங்குதல்; தொலைக்காட்சிக்கு ஒரு சிறு நேரம், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ ஒரு குறிப்பிட்ட நேரம், சுவைத்து உண்ண, சுற்றிவர என்று நேரம் ஒதுக்கி, படிக்கும் நேரத்தில் படித்தால் கற்றல் மகிழ்வு தரும்.
மாறாக, எப்போதும் படிப்பு என்று மூழ்கினால், அது கசக்கும்; வெறுக்கும், பதியாது, பயன்தராது. உலகில் தன் முயற்சியில் தேடிக் கற்றவர்கள் மட்டுமே அந்தந்தத் துறையில் சாதித்துள்ளனர்; புலமை, அறிவு பெற்றுள்ளனர். கல்விக் கூடங்களில் முறையாகப் பயின்றவர்களைவிட இவர்களே வல்லுநர்களாய் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, ஆர்வத்துடன் தேடிக் கற்பதுதான் ஆற்றல் தரும் கல்வியாக அமையும். அண்ணா தேடித்தேடி கற்றதால்தான் அறிஞரானார். கலைஞர் விரும்வி விரும்பிக் கற்றதால்தான் புலமை பெற்றார். முயன்று முயன்று சாதிக்க விரும்பியவர்கள் விஞ்ஞானிகள் அனைவரும். மனனக்கல்வி மதிப்பெண் தரும். அறிவும் ஆற்றலும், படைப்புத் திறனையும் தராது. மாணவர்களும் மற்றவர்களும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கற்பது என்பது ஒரு கலை. அதைத் திட்டமிட்டு முறையாகச் செய்ய வேண்டும்.