சுரங்கப்பாதை தோன்றியது எப்படி?
– நிலா
மனிதனுக்கு முதன்முதலில் சுரங்கங்களைப் பற்றிய பலனைச் சொல்லிக்கொடுத்தது காட்டு எலியும் முயல் வளைகளும்தான்,
அய்ரோப்பாவிற்கு மனிதர்கள் சென்றதே சுரங்கப்பாதை வழியாகத்தான். 12,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி இடையே தோண்டப்பட்ட நீண்ட சுரங்கப்பாதையை சுமார் 40 வருடங்களாக ஆராய்ந்து 23 ஜனவரி 2013 அன்று ஜெர்மானிய அகழ்பொருள் ஆய்வாளர் Heinrich Kusch தனது ஆய்வின் முடிவை வெளியிட்டார். இந்தச் சுரங்கப்பாதைதான் அய்ரோப்பாவில் நியொதிக் என்ற மனித இனம் குடியேறக் காரணமாக அமைந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது நடந்த குண்டுவீச்சு மற்றும் இயற்கை மாற்றங்களால் சிதைந்து போன இச்சுரங்கப்பாதையின் தொடர்ச்சி எதுவரை இருக்கிறது என்று அளவிட முடியவில்லை. தற்போது செயற்கைக்கோள் மூலமாக முழுமையான சுரங்கப்பாதையைக் கண்டறியும் ஆய்வு நடந்து வருகிறது. நதிக்கரை நாகரிகங்களுக்கு முன்பு மனிதக் குழுக்கள் பெரும்பாலும் நாள்தோறும் வாழ்வியல் போராட்டங்களிலேயே வாழவேண்டி இருந்ததால், எதிரிகளிடமிருந்து தப்பி ஓட சுரங்கம் தோண்ட ஆரம்பித்தார்கள்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த திராவிட இனத்தவர் சுரங்கப் பாதைகளைப் பல நற்காரியங்களுக்காகப் பயன்படுத்தினார்கள், கழிவு நீர் வெளியேறவும், ஆற்று நீர் ஊருக்குள் வந்து செல்லவும் பல கிலோ மீட்டர் தொலைவு சுரங்கப்பாதை அமைத்திருந்தனர்.
மெசபடோமிய நதிக்கரை நாகரிகம் செழித்திருந்த காலத்தில் கொள்ளையர்கள் அதிக அளவு சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்தி வந்தனர். இதில் பல சுரங்கப்பாதைகள் இன்றும் சட்ட விரோத காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சுரங்கங்கள் சிரியா, லெபனான், காஸா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் அதிகம் உள்ளது. தான் அமைத்த சுரங்கப் பாதையைப் பார்க்கக் கொடுத்து வைக்காமல் பிணமாக அதே சுரங்கம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டவர் ஷாஜஹான்.
தான் நினைத்த நேரத்தில் தாஜ்மஹால் செல்வதற்காக ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹால் வரை சுரங்கப்பாதை ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்த ஷாஜஹான், அந்தப் பணி முடிவதற்குள் நிதி நெருக்கடியில் சிக்கி வாரிசு குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆக்ரா கோட்டையிலேயே முடிசூட்டிக்கொண்ட ஏழாவது மகனான அவுரங்கசீப்பால் சிறை வைக்கப்பட்டார். கோட்டையில் ஷாஜஹான் இறந்த பிறகு அவரது உடலை அவர் கட்டிய சுரங்கப்பாதை வழியாகக் கொண்டு சென்று தாஜ்மஹாலில் அடக்கம் செய்தார்கள்.
மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் அரண்மனை எது என்று பல குழப்பங்கள் இன்று வரை நிலவி வருகிறது. தற்போதுள்ள திருமலை நாயக்கர் மஹால் நாயக்கர் புதிதாகக் கட்டியது. அதற்கு முன்பு அந்த இடம் சந்தைகூடும் இடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் அங்கேயே கிடைத்துள்ளன. 1980-களில் மதுரை புதுமண்டபம் அருகே சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப்பட்டது. அது பழைய சொக்கநாதர் மீனாட்சி கோவிலையும் புதிய மீனாட்சியம்மன் கோவிலையும் இணைக்கும் பாதையாக இருந்து வந்தது.
மேலும், பழைய சொக்கநாதர் கோவிலிலிருந்து வைகையாற்றுக் கல்பாலம் வரை ஒரு சுரங்கப்பாதை இருந்தது. இதிலிருந்து தற்போதுள்ள மீனாட்சி அம்மன் கோவில் முன்பு அரண்மனையாக இருந்ததும், பழைய சொக்கநாதர் கோவில் (சிம்மக்கல்)தான் நாயக்கர் வருகைக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலாக இருந்ததும் தெரிய வருகிறது. நாயக்கர்கள் பொதுவாக தாங்கள் கைப்பற்றும் ஊர்களில் ஏற்கெனவே குடியிருந்த மன்னர்களின் அரண்மனையில் குடியேறமாட்டார்கள்.
சென்னை மெட்ரோ ரயிலுக்காகத் தோண்டப்படும் சுரங்கப் பாதை
இதன் அடிப்படையில் பாண்டிய அரண்மனையை (கோஇல்) விரிவுபடுத்தி கோவிலாக்கி தனக்காக புதிய அரண்மனையைக் கட்டிக் கொண்டார்கள். சீனர்கள் நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி வந்தனர். 1893இல் திபெத் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பட்டு சாலை எனப்படும் சில்க் ரூட் முழுவதும் சுமார் ஆயிரக்கணக்கான சிறிய _ பெரிய சுரங்கப் பாதைகள் கண்டறியப்பட்டது.
வியாபார நோக்கமாக சீனர்கள் செல்லும் போது எதிரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இந்தச் சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தினர். திடீர் திடீரென்று சீன வியாபாரிகள் காணாமல் போவதைக் கண்டு மத்திய ஆசிய நாடோடி வழிப்பறிக் கொள்ளையர்கள், சீனர்களை மாயாவிகள் என்று நினைத்து அவர்களைத் தாக்குவதில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியப் பொருளாதாரத்தைத் தீர்மானித்ததும் சுரங்கப்பாதைகள்தான். மும்பையை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க 1880களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றான சாயந்திரி மலைகளைக் குடைந்து ரயில் பாதை அமைத்து மும்பையை பிற நகரங்களுடன் இணைத்தனர்.
இதன் பயனாக மும்பை 1990களிலேயே பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மாறியது. இந்தியாவில் தற்போது மெட்ரோ சுரங்க ரயில்கள் டில்லி, கொல்கத்தாவில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. மும்பையிலும் சென்னையிலும் 2020-க்குள் இயங்க ஆரம்பித்து விடும் என்று தெரிகிறது.