வித்தியாச விளையாட்டுகள்
உடல் திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் இருந்தாலும்,கேளிக்கைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சில விளையாட்டுகள் உலகின் பல நாடுகளில் இருக்கின்றன.
அவற்றில் சில இவை:
டக்ரா (takraw)
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விளையாடப்படும் வித்தியாசமான விளையாட்டு டக்ரா. கைப்பந்து விளையாட்டு போன்ற இதனைக் கையால் தொடக்கூடாது. ஆனா, கைப்பந்து ஆட்டத்திற்குக் கட்டப்படுவது போலவே வலை கட்டப்பட்டிருக்கும்.
கைகளுக்குப் பதிலாக கால்களால் பந்தினை உதைத்து எதிர்ப்பக்கம் அனுப்பவேண்டும். காலின் பாதங்கள், முட்டிகள் மற்றும் தோள்கள், நெஞ்சு ஆகிய உடலின் பாகங்களைக் கொண்டு பந்தைத் தள்ள வேண்டும். மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இவ்விளையாட்டு பிரபலமாக உள்ளது.
ஹார்ஸ்பேக் (Horseback cheese)
இங்கிலாந்து நாட்டில் 200 ஆண்டுகளாக விளையாடும் வினோத விளையாட்டு ஹார்ஸ்பேக் சீஸ். கூப்பர் மலை என்னும் செங்குத்தான மேடு பள்ளமான, ஒழுங்கற்ற மலையில் மட்டுமே இவ்விளையாட்டு ஆடப்படுகிறது. மலையின் மேலிருந்து கீழாக ஒரு பெரிய பாலாடைக் கட்டி உருட்டிவிடப்படும். அந்தப் பாலாடைக்கட்டியை விரட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழ் நோக்கி ஓடி வரவேண்டும்.
எக்காரணம் கொண்டும் திரும்பக்கூடாது. அப்படி ஓடி வந்து எல்லைக் கோட்டில் அந்தப் பாலாடைக்கட்டியைப் பிடிப்பவரே வெற்றிபெற்றவர். அவருக்கு அந்தப் பாலாடைக்கட்டியே பரிசாக அளிக்கப்படும். ஆபத்தான இவ்விளையாட்டில் கீழே விழுவதால் மூளை கலங்குதல், முதுகுத் தண்டு மற்றும் எலும்பு முறிவு, கை, கால்கள் உடைதல், மூக்கு உடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது உண்டாம். என்றாலும் இந்த விளையாட்டை ஆண்டுதோறும் அந்நாட்டில் நடத்துகிறார்கள்.
செஸ் பாக்சிங் (Chess boxing)
சதுரங்கம் (Chess) மற்றும் குத்துச் சண்டை (boxing) ஆகிய இரண்டு விளையாட்டையும் இணைத்து விளையாடும் புதுமையான விளையாட்டு செஸ்பாக்சிங்.இதை விளையாடுபவர்களுக்கு இந்த இரு விளையாட்டுகளிலும் நல்ல பயிற்சி இருக்க வேண்டும். குத்துச்சண்டை மேடையின் அருகேயே செஸ் பலகை இருக்கும். முதலில் 4 நிமிடங்கள் செஸ் விளையாட வேண்டும்.அப்போது விளையாடுபவர்கள் தங்கள் காதுகளில் ஒலி வாங்கி அணிந்திருப்பார்கள்.
நடுவர்களின் உத்தரவு வந்தவுடன் அடுத்த 3 நிமிடங்கள் குத்துச்சண்டை விளையாட வேண்டும். விளையாடுபவரில் எவர் ஒருவர் முதலில் செஸ்சில் செக் மேட் வைத்து,குத்துச்சண்டையில் தாக்குதல் புள்ளியை எடுக்கிறாரோ அவர் வென்றவராக அறிவிக்கப்படுவார். அய்ரோப்பிய நாடுகளான ஜெர்மன், இங்கிலாந்தில் இவ்விளையாட்டு பிரபலமாக உள்ளது.
போசாபால் (Bossaball)
இதுவும் கைப்பந்து போன்ற ஒரு விளையாட்டுதான். ஆனால், ஒருபுறம் 3 பேர்களே இருப்பார்கள். பெரும்பாலும் கடற்கரையில் விளையாடப்படும் விளையாட்டு இது. இதற்கான களம் வித்தியாசமானது.
களம் முழுதும் மேடு பள்ளமான, ஸ்பிரிங் மெத்தை போன்ற காற்று நிரப்பிய விரிப்பாக இருக்கும்.அதில் நடந்தாலோ குதித்தாலோ துள்ளித் துள்ளி எழுப்பும். நடுவில் சிறிய வட்டமான ஒரு பகுதி மட்டுமே சம தளமாகும். பந்தை எதிர்கொள்ளவும் தாவிப்பிடிக்கவும் அந்த விரிப்பு ஏதுவாக இருக்கும். இந்த விளையாட்டை ஆடுபவருக்கு ஜிம்னாஸ்டிக் தெரிந்திருக்க வேண்டும்.
போட்டிக்கான ஆட்டமாக இல்லாமல் மகிழ்ச்சிக்கான விளையாட்டாக பிரேசில், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், ரொமேனியா உள்ளிட்ட நாடுகளில் ஆடப்படுகிறது.
//