கோ கோ
இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் முதன்முதலில் கோ கோ விளையாட்டு விளையாடப்பட்டது. முறையற்ற விதிகளுடன் விளையாடிய கோ கோ விளையாட்டிற்கு பூனாவிலுள்ள டெக்கான் ஜிம்கானா கிளப் 1935இல் விதிமுறைகளுடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டது. பின்பு, சிறுசிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அகில இந்திய கோ கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் 1959-_60இல் ஏற்படுத்தப்பட்டது. பெண்களுக்கான போட்டிகள் 1960-_61இல் முதன்முதலில் இடம்பெற்றது. 1982இல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஒரு பிரிவாகச் சேர்க்கப்பட்டது. 1989இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றானது.
ஒரு அணியில் 12 வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் 9 வீரர்கள் மட்டுமே போட்டியில் களம் இறங்க முடியும். இரண்டு ஆட்டங்களைக் கொண்ட இந்தப் போட்டி ஓடுவது, தொடுவது என்ற இரு நிலைகளில் ஒவ்வொன்றும் 9 நிமிடங்கள் கொண்டது.
களத்தில் உள்ள 9 பேரையும் தொட்டு வெளியேறச் (Out) செய்வதே ஆட்டக்காரரின் நோக்கமாகும்.
ஓர் அணியின் வீரர்கள் ஒரே வரிசையில் அடுத்தடுத்தவர்கள் எதிர்த்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர்.
அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரைத் துரத்தித் தொட்டு வெளியேற்றுவதாகும். அமர்ந்திருப்பவர் எழுந்து ஒரே திசையில்தான் ஓட வேண்டும். குறுக்காகவும் ஓடக் கூடாது. எதிரணியினர் குறுக்கே ஓடலாம்.
துரத்துபவர் வரிசையின் கடைசிவரை ஓடிய பின்பே மற்ற திசையில் ஓட முடியும். துரத்தும் வேலையை, தனக்கு முதுகுகாட்டி அமர்ந்துள்ளவரின் முதுகைத் தொட்டு கோ என்ற ஒலி எழுப்பி மாற்றி விடலாம். எந்த அணியினர் குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.
//
//