பூச்சி புழுக்களைச் சாப்பிடும் ஆடு மர்கூர் (MARKHOR)
மர்கூர் என்றழைக்கப்படும் இந்த ஆடு பாகிஸ்தான் நாட்டின் தேசிய விலங்காகும். ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதிகள், வடக்கு பாகிஸ்தான், பலுசிஸ்தான், வடக்கு கைபர் பக்துன்க்வா மற்றும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளின் சில இடங்களில் காணப்படுகிறது.
600 மீட்டர் முதல் 3600 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் மர்கூர் ஆடு, 32 கிலோவிலிருந்து 110 கிலோ வரை எடை உடையதாக இருக்கும்.
ஓக் மற்றும் பைன் மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதிகளில் வசிக்கும் இவை காலையிலும் மாலையிலும் சுறுசுறுப்பாகச் செயல்படக் கூடியவை. 9 ஆடுகள் வரை சேர்ந்து கூட்டமாக இருப்பினும் வயது முதிர்ந்தவை பெரும்பாலும் தனித்தே இருக்கின்றன.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த திராவிட நாகரிக மக்களுடன் தொடர்புடைய விலங்காக இது கருதப்படுகிறது. ஹரப்பாவில் உள்ள தொல்பொருள் அடையாளங்களில் மர்கூர் ஆடுகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
அனிமலியா (Animalia) இனத்தினுள் போவிடே (Bovidae) குடும்பத்தைச் சார்ந்தவை.
ஆண் ஆடுகளின் உடல் முழுவதும் உரோமம் காணப்பட்டாலும் இதன் கழுத்துப் பகுதியில் மிக அடர்த்தியாக நீண்டு வளர்ந்த உரோமங்கள் காணப்படுகின்றன. பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் வகையில் நீளமாக சுருண்டு வளைந்த கொம்புகள் ஆண் ஆடுகளுக்கு உண்டு.
இந்தக் கொம்புகள் 25 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியவை. பெண் ஆடுகளுக்கு நேர் வடிவிலான இரு சிறிய கொம்புகள் உள்ளன. அழகுப் பொருள்கள் செய்வதற்குக் கொம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஹரப்பாவில் உள்ள சிந்து சமவெளி தொல்பொருள் அடையாளங்களில் காணப்படும் மர்கூர் ஆடு ஓவியம்
ஆடு, மாடு என்றாலே இலை தழைகளைத்தான் சாப்பிடும் என்று நினைத்திருப்பீர்கள். இந்த மர்கூர் ஆடுகள் பூச்சிகளையும் சிறு சிறு புழுக்களையும் சாப்பிடக்கூடியவை. பனி அதிகம் பெய்யும்போது, மலைப் பகுதியில் புல்வெளியே தெரியாத அளவிற்கு பனியால் மூடப்பட்டிருக்கும்.
அப்போது, பூச்சிகளையும் வண்டுகளையும் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும். மனித வளர்ப்பு முறைக்குக் கட்டுப்படாத காட்டு விலங்காக இருப்பினும், மலைப்பகுதியில் வாழும் மக்கள் பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் மர்கூர் ஆடுகளைச் சார்ந்துள்ளனர்.
பனி படர்ந்த மலைப் பகுதிகளில் இருக்கும் இவை, வசந்த காலத்தில் பசுமையான மலையடிவாரங்களை நோக்கி வருகின்றன. அப்போது புல், இலை, தழைகளைச் சாப்பிடும். குளிர்காலத்தில் அடர்ந்த பனிமலைகளை நோக்கிச் செல்கின்றன. இதற்கான காரணம் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லையாம்.
//