இரண்டாம் வகுப்பு மாணவன்
பள்ளிக்கூட மணியடித்தது. முத்து புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டுக்கு ஓடினான். அவன் முகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
வீட்டில் அவன் அப்பா கையில் ஒரு குட்டி ஆட்டுடன் அமர்ந்திருந்தார். ஓடிவந்த முத்து புத்தகப் பையைத் தூக்கிப் போட்டுவிட்டு ஆட்டுக் குட்டியை மகிழ்ச்சியாக தன் அப்பாவிடம் இருந்து வாங்கினான். அவனுடைய அப்பா சிரித்தவாறு, இதுதான்டா உன் தம்பி இனிமே நீதான் இத பத்திரமா பார்த்துக்கணும் என்றார்.
இப்போதெல்லாம் முத்து பள்ளிக்கூட நேரம் போக மீதி நேரமெல்லாம் ஆட்டுக்குட்டியுடன் கொஞ்சுவதையும், விளையாடுவதையும் பொழுதுபோக்காக வைத்து நேரத்தைக் கழித்தான்.
ஆட்டுக்குட்டி துள்ளிக்கொண்டு அவனை முட்டுவதும் அவன் அந்த ஆட்டை விரட்டிப் பிடிப்பதுமாக ஒருவரை ஒருவர் பிரியாமல் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
முத்து அவன் தம்பிக்கு இலை தழைகளைப் பறித்துக் கொடுப்பதும், கருவேலங்காயை ஊட்டிவிட்டு அது சாப்பிடும் (அசைப்போடும்) அழகை அருகில் அமர்ந்து பார்த்து ரசிப்பதுமாக இருந்தான்.
ஒரு நாள் அவனும் ஆட்டுக்குட்டியும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு நாய் ஆட்டுக்குட்டியைக் கடித்து விட்டது. முத்து ஓ.. என்று அழுதுகொண்டே அப்பா அப்பா… இங்க விரைவாக வாங்க என்றான். ஆட்டுக்குட்டி வலியில் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிப்போய், ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு ஓடினர். கூடவே முத்துவும் சென்றான்.
மருத்துவர் ஆட்டுக்குட்டிக்கு மருந்து வைத்துக் கட்டுப்போட்டுவிட்டார். அழுதுகொண்டிருந்த முத்துவிடம், ஆட்டுக்குட்டிக்கு ஒன்றும் ஆகாது இன்னும் மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறினார். ஆட்டுக்குட்டி உடல்நிலை சரியாகி மீண்டும் விளையாடத் தொடங்கியது.
ஒரு வருடம் கழிந்தது..
முத்துவும் வளர்ந்தான். ஆட்டுக்குட்டியும் நன்றாக வளர்ந்தது. இப்பொழுது ஆட்டுக்குட்டி என்று கூற முடியாது. ஆட்டுக் கடா எனதான் கூறமுடியும்.
ஒரு நாள் முத்து, பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வரும்பொழுது அவனுடைய மாமா ஊரிலிருந்து வந்திருந்தார். அம்மாவும் அப்பாவும் மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தனர். வருகின்ற ஆடி 18 அன்று கோவிலுக்குப் போய்வரலாம் என்றார் மாமா. அப்பொழுது முத்துக்கு ஒன்றும் புரியவில்லை. முத்து அப்பாவிடம் சென்று, அப்பா அப்பா நம்ப எங்க போறோம் என்று கேட்டான்.
அவன் அப்பா, பாண்டி கோவில் திருவிழாவுக்குப் போகிறோம். அங்கே உனக்கு நிறைய விளையாட்டுப் பொருள்களை வாங்கித் தரப் போகிறோம் என்றார். முத்து தம்பியக் கூட்டிட்டுப் போலாம்பா என்றான். உடனே அப்பா, கடவுளுக்குக் காணிக்கை கொடுக்க தம்பி இல்லாமலா என்று சிரித்தார்.
ஆடி 18 அன்று வீட்டில் அனைவரும் பாண்டி கோவிலுக்குச் சென்றனர். கோவிலுக்கு வந்தவுடன் அப்பாவிடம் முத்து விளையாட்டுப் பொருள்களை வாங்கித் தரும்படிக் கேட்டான். உடனே அவங்க அப்பா நண்பரை அழைத்துப் பணம் கொடுத்து, இவன் கேட்கிற பொருளை வாங்கிக் கொடுங்கள் என்று அனுப்பி வைத்தார்.
அனைவரும் பலிபீடத்தை நோக்கிச் சென்றனர். கடவுளை வணங்கிவிட்டு மஞ்சள் நீரை ஆட்டுக்கடா மேல் தெளித்தனர். அப்பொழுது ஆடு தலையைக் குலுக்கியது. கடவுள் உத்தரவு கொடுத்தார் என்று நம்பிய பூசாரி அருவாளைத் தூக்கி ஓங்கி ஒரே வெட்டு வெட்டினார். அந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக விளையாட்டுப் பொருள்களை வாங்கி வந்து கொண்டிருந்த முத்து அதைப் பார்த்துத் திகைத்து நின்றான்.
உடனே விளையாட்டுப் பொருள்களைத் தூக்கி எறிந்துவிட்டு, துடித்துக் கொண்டிருந்த கடாவைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுதான். எல்லோரும் சமாதானம் கூறிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று எல்லோரையும் தள்ளிவிட்டு ஓடத் தொடங்கினான். ஓடிய அவனை விரட்டிப் பிடித்தனர். எதுக்கு முத்து ஓடுகிறாய் என அவன் அப்பா கேட்டார். அதற்கு முத்து, பிரியத்துடன் என்னுடன் இருந்த தம்பியையே (ஆடு) வெட்டிவிட்டீர்கள். நாளை இதுபோல கடவுளுக்குக் காணிக்கை என்று சொல்லி என்னையும் வெட்டிவிட்டால்… என்று கூறிக்கொண்டே ஓடிவிட்டான்.
ஓடிக் கொண்டிருந்த அவனைப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரும் உறவினர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்போய் திகைத்து நின்றனர்.
– இ.ப.இனநலம்,
9ஆம் வகுப்பு, பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஜெயங்கொண்டம்.
//