பிரபஞ்ச ரகசியம் – 4
மனிதர்கள் வாழப்போகும் கோள்
சூரியனிலிருந்து புறப்படும் காந்தப் புயல் அனைத்து கோள்களிலும் செல்லும் காட்சி
– சரவணா இராஜேந்திரன்
கடந்த தொடரில் நாம் பனிக்கட்டியால் ஆன உலகம் யுரோப்பாவைப் பற்றிப் படித்திருந்தோம், இப்போது மனிதர்கள் வாழப்போகும் செவ்வாய் பற்றிப் பார்க்கலாம். அதற்கு முன்பு சூரியன் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். சூரியன் ஒரு நட்சத்திரம், அதன் இயக்கம் ஹைட்ரஜன் அணுக்களின் பிளவால் இயங்கிக்கொண்டு இருக்கிறது.
சூரியனில் இருந்து நமக்குத் தேவையான ஒளியாற்றலை எப்போதும் நாம் பெற்றுக்கொண்டு இருக்கிறோம், ஆனால் உயிரினம் வாழத்தேவையான இதர ஆக்ஸிஜன் மற்றும் தாது உப்புகள் எங்கிருந்து கிடைக்கின்றன? இதுவும் சூரியனில் இருந்துதான்.
எப்படி பருந்து பகல் முழுவதும் வட்டமடித்து வேட்டையாடி மாலையில் தனது குஞ்சிற்கு இரைகொண்டு சென்று கொடுக்கிறதோ அதே போல் சூரியனும் நீண்ட இடைவெளிகள் விட்டு கோள்களுக்குச் சில கனிமப் பொருட்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறது, இந்தக் கனிமப் பொருட்கள் கோள்களில் வேதியியல் வினைகளுக்கு உட்படும்போது தாது உப்புகள் உருவாகிறது.
செவ்வாய் கோளின் தரைப்பகுதியில் நுழையும் கியூரியாசிட்டி
இந்தத் தாது உப்புகள்தான் கோள்களில் உயிர்வாழ முக்கியமான ஒன்றாக விளங்குகிறது, காந்தங்களில் வடதுருவம் தென் துருவம் பற்றி நமக்குத் தெரிந்தது இரண்டும் ஒட்டாது, சூரியன் முழுவதுமே கோடிக்கணக்கான வோல்ட் ஆற்றல் கொண்ட மின்சாரம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த மின்னாற்றல்கள் சில நேரம் ஓரிடத்தில் சேரும் போது மிகுந்த பலத்துடன் ஒன்றை ஒன்று தள்ள அங்கு சூரியக் கரும்புள்ளிகள் உருவாகிறது, இந்தச் சூரியக் கரும்புள்ளிகள் என்பது நமக்குப் புள்ளிகளாகத் தெரியலாம்.
ஆனால், இந்தப் புள்ளிகள் ஒவ்வொன்றும் சுமார் 1000 பூமிகளைத் தங்களுக்குள் அடக்கிவிடும் அளவு பெரியதாக இருக்கும். இந்தக் கருந்துளைகளுக்குள் ஏற்படும் காந்தக் கற்றைகள் வெளிக்கிளம்பும் போது வேறு ஒரு துளையில் இருந்து வெளியாகும் காந்தக் கற்றைகள் எதிர் எதிர் துருவங்களாக மாறி விண்வெளியில் பல லட்சம் கிலோமீட்டர் தூரம் வீசப்படும். இது காந்தப்புயல் என்றழைக்கப்படுகிறது. அன்றாடம் நடைபெறும் இந்த நிகழ்வு சில வேளைகளில் மிகவும் அதிக சக்தியுடன் வெளிப்படும்.
அப்போது ஏற்படும் காந்தப்புயல் சூரிய மண்டலத்தின் எல்லையை விட்டு வெளியேறும் அளவிற்கு வலிமையாக இருக்கும். இந்தக் காந்தப்புயல்கள்தான் கோள்களில் உள்ள பொருட்களுடன் வினைபுரிந்து உயிரினத்திற்குத் தேவையான தாது உப்புகளைத் தருகிறது. இதனால்தான் அனைத்துக் கோள்கள் மற்றும் துணைக்கோள்களில் ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்கள் அவற்றின் தரைத் தளத்தில் தாது உப்புகளை உருவாக்குகிறது. இதனடிப்படையில் மனிதர்கள் அதிக வெப்பமில்லாத தூரக்கோள்களில் பாதுகாப்பான முறையில் வாழலாம்.
ஆனால் தங்கவளையப் பகுதியில் உள்ள இரண்டு கோள்களான பூமியில் மனிதர்கள் வாழ்கின்றனர். அப்படி என்றால் செவ்வாயிலும் மனிதர்கள் வாழமுடியுமே? செவ்வாயைப்பற்றி நாம் விவரமாக அறிந்து கொள்வோம் செவ்வாய்(Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும்.
சூரிய காந்தப் புள்ளிகள்
இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் அதிகப்படியாக காணப்படும் இரும்பு ஆக்ஸைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் (The red plant) என்ற பெயர் ஏற்பட்டது. இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் பள்ளங்களையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது.
செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே பெரிய மலையான ஒலிம்பஸ் இந்தக் கோளில் உள்ளது. இந்த மலையை செவ்வாய் பூமியின் அருகில் வரும்போது சாதாரண தொலைநோக்கி கொண்டுகூடப் பார்க்க முடியும்.
மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன. 1965ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினார் என்ற செயற்கைக்கோள் செல்லும் வரை செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர் இருக்கும் என நம்பினர். செவ்வாய் பூமியைவிட அரைப்பங்கு அளவு கொண்ட கோள் ஆகும்.
செவ்வாயின் முழுத் தோற்றம்
அதாவது அரைப்பூமி அளவு. நமது நிலவைவிட இரண்டு மடங்கு பெரியது. இதன் மேற்பரப்பில் சிலிகன், இரும்பு ஆக்சைடு மற்றும் காரீயம் போன்ற உலோகங்கள் காணப்படுகின்றன. பினிக்ஸ் என்ற ஆய்வுக்களம் முதன்முதலாக செவ்வாயில் இறங்கி ஆய்வு செய்தது. அது கொடுத்த தகவலில் செவ்வாயின் மேற்பரப்பில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களும் காணப்படுகிறது. இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை.
நமது புவியைப்போலவே மிகவும் அழகான உயிரோட்டமுள்ள கோளாக சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் இருந்தது. செவ்வாயில் காணப்படும் படிமங்கள் இதை உறுதி செய்கின்றன. செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட நீர் வற்றி வறண்ட நீள்வடிவ நிலங்கள் சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன.
நிலத்தடி நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின.
பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய கால்வாய் வலையமைப்புகளின் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
செவ்வாயில் வறண்ட ஆற்றுப்படுகை
வறண்டு சிவந்த பாலைவனம் போல இப்போது காட்சியளிக்கும் செவ்வாய் கிரகம், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலும், பசுமையும் கலந்த பிரதேசமாக இருந்திருக்கலாம்! செவ்வாய் கோள் உயிரினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பூமிக்கு வந்திருக்கக்கூடும்! மனிதர்களாக இல்லையென்றாலும், கிருமிகளின் வடிவத்திலாவது பூமிக்கு வந்திருக்கக் கூடும்! இவை வெறும் அறிவியல் கதைக்கான கற்பனைகள் அல்ல.
இவற்றை நம்புவதற்கு வலுவான அடிப்படை ஆதாரங்கள் உள்ளன என்கிறது சமீபத்திய நாசாவின் ஆய்வு முடிவு. 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் இருந்து பூமியில் வந்து விழுந்த விண்கல், பாறையாக கடந்த 1996ஆம் ஆண்டில் அன்டார்டிக் கடல் பகுதியில் அடையாளம் காணப்பட்டது. அலென் ஹில்ஸ் 84001 என்று இதற்கு விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.
அப்போது, அந்தப் பாறையின் மீது உயிரித்தன்மை கொண்ட படிமத் துகள்கள் இருந்தன. அவை செவ்வாயில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நாசா கூறியது. ஆனால், விண்ணில் இருந்து பூமியில் மோதியதாலும், அன்டார்டிக் கடலின் அசுத்தங்கள், பூஞ்சைகள் பல்லாண்டுகளாக பாறையில் படிந்ததால் உருவானவையே ஃபாஸில் படிமங்களாக தோற்றமளிக்கின்றன என்று கூறி அப்போது பெரும்பாலான விஞ்ஞானிகள் நாசாவின் கருத்தை நிராகரித்தார்கள்.
ஆனால், அந்தப் பாறையில் படிந்துள்ளவை செவ்வாய் கோளிலிருந்து வந்தவைதான் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாக இப்போது நாசா விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவிக்கிறார்கள். இதைத் தங்களால் நிரூபிக்க முடியும் என்றும் கூறுகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அதிநுட்பமான மைக்ராஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது நிரூபிக்க முடியாததை தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இன்று நாசா செய்துள்ளது.
நாசாவில், கேத்தி தாமஸ், -கெர்டா ஆகியோர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த செவ்வாய் பாறையில் உள்ள படிமங்களை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளது. அதில் கார்பொனைட் மற்றும் மக்னீசிய உலோகப் படிகங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். பாறையில் பரவலாகக் காணப்படும் உலோகப் படிமங்கள் வழக்கத்துக்கு மாறான ரசாயன மற்றும் இயற்பியல் தன்மை கொண்டவை.
அவற்றின் அமைப்புகள் புவியியல் சார்ந்து இல்லாமல், உயிரி தன்மையை ஒத்துள்ளது. அதுமட்டுமின்றி பூமியில் உள்ள காந்தக் கிருமிகளின் (Magnetic bacteria) சாயல் அவற்றில் வெகுவாக உள்ளது. இவை நிச்சயம் 13 ஆயிரம் ஆண்டுகளில் உருவானவை அல்ல. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கும், செவ்வாய் கோளுக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்கவே இவை ஆதாரமாக உள்ளன என்ற முடிவிற்கு நாசா ஆய்வுக் குழு வந்துள்ளது. இதுகுறித்து விரைவில் நாசா தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளது.
செவ்வாய் பற்றிய பல்வேறு ஊகங்களைப் பற்றிய சந்தேகங்களைத் தெளிவு செய்ய அமெரிக்காவின் நாசா ஒரு டன் எடையுள்ள கியூரியாசிட்டி என்னும் ஆய்வுக்கலத்தை உருவாக்கியது. இந்த ஆய்வுக்கலமானது 250 மில்லியன் அமெரிக்க டாலர் (15000 கோடி) செலவில் தயாரிக்கப்பட்டதாகும்.
ஒரு காரின் அளவிலான இக்கலம், 2011 நவம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டது. 8 மாத பயணத்திற்குப் பின் 2012 ஆகத்து மாதம் 6ஆம் நாள் திங்கட்கிழமை அதிகாலை 5.33 மணிக்கு செவ்வாயின் தரையில் கியூரியாசிட்டி கலம் இறங்கியது.
இக்கலம் செவ்வாய் வான்பரப்பை சுமார் 21,240 கிலோமீட்டர் வேகத்தில் அடைந்தது. பின்னர் பாராசூட்டின் உதவியுடன் வேகம் குறைக்கப்பட்டதுடன், செவ்வாய் தரையில் இக்கலம் வேகமாக மோதுவதைத் தவிர்ப்பதற்காக ஸ்கை கிரேன் எனும் ஏணியும் முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலம் தரையிறங்கியவுடன் செவ்வாய் தரையில் இக்கலத்தின் சக்கரங்கள் இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படமொன்றை இக்கலத்தின் மேல் பொருத்தப்பட்டிருந்த காமெராவொன்று உடனடியாக நாசாவுக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தால் அதைக் கண்டுபிடிக்கக்கூடிய அதிநவீன கருவிகள் இந்த ஆய்வுக்கூடக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
அங்கு அது புகைப்படங்களை எடுத்து அனுப்பியும், பல ஆய்வுகளை மேற்கொண்டும் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வருகிறது. அங்குள்ள பாறையை வெட்டி எடுத்து புகைப்படம் எடுத்து அனுப்பியது. தற்போது, அங்கு கனிம வளங்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மணலை கியூரியாசிட்டி ஆய்வகத்தில் உள்ள அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப் மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்தது. அதில், பளிங்குக் கற்படிவங்கள் உள்ளன. இது ஹவாயில் எரிமலைப் பகுதியில் இருப்பது போன்று உள்ளது. அதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது.
செவ்வாயில் தற்போது மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. ஆகையால் உலக நாடுகள் அனைத்தும், செவ்வாயை ஆய்வு செய்ய பல திட்டங்களைத் தீட்டத் தொடங்கிவிட்டன. இதில் இந்தியாவும் தனது பங்கை நிறைவேற்றத் தயாராக உள்ளது.சிகப்புக் கிரகமென அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள இந்தியா விண்கலத்தைச் செலுத்தவுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் விண்கலம் (அக்டோபர் 2013) விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் ஆகும். இந்த விண்கலம் சுமார் 1,340 கிலோ எடை கொண்டது. அதில் எடுத்துச் செல்லப்படும் 5 விஞ்ஞான ஆய்வுக் கருவிகளின் எடை 15 கிலோ ஆகும்.
அக்டோபர் மாதம் ஏவப்படும் இந்த விண்கலம் சுமார் 10 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்து ஜூலை அல்லது ஆகஸ்ட் 2014இல் செவ்வாய் கோளின் மேற்பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாயில் வறண்டு போன நீரோடைகள் பற்றி நாம் படித்தோம். சனிக்கோளின் நிலவான டைடன் முழுவதுமே நீர்போன்ற திரவத்தால் நிரம்பியுள்ளது. அது எவ்வகையான திரவம் என்பதை நாம் அடுத்த தொடரில் காணலாம்.
//