அறிஞர்களின் வாழ்வில்…
அமைதியான பதில்
வின்ஸ்டன் சர்ச்சில்
லண்டனில் பிரபுக் குடும்பத்தில் 1879ஆம் ஆண்டு பிறந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். போர்வீரர், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என பன்முகப் பரிமாணங்களால் உயர்ந்தவர்.
சர்ச்சிலின் மருமகன் எந்த நேரமும் எதையாவது பேசிக் கொண்டே இருக்கும் இயல்புடையவர். பிரதமர் சர்ச்சில் முக்கியமான வேலையில் இருந்தபோது, உலகிலேயே மிகப் பெரிய ராஜதந்திரி யார்? என்ற கேள்வியை மருமகன் கேட்டார். முசோலினி என்றார் மாமனார்.
வியப்புற்ற மருமகன், என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? நீங்கள் தாழ்ந்தவரா என்றார். அதற்கு சர்ச்சில், தொணத்தொணனு எப்போதும் பேசிக் கொண்டிருந்த அவருடைய மருமகனை சுட்டுக் கொன்றார் முசோலினி. என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று அமைதியாகப் பதில் அளித்தாராம்.
முதல்வன்
பெஞ்சமின் ஃபிராங்களின்
அமெரிக்காவைப் புகழ்மிக்க கண்டமாக மாற்றி அமைத்த பெருமைக்குரியவர்களுள் பெஞ்சமின் ஃபிராங்க ளினும் ஒருவர். இளமைப் பருவத்தில் பெரிய காற்றாடியைப் பறக்கவிட்டு, அதன் நூலைப் பிடித்துக் கொண்டே ஆற்றைக் கடந்து சென்று, அருகில் இருந்து பார்த்தவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியவர்.
அமெரிக்காவின் முதல் சீர்திருத்தவாதி, முதல் அமெரிக்கத் தத்துவஞானி, முதல் அமெரிக்கத் தூதுவர், இக்காலத் தெருவிளக்கின் தந்தை, முதல் அரசியல் கேலிச்சித்திரக்காரர், முதலில் நடமாடும் புத்தகசாலை தொடங்கியவர், 4 முறை வெனிசுல்வேனியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், செய்தித் தபாலை தபால் மூலம் செல்வதை முதன்முதலில் ஏற்படுத்தியவர்,
முதன்முதலில் தெருவைச் சுத்தம் செய்யும் இலாகா தொடங்கியவர், மின்னலுக்கும் மின்சாரத்திற்கும் உள்ள ஒரே தன்மையைக் கண்டுபிடித்தவர், முதல் அமெரிக்க சித்திரக் கவிஞர், வியாபார விளம்பரத்தை முதன்முதலில் செயல்படுத்தியவர், மூக்குக் கண்ணாடியின் தந்தை, ஆங்கில எழுத்துக் கூட்டுமுறையைச் சீர்திருத்தியவர், தீயணைக்கும் இலாகா தொடங்கியவர்,
அமெரிக்க குடியரசுக் கட்சியின் நிறுவனர், தற்கால தபால் அலுவலக முறையினைத் தொடங்கியவர், பிராங்களின் சூட்டடுப்பைக் கண்டுபிடித்தவர், விளம்பரத்தில் முதல் உவமை, உதாரணம் உபயோகித்தவர், நிலத்தை வளமாக்கும் பிளாஸ்டர் ஆப் பாரீசை உபயோகிக்க எடுத்துக்காட்டியவர்,
அசைந்தாடும் நாற்காலி கண்டுபிடித்தவர், தற்கால பல வைத்திய முறையின் தந்தை என பல முதல்களின் சொந்தக்காரராகத் திகழ்கிறார்.
சாதாரண விஷயம்
பெர்னாட்ஷா
தான் எழுதிய எழுத்துகள் பிரசுரமாக வேண்டும் என்பதற்காக அதிகம் கஷ்டப்பட்டவர் பெர்னாட்ஷா. விடாமுயற்சியால் எழுத்துலகில் புகழ் பெற்றார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பெர்னாட்ஷா தேர்வு செய்யப்பட்டார். நோபல் பரிசுக் குழுவினர் நள்ளிரவு நேரம் என்றாலும் பரவாயில்லை என நினைத்து உடனே பெர்னாட்ஷாவுக்குத் தெரிவிக்க விரும்பினர். எனவே, தொலைப்பேசியில் அழைத்தனர். பேசிய ஷா மகிழ்ச்சி அடையவில்லை.
நன்றி தெரிவிக்கவுமில்லை. மாறாக, இந்தச் சாதாரண விசயத்தை எனக்குத் தெரிவிப்பதற்காக என்னுடைய தூக்கத்தைக் கெடுத்திருக்க வேண்டியதில்லை என்றாராம்.
அலெக்சாண்டரின் அழுகை
அலெக்சாண்டர்
மாவீரன் அலெக்சாண்டர் குழந்தைப் பருவத்தில், இந்த உலகில் உள்ள நாடுகளை எல்லாம் என் தந்தையே கைப்பற்றி விட்டார் எனில், நான் எந்த நாட்டை வெற்றி கொள்வது என நினைத்து நினைத்து அழுது கொண்டிருப்பாராம்.
மாவீரனாகிப் பல நாடுகளை வெற்றி பெற்றபின், அய்யோ, எல்லா நாடுகளையும் வென்று இந்தியாவையும் வெற்றி பெற்றபின் எந்த நாட்டை வெல்வது? என்று புலம்புவாராம்.
மௌனத்திற்குக் காரணம்
ஸ்டாலினுடன் குருஷேவ்
சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலினுக்குப் பிறகு தலைவர் பொறுப்புக்கு வந்தவர் குருஷேவ். இவர், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் சபையில் பேசியபோது, மறைந்த மேனாள் அதிபர் ஸ்டாலின் பல தவறுகளைச் செய்துவிட்டார். அதன் காரணமாக சோவியத் நாட்டின் முன்னேற்றங்கள் பல துறைகளில் தடைப்பட்டுள்ளன…. என்று கடுமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்திலிருந்தவர்களுள் ஒருவர், இப்போது ஸ்டாலினைக் கடுமையாகத் தாக்கிப் பேசும் நீங்கள் அவர் தவறு செய்யும்போது அதனைத் தண்டிக்காமல், ஏன் வாய்மூடி அமைதியாக இருந்தீர் என்று எழுதிய காகிதத்தை, பெயரின்றிக் கொடுத்து அனுப்பியிருந்தார்.
எழுதியவர் பெயர் இல்லாமல் இருந்த அந்தக் காகிதத்தைக் காட்டி, இதை அனுப்பியவர் யார்? என்று கோபமாகக் கேட்டார் குருஷேவ். கூட்டத்தினரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டார்.
பின்பு, இந்தத் துண்டுக் காகிதத்தை அனுப்பியவர் என்ன காரணத்திற்காக இப்போது மௌனமாக இருக்கிறாரோ அதே காரணத்திற்காகத்தான் தானும் ஸ்டாலின் காலத்தில் மௌனமாக இருந்ததாகக் கூறினார் குருஷேவ்.
//