அன்பு மடல்
ஆயுத பூசை கொண்டாடினால் அறிவு வளருமா?
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களுக்கு,
எமது அன்பும் வாழ்த்துகளும். பெரியார் பிஞ்சுகளாகிய நீங்கள் நல்ல பகுத்தறிவாளர்களாகவும், தெளிவான சுதந்திர சிந்தனையுள்ளவர்களாகவும் வளர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த அய்சக் நியுட்டன் (இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி) சிறு பையனாக இருந்தபோது கீழே விழுந்த ஆப்பிள் பழத்தை உடனே எடுத்து கடித்துத் தின்னத் தொடங்காமல், இந்த ஆப்பிள் பழம் ஏன் மேலிருந்து கீழ்நோக்கி விழவேண்டும்?
அய்சக் நியுட்டன்
ஏன் மேலே போகவில்லை என்று ஆழமாகச் சிந்தித்ததன் விளைவுதானே, அறிவியலின் மிக முக்கியமான அடிப்படைத் தத்துவ விதியான புவி ஈர்ப்பு சக்தி விதி (Law of gravitation) கண்டுபிடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
அதுபோன்ற அறிவியல் கேள்வியும் விடையும் உங்களில் பலருக்குள் இருந்தும் கிளம்பவேண்டும்!
ஆறறிவு என்பது அனைத்து மக்களுள்ளும் இருப்பதுதானே; அதைத் கண்டறிந்து, மனித சமூகத்திற்கு அளிப்பவர்களாக விஞ்ஞானிகள் _ அறிவியல் மேதைகள் உருவாகிறார்கள்; இதில் நாடு, ஜாதி, மதம், இனம் என்ற பாகுபாடு இல்லையே!
அந்த அய்சக் நியுட்டன் விதி கண்டுபிடித்த பல ஆண்டுகளுக்குப் பின், ஆப்பிள் இன்று உலகின் பலருடைய கைகளிலும் உள்ளதே _ கணினியாக, அய்.பேடாக _ அறிவு எப்படியெல்லாம் வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா?
அதைக் கண்டுபிடித்து, உலகத்தில் போரில்லாத படையெடுப்பாக அந்த ஆப்பிள் (அதுபோல் இப்போது கூகுள் முதலியன எத்தனையோ) உருவாக்கிய கணினி மேதை ஒரு கடவுள் நம்பிக்கையற்ற மாமனிதர்; உழைப்பையும் திறமையையும், உலக மக்கள் விருப்பத்தையும் அறிந்த அதன் உரிமையாளர் _ மறைந்தும் மக்கள் நெஞ்சில் நிறைந்தவராவார்
ஸ்டீவ் ஜாப்ஸ்
Steve Jobs – ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற அமெரிக்கரின் ஆற்றல் போல ஏன் உங்களில் ஒருவர் அல்ல, பலருக்கும் இருக்கக் கூடாது.
இருக்கிறது பிள்ளைகளே, அதை வெளியே துணிவுடன் கொண்டு வர, ஊக்கம் நம் நாட்டில் தரப்படுவதில்லை.
பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் பகுத்தறிவை வளர்க்காத, பாடத்திட்டங்களைச் சொல்லிக் கொடுத்து _ நெட்டுரு மனப்பாடம் செய்து _ கிளிப்பிள்ளைகளைப்போல் உங்களைத் திரும்பத்திரும்ப சொல்லச் சொல்லியோ, எழுதச் சொல்லியோ, செக்குமாடு சுற்றிச் சுற்றி வருவதைப்போல ஆக்கி விடுகின்றனர்.
அதனால் எளிதில் நம் நாட்டில் உங்களுக்குள் உள்ள அறிவியல் ஆற்றலை வெளியே கொண்டு அடையாளப் படுத்தவில்லை.
கற்பனைச் சக்தியும், அறிவியல் அறிவும், தொழில்நுட்பமும் இணைந்துதான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. இல்லையா?
சிந்திக்கச் சிந்திக்க புதுப்புதுக் கருத்துகள் ஊற்றிலிருந்து கிளம்பும் நீர்போல வரவே செய்யும்.
நம் பிள்ளைகளுக்கு அத்தகைய திறமைகளுக்குப் பஞ்சமே இல்லை.
தஞ்சை வல்லத்தில் இயங்கும் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வேகமாக இயங்கும் மோட்டார் சைக்கிள் _ இரு சக்கரத்தில் புதிய உத்திகளை இணைத்து, எரிவாயு சிக்கனம் முதலிய பலவற்றைப் புதிதாக செய்யக்கூடிய அளவு கண்டுபிடித்து, கல்லூரிகளிடையே போட்டியிட்டு, இரண்டாம் பரிசை அதற்காகத் தட்டிக்கொண்டு வந்துள்ளனர்.
அதுபற்றிய விடுதலையில் வந்த செய்தி இதோ படியுங்கள்.
பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் வி.ஜெயச்சந்திரன், ஜி.கேசவன், ஆர்.பிரகதீஸ்வரன், பி.வித்யாசாகர், கே.பாலாஜி மற்றும் ஜெ.பெனிட்டோ கர்வின் ஆகியோர் மூன்று வகையான 50cc மற்றும் 75cc இரு சக்கர வாகனங்களை மேம்படுத்தப்பட்ட இழுவைத்திறன் (Enhanced Pulling Power), குறைவான நீளம் (Short Length), வேகக் கட்டுப்பாடு (Speed Control), எரிபொருள் சிக்கனம் (Fuel Effiency), மின் துவக்கி (Electric Strarter) மற்றும் சென்சார் பாதுகாப்பு (Sensor Safety) ஆகிய குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டு வடிவமைத்து உள்ளனர்.
இந்தியாவிலுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஒருங்கிணைந்து நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தாங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைத்த இரு சக்கர வாகனங்களுடன் போட்டி நடுவர்களின் பல்வேறு கடுமையான தர நிர்ணயச் சோதனைகள் மற்றும் நிபந்தனைகளான உறுதிப்படுத்துதல் (Declaration), இரு சக்கர வாகனங்கள் பற்றிய கட்டுரை வாசித்தளித்தல்(Paper Presentation), தொழில்நுட்ப அறிக்கை சமர்ப்பித்தல்(Report Submission),
வாகன சோதனை (Vehicle Inspection), வேக மாற்ற விகித சோதனை (Acceleration Test), நிறுத்தச் சோதனை (Brake Test), எளிதில் சுழலும் திறன் ((Maneuverability Test) மற்றும் சோதனை ஓட்டம் (Race), ஆகியவற்றை வெற்றிகரமாக கடந்து போட்டியில் இரண்டாம் பரிசு வென்று தேசிய அளவில் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும் இக்கல்லூரியின் இரண்டாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர் எம்.லோகேஷ் 50cc இரு சக்கர வாகன ஓட்டப் போட்டியில் (Bike Race), கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.
நமது பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் (மெக்கானிக்) துறையின் மாணவக் கண்மணிகள், பேராசிரியர்கள், துறைத்தலைவர், துணைமுதல்வர், முதல்வர் ஆகியவர்களின் உற்சாகம், தூண்டுதல் காரணமாக இப்படி பரிசுபெறும் அளவுக்கு பகுத்தறிவு மேன்மையை _ தொழில்நுட்ப அறிவைக் காட்டியுள்ளார்கள்!
இதுபோன்று பல கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி _ பெரியார் அறிவியல் கிளப் (Periyar Science Club) என்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் இத்தகைய மாணவர்கள் பாராட்டப்படுகிறார்கள்.
நீங்களும் அப்படி வரவேண்டும். வெறும் ஆயுத பூசை கொண்டாடிக் கொண்டிருந்தால் அறிவு வளருமா? சிந்தியுங்கள் குழந்தைகளே!
அன்புடன் உங்கள் தாத்தா
கி.வீரமணி.