கல்வி கடவுள் தருவாரா?

|
|
கடவுள் ஒரு சுரண்டும் கருவி; ஆதிக்கவாதிகளின் ஆயுதம்; அறியாமை அரும்பும் ஆதாரம்;மூடநம்பிக்கைகளின் முனைவிடம் என்பன இன்றளவும் உறுதி செய்யப்படுகின்றன.
மக்களை மடையராகவே வைத்திருந்தால் சுயநல, சுரண்டும், ஆதிக்கக் கூட்டங்களுக்குச் சிக்கல் ஏற்படாது என்பதால் மக்களை மடமையில் ஆழ்த்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
ஊடகங்கள் இவற்றிற்குப் பெருந்துணை செய்வதோடு, தங்களையும் வளப்படுத்திக் கொள்கின்றன. வருவாய் நோக்கில் மனித எதிர் செயலை மனச்சான்றின்றிச் செய்கின்றன.
மக்களுக்கு விழிப்பூட்டி, அறிவும் தெளிவும் உண்டாக்க வேண்டியதே ஊடகங்களின் தலையாய கடமை என்ற தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, முட்டாளாக்கும் முயற்சியை முனைந்து செய்கின்றன.
வணிகர் கூட்டங்கள் இதற்கு வலுச் சேர்த்து வளம் சேர்க்கின்றன. அறிவியல் கண்டு பிடிப்புகளும் கருவிகளும் அறியாமையை அகற்றும் என்ற உண்மைக்கு மாறாய், சமூக அக்கறையில்லா அயோக்கியர் களால் இவை மக்களை மதி மழுங்கச் செய்யவே பயன்படுத்தப்படுகின்றன.
தனக்குப் பயன்படும் கருவியை மதித்தல் என்ற நன்றியின் பாற்பட்ட உணர்வை, கடவுள் உணர்வாக மாற்றி கண்மூடிச் செயல்படச் செய்கின்றனர்.கருவியைச் செப்பம் செய்வதற்கு மாறாய் சிலையாக மாற்றுகின்றனர்.
கருவிகளுக்குப் படையல் போட்டால் கருவிகள் பயனளித்துவிடாது. அதைப் பயன்படுத்தும் ஆற்றலிலும், திறத்திலும், நுட்பத்திலுமே அதன் பயன்பாடும் வெற்றியும் அமைகின்றன.
பயிற்சியும் முயற்சியும் செய்வதற்கு மாறாக படையலும் பட்டையும் போடுதல் பகுத்தறிவிற்கு ஏற்றதா? அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்திலும் அறியாமையில் உழலுவது அழகா? இளந்தலைமுறையின் சிந்தனையிலும் மூடத்தனங்களை நுழைப்பது முறையா?
பிஞ்சு உள்ளத்தில் மூடநஞ்சைச் செலுத்திச் சீரழிக்கலாமா? கல்வியை சரஸ்வதி கொடுக்கிறாள் என்றால், நம்பாட்டனுக்கும் பாட்டிக்கும் ஏன் கொடுக்கவில்லை? ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆரியப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஏன் கொடுத்தாள்? நமக்கேன் மறுத்தாள்?
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், கல்வி வள்ளல் காமராசரும் முயன்று உழைத்ததன் விளைவல்லவோ நாம் பெரும் கல்வி. கல்வி கிடைக்கக் கதவு திறந்த இவர்களையும், கற்பிக்கும் ஆசிரியர்களையும் மறந்துவிட்டு, கற்பனைக் கடவுளைக் காரணமாக்கி, காலத்தையும் பொருளையும் வீணடித்து பூசையும் படையலும் போடுவது சரியா? அறிவுக்கு அழகா?
விசயதசமியில் சேர்த்தால் படிப்பு வரும், வித்தை வரும் என்றால் மற்ற நாளில் பள்ளியில் சேர்ந்தவர்கள் நன்றாகப் படிப்பது எப்படி? விசயதசமியில் சேர்க்கப்பட்ட எல்லோரும் படிப்பில் சிறந்து விளங்கவில்லையே. பலர் பாதியில் படிப்பை விடுகின்றனர்;
பலர் படிப்பில் மிகப் பின்தங்கியுள்ளனரே! சரஸ்வதியும் விசயதசமியும் இல்லாத அயல்நாட்டார்தானே கல்வியில் நம்மைவிடச் சிறந்து விளங்குகின்றனர்? கல்வியைக் கடவுள் கொடுத்தால் நம் நாடல்லவா உயர்ந்து நிற்க வேண்டும்? பிஞ்சுகளே நெஞ்சில் பதியுங்கள். கல்வி, கற்பதால் வருவது; கடவுளால் வருவது அல்ல!