வால் நட்சத்திரம் பார்க்கலாம்
வருது… வருது… ஏ… வருது… வருது… என்று செய்தித்தாளைப் படித்தபடியே பாடிக் கொண்டிருந்தான் புரு. என்ன வருது.. வருதுன்னு… உனக்கு எதுவும் தேர்வு ரிசல்ட் வருதா? என்று கிண்டலடித்தான் சிபி.
இல்லடா வாலு…. வால்நட்சத்திரம் வருது! என்று செய்தித்தாளை மூடிவைத்துவிட்டு, சிபியைப் பார்த்தபடி சொன்னான் புரு.
“வால் நட்சத்திரமா? you mean ‘Comet’?” சிபியின் இந்தக் கேள்விக்கு,
ஆமாண்டா… இங்கிலீஷ்காரன் பேரா! Comet தான் வருது… நானும் எங்க பள்ளியில கேள்விப்பட்டேன். அதுவும் இந்த நூற்றாண்டின் வால்நட்சத்திரம்னு சிறப்பா வேற சொல்றாங்க.. என்றாள் தமிழீழம். “You mean Comet of the Century” என்று மீண்டும் இங்கிலீசில் பேசி வம்பிழுத்தான் சிபி.
விளையாட்டாக அடிப்பது போல் தமிழீழம் கையோங்க, அவர்களை இழுத்துச் சமாதானப்படுத்தினான் புருனோ. ஆமா… இந்த நூற்றாண்டின் வால்நட்சத்திரம் அல்லது வால்வெள்ளி அப்படின்னு பெருமையோட தான் சொல்றாங்க…. ஏன்னா அது இந்த நூற்றாண்டில் தான் முதல்முறையா கண்டுபிடிக்கப் பட்டிருக்கு.. அதுவும் போன ஆண்டுதான் உறுதிசெய்யப்பட்டது என்று விளக்கினான் புரு.
போன ஆண்டுன்னா 2012-லயா? என்றாள் குறிஞ்சி. ம்ம்ம்.. 2012 செப்டம்பர் மாதத்தின் பின் பகுதியில் (16_30) கண்டுபடிக்கப்பட்ட முதல் வால்வெள்ளி. அதனால்தான் இதுக்குப் பேரு C/2012 S1″ என்று புரு சொன்னதும் குறுக்கிட்டாள் தமிழீழம்.
என்ன புரு… எங்க பள்ளியில வேற பெயர் சொன்னாங்களே… ம்ம்ம்… அய்சான் (ISON) அப்படின்னு சொன்னாங்க என்று சந்தேகத்தைக் கிளப்பினாள்.
ஆனா நீயென்னமோ CZ 12-னு ஜாக்கிசான் படப் பெயர் மாதிரி ஏதோ சொல்ற என்று தன் துடுக்குத்தனத்தைக் காட்டினான் சிபி. ஆமா… அந்த பெரிய வாலு ஜாக்கிசான் படம் தானே இந்த சின்ன வாலுக்குத் தெரியும். அது CZ 12 இல்லை; C/2012 S1″ என்றான் புரு.
அப்படின்னா? என்று வினாக்குறியோடு புருனோவைப் பார்த்தவர்களுக்குப் பதில், பவானியிடம் இருந்து வந்தது.
அதாவது சிங்கிறது காலமுறையற்ற வால்வெள்ளி; Non – periodic அப்படிங்கிறதைக் குறிக்கும். அடுத்து 2012 என்பது கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும். S1 செப்டம்பர் இரண்டாம் பாதியில் கண்டு பிடிக்கப்பட்ட முதல் வால்வெள்ளி என்பதையும் குறிக்கும் என்று விளக்கமளித்தாள்.
“அப்ப அய்சான் (ISON)ங்கிறது?” என்று கேள்வி கேட்ட சூர்யா, பதிலை நோக்கினான் அனைவரிடமிருந்தும்! “ISON – International Scientific Optical Network என்ற அமைப்பினால் கண்டுபிடிக்கப்பட்டதால் அதன் சுருக்கமான ISON அப்படின்னு அழைக்கப்படுது… இதைக் கண்டுபிடிச்சது விடாலி நெவ்ஸ்கி, ஆர்ட்டியோம் நோவிசோனோக் அப்படிங்கிற ரெண்டு பேர்.
சரி, அதென்ன காலமுறையற்ற வால் வெள்ளி? என்று அடுத்த கேள்வியை எழுப்பினாள் தமிழீழம்.
அய்சானின் பாதை
குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் மீண்டும் வரும் வால் நட்சத்திரங்களை Periodic Comets சொல்லுவாங்க… ஹேலி வால் நட்சத்திரம்னு ஒன்று இருக்கு. அது 75_-76 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிப் பக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போகும். ஆனா, சில வால் நட்சத்திரங்கள் எப்போ வரும்னு தெரியாது.
அல்லது அதன் கால அளவு மிக நீண்ட காலமா இருந்தால் நம்முடைய அறிவில் இன்னும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். ஹாலி வால் நட்சத்திரம் கடந்த சில நூற்றாண்டுகளா தொடர்ந்து வந்து வந்து போய்க்கிட்டிருக்கு!
அதென்ன வால்நட்சத்திரம்? என்று அதிரடிக் கேள்வி வீசினான் சிபி. அப்படிப்போடு… அதானே! இந்தக் கேள்வி தானே முதல்ல வந்திருக்கணும். ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லியிருக்கேன், இருந்தாலும் பரவாயில்லை. திரும்ப தெரிஞ்சு தெளிஞ்சுக்கலாமே!
நட்சத்திரம்னு அதைச் சொல்ல முடியாது. ஏன்னா நட்சத்திரம்ங்கிறது சூரியன் மாதிரி இல்லையா? தனித்து, ஒளிதரக்கூடிய மிகப் பெரிய விண்பொருளைத்தான் நட்சத்திரம்னு சொல்றோம். ஆனால், வால் மாதிரி நீளமான பகுதியோட சுத்தி வர்றதுனால நம்ம வழக்கத்தில வால்நட்சத்திரம்னு சொல்றோம்.
உடைந்து, சிதைந்த விண் பொருள்களின் தொகுப்பா, தூசு துப்பட்டையோட விண்வெளியைச் சுற்றிவரும் கூட்டத்தைத்தான் வால் வெள்ளின்னு பொதுவா சொல்றோம். இந்த வால்வெள்ளியோட தலைப்பகுதி அல்லது கருப் பகுதிங்கிறது (Nucleus) குளிர்ந்த வாயுக்கள் மற்றும் நீர் போன்ற பகுதிகளா இருக்கும்.
அதைச் சுற்றி வரும் பொருட்கள் எல்லாமே அதனோட ஈர்ப்பில் வரும் தூசு போன்ற பகுதிகள்தான் என்று சொன்னபடி இணையத்தில் சில வால்வெள்ளிகளின் படங்களைக் காட்டினான் புருனோ!
ஹேலி வால் வெள்ளியின் கரு
இது எல்லாமே இப்படித்தான் மங்கலா இருக்கு…. இதில தலைப்பகுதியில என்ன இருக்குன்னு தெளிவாகூட பார்க்க முடியலையே… அப்புறம் எப்படி இதுதான் இருக்குன்னு சொல்ல முடியுது! என்ற நியாயமான கேள்வியைத் தொடுத்தாள் குறிஞ்சி.
அய்சாக் வால்வெள்ளி
நீ கேட்கிறது சரிதான். ஆனால் போன முறை 1986-ல ஹேலி வால்வெள்ளி வந்தப்போ, அதன் பக்கத்திலேயே போய் ஒரு படம் எடுத்திருக்கு நம்ம விண்கலம் ஒன்னு! சுருக்கமா சொன்னா, நம்ம வீட்டுக்கு வர்ற விருந்தாளி மாதிரிதான் இந்த வால்வெள்ளிகள்! என்று சொன்னான் புருனோ.
சரி, விருந்தாளி வந்தால் வரவேற்றிடுவோம்.. ஆனா, இப்போ வரப்போற அய்சான் எங்கிருந்து வர்றாரு? என்ற சூர்யாவின் கேள்விக்கு நம்ம சூரியக் குடும்பத்துக்குப் பக்கத்தில இருக்கிற ஊர்ட் மேகக் கூட்டத்தில இருந்து வர்றாரு நம்ம அய்சான்! என்று பதில் தந்த புருனோ மேலும் தொடர்ந்தான்.
அய்சான் உருவானது நம்ம சூரியக் குடும்பம் உருவான காலத்தை ஒட்டி அப்படிங்கிறதால, அதில இருந்து உலகம் தோன்றியது பற்றிய தகவல்கள் ஏதாவது கிடைக்கும்னு நம்ம ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க…
அப்படின்னா ஆராய்ச்சிகள் தீவிரமா இருக்கும் என்ற குறிஞ்சியின் கணிப்பை ஒத்துக் கொண்ட புருனோ, அதிலயும் இன்னொரு சிறப்பு என்னன்னா.. இது வரை வந்த வால்வெள்ளியெல்லாம் சூரியனைச் சுத்திட்டுப் போயிருக்கு… ஆனா இந்த அய்சான் என்ன பண்ணப் போறாருன்னா… நேரா சூரியனை நோக்கிப் போறாரு…
அப்படியே சூரியனை ஒட்டி ஒரு யு டர்ன் போட்டு திரும்பப் போறாரு. அதனால் சூரிய வெப்பத்தில் இது சிதையக் கூடுமோன்னு ஒரு பயமும் இருந்துச்சு. இப்போ அப்படி நடக்க வாய்ப்பில்லைனு அறிவியலாளர்கள் சொல்றாங்க என்று சொன்னபடி வரப்போகும் அய்சான் எப்படிப் பயணிக்கும் என்று வெளியிடப்பட்டுள்ள காணொளியைக் காட்டினான். அடேயப்பா… இத்தனை கோள்களையும் இடிக்காமல் கடந்து சூரியனைப் போய் ஒரு சுத்து சுத்திட்டுப் போகப் போகுதா? என்று வியந்தனர் அனைவரும்.
சரி, இது பாட்டுக்கு வந்து பூமியை இடிச்சுடுச்சுன்னா என்ன பண்றது? என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் சிபி. அதெல்லாம் இடிக்காது. இதனோட பாதை, வேகம் எல்லாத்தையுமே நம்ம விண்வெளி ஆய்வாளர்கள் கணிச்சு வச்சிருக்காங்க… அதனால ஒன்னும் பிரச்சினையில்லை.
அய்சானைக் கண்டுபிடித்தவர்கள்
விடாலி நெவ்ஸ்கி- ஆர்ட்டியோம் நோவிசோனாக்
இப்படித்தான் 1994-ல ஷூ மேக்கர் லெவி-ன்னு ஒரு வால்வெள்ளி வியாழனை இடிச்சுடுமோன்னு எல்லோரும் பயந்தாங்க… ஆனா அப்படி நடக்கல… என்று சிபிக்கு பதிலளித்தான் புரு.
அப்ப, தைரியமா வெளியில வந்து பார்க்கலாம். அப்படித்தானே! என்றாள் தமிழீழம். கண்டிப்பா… நீங்க மட்டுமில்ல… எல்லோரையும் பார்க்கச் சொல்லலாம். நவம்பர் முதல் வாரத்திலிருந்து பார்க்கலாம். அப்புறம் சூரியனைச் சுற்றி வந்ததும் டிசம்பர்ல பார்க்கலாம். நம்மைவிட 14 மடங்கு நெருங்கிப் போய் சூரியனைப் பார்க்கப் போகுது அய்சான் என்றான் புரு.
இது வரைக்கும் அது வர்றதை நம்ம ஏதாவது படம் பிடிச்சிருக்கோமா? என்று கேட்ட குறிஞ்சியை நோக்கி,
நல்லாவே! நம்ம அனுப்பியிருக்கிற செயற்கைக் கோள்கள், விண்கலங்கள் எல்லாம் அதனதன் இடத்திலிருந்து மணிக்கு 201,168 கிலோமீட்டர் வேகத்தில வரும் அய்சானைப் படம் பிடிச்சு அனுப்பிக்கிட்டேயிருக்கு!
அப்போ… நம்மள்லாம் அய்சானை வரவேற்கத் தயாராகலாம்… என்று ஒரு பஞ்சாயத்துத் தலைவர் ரேஞ்சுக்கு எல்லோரையும் லுக் விட்டான் சிபி.
பார்க்கலாமே அய்சானை! என்று எல்லோரும் தயாரானார்கள். நாமும் பார்ப்போம்… நம் விருந்தாளியை!