அன்பு மொழி
– செல்வா
ஆறாம் வகுப்புப் படிக்கும் இனியனும் முத்தரசும் நல்ல நண்பர்கள். ஒரே வகுப்பில் பயிலும் இவர்களது வீடும் அடுத்தடுத்த தெருவில்தான் உள்ளது. தினமும் காலையில் பள்ளிக்குச் செல்லும்போது இனியன் முத்தரசை அழைத்துச் செல்வான். முத்தரசு கிளம்பத் தாமதமாகும் என தெரிந்தால், இனியன் முத்தரசுவிடம் சீக்கிரம் கிளம்பி நேரத்திற்கு வந்து சேர் என்று கூறிச் செல்வான். முத்துவும் கடைசி நிமிடத்தில் பள்ளியினுள் நுழைந்துவிடுவான்.
தொடர்ந்து 4 நாள்களாக முத்து தாமதமாகப் பள்ளிக்கு வருவதும், வந்தவுடன் பதற்றத்துடன் இருப்பதும் இனியனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தின. முத்து இன்றும் தாமதமாகப் பள்ளிக்கு வந்துவிட்டு பதற்றத்துடன் காணப்படுகிறாயே, என்ன பிரச்சினை என்று சொன்னால்தானே தெரியும் என்று பரிவுடன் கேட்டான். அதெல்லாம் ஒன்றுமில்லை, நான் எப்போதும்
போல்தான் இருக்கிறேன் என்று முத்து சமாளித்தான்.
மாலையில் பள்ளிவிட்டதும் நண்பர்கள் இருவரும் செல்லத் தயாராயினர். அப்போது, டேய் நாம அந்தப் பாதையில் வீட்டிற்குச் செல்லலாம் என்றான் முத்து. நேர்பாதை நன்றாக இருக்கும்போது ஏன் சுற்றிச் செல்ல வேண்டும் என்று இனியன் கேட்டான்.
அப்படியே காலாற கொஞ்ச தூரம் நடக்கலாமே… என்ற முத்துவின் பதிலைக் கேட்டதும், உண்மையைச் சொல்லுடா, நேற்றும் நீ சுற்றுப் பாதையில்தான் வீட்டிற்கு வந்த, இன்றும் அப்படித்தான் செல்ல வேண்டும் என்கிறாய். என்ன நடந்தது? யாரும் உன்னை மிரட்டினார்களா? யாரைப் பார்த்துப் பயப்படுற என்று அரட்டிக் கேட்டான்.
இனியா, நாம் எப்போதும் போகும் இந்தப் பாதை வேண்டாம்… என்றதும் அதான் ஏன் என்று கேட்கிறேன். மூன்று நாள்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் படுத்திருந்த நாயின்மீது கல்லை எடுத்து எறிந்தேன். அடுத்த நாளும் அதேபோல் செய்தேன். நாய் தலையைத் தூக்கிப் பார்த்ததே தவிர ஒன்றும் செய்யவில்லை.
மறுநாள் பள்ளிக்கு வந்தபோது நாயை எதுவும் செய்யலை. ஆனால், நாய் என்னைப் பார்த்ததும் துரத்தத் தொடங்கியது. எந்தெந்தப் பாதையிலோ ஓடி தாமதமாகப் பள்ளிக்கு வந்தேன். இன்றும் நாய்க்குப் பயந்து சுற்றுப் பாதையில் வந்ததால்தான் தாமதமாகிவிட்டது. இப்போது அந்த நாய் என்னைப் பார்த்தால்… நினைக்கவே பயமாக உள்ளது என்றான்.
உனக்குத் துணையாக நான் இருக்கிறேன், வா என்று கூறி அழைத்துச் சென்ற இனியன், நாளை ஞாயிற்றுக்கிழமைதானே, காலையில் 6 மணிக்கெல்லாம் எங்க வீட்டிற்கு வா என்று கூறி விடைபெற்றான்.
அதிகாலையில் எழுந்து வீட்டிற்கு வந்த முத்துவை மொட்டை மாடிக்கு இனியன் அழைத்துச் சென்றான்.
அழகிய செடிகளையும் அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த குட்டிக்குட்டி நீர்நிலைகள், அதிலே அழகாக தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த பறவைகள், அருகில் கிடந்த தானியங்களைக் கொத்தித் தின்று கொண்டிருந்த பறவைகள் அனைத்தையும் பார்த்துப் பிரமித்து நின்றான் முத்து.
இதைப் பார்த்தே அசந்துவிட்டாயா, கீழே வா என்று வீட்டின் பின்புறம் அமைந்திருந்த சிறிய தோட்டத்திற்குக் கூட்டிச் சென்றான். அங்கே பறவைகளும், அந்தத் தெருவிலிருக்கும் நாயும் மீதி இருந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து மீண்டும் வியப்புற்றான்.
மணி இங்க வா என்றதும், ஓடிவந்து இனியன் அருகில் வாலை ஆட்டிக் கொண்டு நின்றது நாய். முத்து, மனிதர்கள் மட்டுமல்ல; விலங்கினங்கள் பறவைகள் போன்ற உயிரினங்களும் நாம் அன்பு காட்டினால் நம்மிடம் பிரியமாய் நடந்து கொள்ளும். துன்புறுத்தினால் மட்டுமே நம்மைத் தாக்க நினைக்கும். அந்த நாய் உன்னைத் துரத்தியது உன் தவறினால்தான் என்பதை இப்போது புரிந்து கொண்டாயா? என்று கேட்டான் இனியன்.
புரிகிறது, ஏன் தண்ணீர் நிரப்பிய டப்பாக்கள், குட்டித் தொட்டிகள் நிறைய வைச்சிருக்கீங்கனுதான் புரியலை என்றான் முத்து. மழைக்காலங்களில் குளம் குட்டைகளில் நீர் நிரம்பியிருக்கும். ஆனால் கோடைக்காலத்தில் நம்மைப் போலவே விலங்குகளும் பறவைகளும் தண்ணீரைத் தேடி பல மைல்தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள பறவைகளின் தாகம் எங்களால் தீர்க்கப்படுகிறது என்ற மன திருப்தி கிடைக்கிறது. அங்கே பார், அந்தத் தொட்டியில் சிட்டுக்குருவிகள் அழகாக குளிப்பதை என்று காட்டினான்.
மிருகங்களும் பறவைகளும் பேசும் அன்பு மொழியைப் புரிந்து கொண்டேன். அனைத்து உயிரினங்களிடமும் அன்புடன் பழகக் கற்றுக் கொண்டேன். இன்றே எங்கள் வீட்டுக்குப் பின்புறம் உள்ள இடத்தில் அழகான தோட்டத்தை உருவாக்குவோம் வா என்று முத்து இனியனை அழைத்துச் சென்றபோது நாயும் அவர்கள் பின்னால் வாலாட்டிக் கொண்டே சென்றது.