பாதுகாப்புடன் இரை தேடும் பாலைவனக்கீரி [Meerkat]
கீரி இனத்தைச் சேர்ந்த சிறிய பாலூட்டி விலங்கான பாலைவனக் கீரி ஆங்கிலத்தில் Meerkat அல்லது Suricate, Suricata என்று அழைக்கப்படுகிறது.
போட்ஸ்வானாவில் உள்ள கலகரி (Kalahari) பாலைவனம், நமிபியாவின் நமிப் பாலைவனம் தென்மேற்கு அங்கோலா மற்றும் தென்ஆப்ரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.
கூட்டமாக வாழும் இயல்புடைய பாலைவனக் கீரிகள் 20 முதல் 50 எண்ணிக்கை வரையிலோ அல்லது அதற்கு அதிகமாகவோ சேர்ந்து வாழும் இயல்புடையன.
ஆண் கீரிகள் 731 கிராம் எடையும் பெண் 720 கிராம் எடையும் கொண்டனவாக இருக்கும். உடல் 25_35 செ.மீ. நீளம் வரையிலும், வால் 17_25 செ.மீ வரையிலும் இருக்கும். தனது இரண்டு கால்களைப் பயன்படுத்தி நிமிர்ந்து நிற்கும்போது சமநிலையில் இருக்க (balance) வால் பெரிதும் பயன்படுகிறது. 4 விரல்கள் வலுவாக 2 செ.மீ நீளத்தில் தோண்டி இரையைத் தேடிச் சாப்பிடும் வகையில் அமைந்துள்ளன. வளைந்த நகங்கள் மரம் ஏறவும் உதவுகின்றன.
பல்லி, பாம்பு, சிலந்தி, தேள் தாவரங்கள், முட்டை, சிறிய பாலூட்டிகள் மற்றும் சிறிய பறவைகளை உணவாக உட்கொள்கின்றன. ஒரு குழுவிற்கு ஒரு பாதுகாவலரை (பெண் கீரி) வைத்துவிட்டு மற்றவை இரை தேடச் செல்கின்றன. காவலுக்கு இருக்கும் பெண் கீரிகள் தங்கள் பார்வையை -_ கவனத்தை அனைத்துப் பகுதிகளிலும் செலுத்தி ஆய்ந்து கொண்டிருக்கும் இயல்புடையவை.
ஏதேனும் ஆபத்து என்றால் கால்களை உயரத் தூக்கி அசைத்தும் விசில் ஒலி எழுப்பியும் தெரிவிக்கும். ஒவ்வொரு ஆபத்திற்கும் ஒவ்வொரு விதமாக சமிக்ஞை செய்து தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு தங்கள் கூட்டத்தாரைப் பாதுகாக்கும்.
அனிமலியா (Animalia) இனத்தினுள் ஹெர்பெஸ்டிடே(Herpestidae) குடும்பத்தைச் சேர்ந்த பாலைவனக் கீரிகள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே தங்களுக்குத் தேவையான இரையைத் தாங்களே தேடிக் கொள்ளும்.
இள மஞ்சள், பழுப்பு மற்றும் பிரவுன் நிறங்களில் காணப்படும் பாலைவனக் கீரிகளின் காதுகள் பூனையைப் போன்றும் மூக்கு கூர்மையாகவும் இருக்கும். மிகத் துல்லியமாகக் கேட்கும் செவித்திறனைப் பெற்றுள்ளன.