சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 15
ஏழைச் சாமிகள் – பணக்காரச் சாமிகள்…
ஏழைச் சாமிகள் பணக்காரச் சாமிகள் எனும் இரண்டுக்குமான அடிப்படையான வேறுபாடுகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. பணக்காரச் சாமிகள் எனப்படும் பெருந்தெய்வங்கள் மதம் சார்ந்தவை. ஆகவே அவற்றுக்கு மறைநூல் எனப்படும் ஒரு வேதப்புத்தகம் இருக்கும். கிறித்தவத்துக்கு பைபிள் இருக்கிறது. இஸ்லாத்துக்கு குரான் இருக்கிறது. வைணவத்துக்கு பகவத் கீதை இருக்கிறது. சைவத்துக்கு சைவத் திருமறைகள் இருக்கின்றன. (சைவம் + வைணவம் + வைதீகம் = இந்து மதம் என்று ஆங்கிலேயர்கள் சொன்னார்கள்.
அதன் பிறகுதான் இங்கு இந்து மதம் என்பது பரவலாக அறியப்பட்டது. நாட்டுப்புறச் சாமிகளையும் பின்னர் இந்து மதத்தில் சேர்த்துக்கொண்டனர். இந்து மதம் என்று தனி ஒரு மதம் கிடையாது. அதற்கென்று தலைமை மடமோ தனி மறைநூலோ ஏதும் இல்லையல்லவா?) ஆனால் மக்கள் சாமிகளான ஏழைச் சாமிகளுக்கு எந்த மறைநூலும் வேதப்புத்தகமும் கிடையாது.
செத்தார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். அப்படியே சாமி ஆனார்கள். அவ்வளவுதான். எந்த மதத்தின் வேதப்புத்தகத்தின்படியும் இச்சாமிகள் வழிபடப்படுவதில்லை.
2. மதச்சாமிகள் எல்லாத்துக்குமே சைவச் சாப்பாடுதான் படைக்கப்படும். ஆனால் மக்கள் சாமிகளுக்கு மக்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அது அப்படியே படைக்கப்படும். நாம்தான் பார்த்தோமே கத்தரிக்காய் முதல் அய்ஸ், கறிச்சாப்பாடு வரை எல்லாம் படையலாக மாறும். சிவன், விஷ்ணு போன்ற பெரிய சாமிகளுக்கு மக்கள் சைவச்சாப்பாடு கூடத் தாங்களே தயாரித்துக் கொண்டுபோய்ப் படைக்க முடியாது.
அதை, சாமி, தீட்டு என்று சொல்லிவிடுமாம். கோவிலிலேயே ஒரு மடப்பள்ளி எனப்படும் சாமி கிச்சன் இருக்கும். அங்கு பூசாரியால் சமைக்கப்படும் பொங்கல், புளியோதரை போன்ற பதார்த்தங்கள்தான் சாமிகளுக்குப் படையலாக முடியும். சர்ச்சுக்கு முன்னால் கிடாய் வெட்ட முடியாது. ஆனால் புனிதர்களின் ஆலயங்களில் வெட்டலாம். மசூதியில் ஆடு வெட்ட முடியாது. தர்காவில் வெட்டலாம். மக்கள் சாமிகளின் கோவில் வாசலில் பொங்கல் வைத்து அதையே சாமிக்குப் படையலாகப் படைக்கலாம்.
3. மதச்சாமிகளுக்கான வழிபாடுகளை மக்கள் நேரடியாகச் செய்ய முடியாது. நடுவில் ஒரு புரோகிதர் அல்லது பாதிரியார் அல்லது முல்லா இருந்து மக்கள் வழிபாடுகளைத் தலைமை தாங்கி வழிநடத்துவார். பூசை செய்வது எப்படி என்று பயிற்சி எடுத்து மந்திரங்கள் அல்லது வேத வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறவர்கள் மட்டுமே அங்கு பூசை செய்ய முடியும்.
சைவம், வைணவம் ஆகியவை இந்திய மதங்கள். ஆகவே இந்தியாவுக்கே உரிய கேடுகெட்ட ஜாதி இங்கேயும் வந்து நிற்கிறது. பிறப்பால் பிராமணராகப் பிறந்த ஒருவர்தான் சிவன், விஷ்ணு போன்ற சைவ வைணவக் கோவில்களில் பூசாரியாகலாம் என்று விதி உண்டு. எல்லா ஜாதியாரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு இப்போது சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதை இன்னும் நடைமுறைப்படுத்த அரசாங்கத்தாலேயே முடியவில்லை.
மக்கள் சாமிகளுக்கும் பூசாரிகள் உண்டு. ஆனால் அவர் அய்யராக இருக்க மாட்டார். அதே சாமியைக் கும்பிடும் சாதா ஜாதிக்காரராகவே இருப்பார். விவசாயம் போன்ற வேலைகளும் பார்ப்பார். பூசை நாளில் அந்த நேரத்துக்கு மட்டும் பூசாரியாக இருப்பார். அய்யரைப்போல எப்போதும் -வருடம் பூராவும் பூசாரி அந்தஸ்து அவருக்குக் கிடையாது.
பணக்காரச் சாமிகளின் மடப்பள்ளி
4. காளி, மாரி, சுடலைமாடன், அய்யனார் போன்ற ஏழைச்சாமிகளை விரதம் இருந்து கும்பிடும் மனிதர்கள் உடம்பில் சாமியே வந்து இறங்கி சாமியாட்டம் நடக்கும். இப்போது அந்த நபர் மனிதரல்லர். ஆத்தா ஆகி நம் முன்னே ஆடுகிறார். அந்தச் சாமியோடு மக்கள் நேரடியாகப் பேசி தம் கோரிக்கைகளை வைக்கலாம். மழையே இல்லையே ஆத்தா.. என்று மக்கள் கேட்பார்கள்.
எனக்கு ரெண்டு வருசமா கொடை/திருவிழா நடத்தி ஆடு கிடா வெட்டிப் பொங்கல் வச்சியா.. அதனாலதான் மழை இல்லே…. என்று சாமி மக்களை மதித்துப் பதில் சொல்லிக்கொண்டிருக்கும். சிவன், விஷ்ணு, ஏசு போன்ற மதச் சாமிகள் ஒருபோதும் மனிதர்கள் மீது இப்படி வந்து இறங்கி மக்களோடு பேசியதே கிடையாது. அவை கல்லாக மட்டுமே இருக்கும்.
5. சிவன், விஷ்ணு கோவில்கள் இப்படி இப்படித்தான் கட்டப்பட வேண்டும் என்று எழுதப்பட்ட ஆகம விதிகள் உண்டு. அதேபோல அச்சாமிகளின் சிலைகள் வடிப்பதற்கும் அவற்றை வைப்பதற்கும் விதிகள் உண்டு. குடமுழுக்கு எனப்படும் பெரிய செலவிலான பூசை நடத்திய பிறகுதான் அப்பெரிய சாமிகள் வணங்கும் தகுதி பெறும்.
ஆனால் மக்கள் சாமிகளான ஏழைச்சாமிகள் வெறும் மண்ணைக் குழைத்துப் பீடமாகக் கட்டப்படுபவைதான். ஊருக்கு ஊர் மாறும் தன்மை கொண்ட மிக எளிய வாய்வழியே கூறப்படும் விதிகளே உண்டு. எழுதப்பட்ட எந்தச் சட்டமும் கிடையாது.
ஏழைச் சாமிகளின் படையல்
6. ஏழைச் சாமிகளை வணங்கும் ஏழை மக்கள் இரண்டுவிதமான சாமிகளின் பேர்களையும் பிள்ளைகளுக்குச் சூட்டுவார்கள். எல்லாச்சாமி-களும் ஏழை மக்களுக்கு ஒன்றுதான். ஆனால் சுடலைமாட அய்யங்கார், காளியப்ப அய்யர் என்றோ பிராமணப் பெண்களுக்கு மாடத்தி, இசக்கியம்மாள் என்றோ பெயர் சூட்டும் பழக்கம் இன்றுவரை இல்லை. சாமிகளிலும் மேல்ஜாதி கீழ்ஜாதியை நம் ஜாதிக்கட்டமைப்பு உண்டாக்கி வைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.
7. ஒரு நாட்டுப்புறச் சாமியைக் கும்பிடும் மக்கள் வேறு ஊருக்கு நிரந்தரமாகக் குடி போனால் தங்கள் சாமி கோவில் முன்பிருந்து பிடிமண் எடுத்துக் கொண்டுபோய் புது ஊரில் அந்த மண்ணையும் சேர்த்துக் குழைத்துப் புதுசாக அதே சாமியை அங்கே கட்டி எழுப்பி விடுவார்கள். இந்தப் பழக்கம் மதச்சாமிகளுக்குக் கிடையாது. இப்படிப் பல வித்தியாசங்களைக் கூறலாம். நாம் ஏற்கெனவே சொல்லியுள்ள பல கதைகளிலிருந்து நீங்களே சிலவற்றைக் கண்டுபிடிக்கவும் செய்யலாம்.
(தொடரும்)