வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது! ஆசிரியர் தாத்தா பிறந்த நாள் 02.12.2013
மாணவப் பருவத்தில் ஆசிரியர் தாத்தா
எனது நான்காம் படிவம் முதல் ஆறாம் படிவம் வரை எனக்கு அரசு உதவித் தொகையில் சம்பளம் போக இரண்டு ரூபாய்கள் மிஞ்சும். ரூபாய் ஆறரை சம்பளம் போக ரூபாய் இரண்டரை மிஞ்சும். (10 ரூபாய் சம்பள ஸ்காலர்ஷிப்) எங்கள் பள்ளியின் கடைநிலை ஊழியர் தோழர் தனபால் அந்த மாத காசோலையை (செக்கினை) உதவித் தொகைக்காக வங்கியில் மாற்றி வருவார்.
அவருக்கும் ஒரு சிறு தொகை தவறாது அதில் கொடுப்பேன் -மனமுவந்து.- அவர் தொடக்கத்தில் மறுத்தாலும்கூட – இந்த உதவித்தொகை எனக்குக் கிடைக்க என்னுடைய ஆசிரியர், தலைமையாசிரியர் பரிந்துரை காரணம் என்றாலும், பலர் போட்டியிட இதனை ஒரேயொரு மாணவருக்குத் தந்ததற்கு ஒரு நிகழ்ச்சி காரணம் என்று சொல்ல வேண்டும்.
ஒரு நாள் (D.E.O) மாவட்டக் கல்வி அதிகாரி சோதனை (இன்ஸ்பெக்ஷன்); அவர் தமிழ் மொழி இனப்பற்றாளர் – திரு. முருகேச முதலியார் என்பது அவரது பெயர். சென்னையிலிருந்து வந்தவர். ஒவ்வொரு வகுப்புகளையும் சுற்றிப் பார்ப்பார்!
சில வகுப்புகளுக்குள்ளும் சென்று ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கண்காணிக்க சிறிது நேரம் தங்கி மாணவர்களையும், ஆசிரியரையும் கேள்வி கேட்டு வெளியேறும் கடமை வீரர் அவர். எல்லா ஆசிரியரின் வகுப்பறைகளும், துப்புரவாகவும், துடிதுடிப்புடனும், எச்சரிக்கையுடனும் அவரது வருகையை எதிர்நோக்கியிருந்தன.
இரண்டு நாள் தொடர் இன்ஸ்பெக்ஷன். இரண்டாவது நாள் அவர் எங்கள் வகுப்பிற்கு வந்தார்.- உள்ளூர் பிரமுகர் திரு. அழகானந்த முதலியார் கட்டித் தந்த அழகானந்த கூடம்.
அந்த வகுப்பறையில் எங்கள் தமிழாசிரியர் திரு. பழனியாண்டி (முதலியார்) தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.
(டர்பனுடன் இருப்பார் ஆசிரியர்) நுழைந்தார் கல்வி அதிகாரி. அமர்ந்தார் நாற்காலியில். வகுப்பு நடைபெறுவதைத் தொடரச் சொன்னார். முன்பே நடத்திய பாடத்தையே நடத்தினார் எங்கள் ஆசிரியர்; கேள்வி கேட்டாலும் மாணவர்கள் தெளிவாகப் பதில் சொல்ல வாய்ப்பு அதனால் சிறப்பாக ஏற்படுமென்பதால்!
கல்வி அதிகாரி திடீரென்று மாணவர்களாகிய எங்களை நோக்கி திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்த மாணவர்கள் யாரேனும் சொல்லுங்கள் என்றார். ஓர் நிமிடம் அமைதி. தமிழாசிரியரேகூட எதிர்பார்க்காத கேள்விக்கணை அது! ஆசிரியர் எங்களைப் பார்த்தார்; உடனே அச்சமின்றி, துணிவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, சில குறள்பாக்களை மடமடவென்று உரத்த குரலில், மேடையில் பேசுவது போல சொல்லத் தொடங்கினேன்.
அப்போது எனக்கு எந்தத் திருக்குறள் அதிகாரமும் முறையாக 10 தொடர்ந்து தெரியாது என்றாலும், நான் நமது மேடைகளில் பல சொற்பொழிவாளர்கள் கூறுவதைக் கேட்டும் குடியரசு, திராவிட நாடு, விடுதலை போன்ற நமது கொள்கை ஏடுகளில் வரும் கட்டுரையின் மேற்கோள்களைப் படித்து மனத்தில் பதிய வைத்திருந்தவற்றையே ஒப்புவித்தேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்னும் குறள், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் என்ற குறள்,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறள்-, இப்படி சில குறள்களைக் கூறினேன்.
மகிழ்ந்தார்; பாராட்டினார்; போதுமென்றார்; என்னைக் காப்பாற்றினார் மாவட்டக் கல்வி அதிகாரி! வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் மவுனமாகிவிட்ட நிலையில், பளிச்சென்று எழுந்து நான் குறள்பாக்களைக் கூறியது பற்றி எங்கள் தமிழாசிரியர் அவர்களுக்கும் மெத்த மகிழ்ச்சி.
மாவட்டக் கல்வி அதிகாரி திரு. முருகேச முதலியார் உடனே உன் பெயர் என்னவென்று கேட்டார். பிறகு சென்றுவிட்டார். அவர் சென்ற நிலையில் அடுத்த நாள் எங்கள் பள்ளி மாணவர் உதவித்தொகை பற்றிய குறிப்புகள் கொண்ட கோப்புகளை அவர் காண நேர்ந்தது;
அவர் முடிவெடுக்க வேண்டிய அதிகாரி என்பதால் -எனது பெயரை அவர் மிக நன்றாக நினைவில் கொண்டதன் பேரிலும், எனக்கே அந்த உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) அளிக்க ஆணை பிறப்பித்தார்.
நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதி வகுப்பான 6ஆ-வது படிவம் (S.S.L.C. Sixth form) வரை மூன்று ஆண்டுகளும்- அது தொடர்ந்து கிடைத்தது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்த மாணவன் என்ற கூடுதல் தகுதியும் அதற்குரியவனாக என்னை ஆக்கிற்று. வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது; அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும்.
நூல்: அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம்-1)