(Capybara) கபிபரா
உலகின் மிகப் பெரிய எலி வகை கபிபரா ஆகும். கினி பன்றிகளும் (Guinea pigs) வளை எலிகளும் (Rock cavies) இதன் நெருங்கிய உறவினர்கள்.
சிலி தவிர தென் அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் கபிபராக்கள் அடர்ந்த காடுகள், புல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கக் கூடியன.
அனிமலியா (Animalia) இனத்தினுள் கவிடே (Cavidae) குடும்பத்தைச் சார்ந்தன.
கூடி வாழும் இயல்புடையன. 10 முதல் 20 வரை உள்ள குழுக்களாகவோ அல்லது 50 முதல் 100 வரை எண்ணிக்கை கொண்ட குழுக்களாகவோ வாழ்கின்றன.
பீப்பாய் வடிவ உடலமைப்பில் சிறிய தலையுடன் தோற்றமளிக்கும் கபிபராக்கள் 107 முதல் 134 செ.மீ நீளமும் 50லிருந்து 64 செ.மீ. உயரமும் கொண்டன. இவற்றின் எடை 35 கிலோவிலிருந்து 65 கிலோ வரை இருக்கும்.
பின்னங்கால்கள் முன்னங்கால்களைவிட சிறிது பெரிதாகவும் அகன்று விரிந்த பாதங்களையும் கொண்டுள்ளன. மூக்கு, கண், காது ஆகிய உறுப்புகள் மிக அருகருகே உள்ளன. இவற்றின் தோல் மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுகிறது.
புல், நீர்வாழ் தாவரம், பழம், மரப்பட்டை போன்றவற்றைச் சாப்பிடும் இவற்றின் தாடையானது உணவை அசைபோட்டுச் சாப்பிட வசதியான அமைப்பில் செங்குத்தாக அமைந்துள்ளது. புல்லிலுள்ள செல்லுலோஸ் இவற்றின் செரிமானத்திற்கு உதவுகிறது.
நீரில் நன்கு நீந்தும் இயல்புடையதோடு, 5 நிமிடங்கள் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கும் திறமையையும் பெற்றுள்ளன. தனது அறிவுக் கூர்மையால் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்கின்றன. சகதியில் புரள்வது என்றால் கபிபராக்களுக்கு மிகவும் பிடிக்கும்.
8 முதல் 10 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியன. கழுகு, சிறுத்தைப் புலியினுள் ஒரு பிரிவைச் சேர்ந்த Jaguar, அமெரிக்காவிலுள்ள பூனை வகையைச் சேர்ந்த மலைவாழ் விலங்கான Puma, Ocelot, Caiman ஆகியவற்றின் விருப்ப உணவாக கபிபராக்கள் உள்ளன.
அனகோன்டா பாம்புகளும் கபிபராக்களை விருப்பமான உணவாக உட்கொள்கின்றன. மனிதர்களுடன் எளிதில் பழகும் தன்மை கொண்ட இவை அமெரிக்க அய்க்கிய நாட்டு மக்களின் செல்லப் பிராணிகளாகத் திகழ்கின்றன.