சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 18
கடவுள் உண்டா? இல்லையா?
– ச.தமிழ்ச்செல்வன்
கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி.-
எல்லா ஊர்களிலும் உள்ள தாடி வைத்த தந்தை பெரியார் சிலைக்குக் கீழே பார்த்தால் மேற்கண்ட வரிகள் எழுதப்பட்டிருக்கும். ஆம். இந்த வாசகங்களைச் சொன்னதும், கடவுள் இல்லை என்கிற கருத்தை தமிழ்நாட்டில் மக்களிடையே பரப்பியதும் தந்தை பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி ஆவார்.
தமிழ்நாட்டில் அவருடைய கொள்கையைப் பின்பற்றுபவர்களும் கம்யூனிஸ்ட்டுகள் என்று அழைக்கப்படும் பொதுவுடமைவாதிகளும்தான் கடவுள் இல்லை என்கிற கருத்தை உறுதியாகச் சொல்பவர்கள்.
நாம் இதுவரை கடந்த 15 அத்தியாயங்களில் பார்த்த கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன. கோவில்கள் உண்டு, மசூதிகள் உண்டு, சர்ச்சுகள் உண்டு, பீடங்கள் உண்டு. ஆனால் கடவுள் என்பது இல்லை. கோவில் என்பது மனிதனால் கல்லையும் மண்ணையும் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்.
கடவுள் என்பது கதைகளாலும் கருத்துகளாலும் மனிதனால் கட்டப்பட்ட ஒரு நம்பிக்கை. மனிதன் படைத்த எத்தனையோ பொருட்கள், கருத்துகளைப்போல கடவுள் என்பதும் மனிதனால் படைக்கப்பட்ட ஒன்று. அவனே படைத்துவிட்டு அவனே அதற்குப் பயப்படுபவனாகவும் மாறிவிட்டான்.
ஏனெனில், தன்னைச் சுற்றி நடப்பது எல்லாமே அவனுக்குப் புரியும்படியாக இல்லை. தன் அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இதையெல்லாம் இயக்குவதாக நம்பி அவன் சமாதானம் கொள்கிறான். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏன் என்று புரியாத காலத்தில் சூரியனையும் சந்திரனையும் ராகு, கேது என்ற பாம்புகள் விழுங்குவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அறிவியல் வளர்ச்சியில் அது பாம்பு விசயமல்ல, ஒன்றின் நிழல் மற்றதன் மீது விழுவதுதான் காரணம் என்று இப்போது புரிந்தபின் பாம்பு மேட்டரை முன்போல யாரும் சத்தமாகச் சொல்லுவது இல்லை. நிலாவில் ஒரு பாட்டி உட்கார்ந்து வடை சுடுவதாக நான் குழந்தையாக இருந்தபோது சொல்வார்கள். ஆனால் நிலாவில் மனிதன் இறங்கி வாக்கிங் போனதைப் பார்த்தபிறகு இப்போது யாரும் பாட்டி கதையைச் சொல்வதில்லை.
மனிதனால் அறியப்படாதவை இப்பிரபஞ்சத்தில் இன்னும் நிறைய உண்டு. ஆனால் அறிய முடியாதது என்று ஏதும் இல்லை. ஒவ்வொன்றாக மனிதன் கண்டுபிடித்து அறிய அறிய ஏற்கெனவே இருந்த நம்பிக்கைகளும் கருத்துகளும் மறைந்து போவதைப் பார்க்கிறோம்.
அதேபோல கடவுள் நம்பிக்கையும் மக்கள் மனதிலிருந்து முற்றிலுமாக ஒருநாள் அழிந்து பகுத்தறிவின்படி எல்லோரும் வாழத் தொடங்குவார்கள்.
இப்போதைக்கு வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கிறது. கஷ்டம் இருக்கிறது. காசு இல்லாமல் வறுமையில் வாழ வேண்டியிருக்கிறது. நம்ம கஷ்டத்துக்குக் காரணம் எது என்று தெரியவில்லை. கடவுளே காப்பாத்து.. என்று சொல்லிவிட்டு அடுத்த நாளை நகர்த்த ஒரு நம்பிக்கை தேவையாக இருக்கிறது.
இதுபோக கடவுள் இருக்கிறார் என்று சொல்ல முழுநேர ஊழியர்கள், பாதிரியார்கள், பிரதர்கள், சிஸ்டர்கள், முல்லாக்கள், மதப் பிரச்சாரகர்கள் என்று உலகெங்கும் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
ஆகவே, பிரச்சினைகளாலும் பிரச்சாரத்தாலும்தான் கடவுள் இருப்பதாக இன்னும் பெருவாரியான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் இல்லை என்கிற உண்மையைப் பிரச்சாரம் செய்ய யாருமில்லை. அதைச்செய்ய வேண்டிய பாடப்புத்தகங்களும் பள்ளிக்கூடங்களுமே அதைச் செய்யவில்லை.
கடவுள் எங்கே இருக்கிறார் என்று பொதுவுடமைத் தத்துவத்தை உலகுக்குத் தந்த கார்ல்மார்க்ஸ் சொன்னார்:
இரக்கமில்லாத இந்த உலகத்தில் கருணையின் வடிவமாகக் கடவுள் இருக்கிறார். இதயமில்லாத இந்த உலகத்தின் இதயமாகக் கடவுள் இருக்கிறார். ஏழைகளின் ஏக்கப்பெருமூச்சாகக் கடவுள் இருக்கிறார்.
ஆம். இந்த உலகம் -நம் நாடு -நம் அரசு- நம் சகமனிதர்கள் இரக்கமுள்ளவர்களாக மாறிவிட்டால் கடவுளை மக்கள் தேட மாட்டார்கள். நம்மிடமே கருணை பெருகிவிட்டால் கருணையின் வடிவத்தை சிலை வடிவில் ஏன் தேடப்போகிறோம்? ஏக்கப்பெருமூச்சு விடும்படியாக இருக்கும் இன்றைய ஏழைகளுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் ஒரு சமூகம் அமைந்துவிட்டால் கடவுள் தேவைப்பட மாட்டார்.
மக்கள் கடவுளை கருணையின் வடிவமாகப் பார்க்கிறார்கள். இதயமில்லாத இந்த உலகத்தின் இதயமாகப் பார்க்கிறார்கள். ஆனால், ஆள்பவர்களும் மதவாதிகளும் மக்களின் இந்த நம்பிக்கையை ஊதிப்பெரிதாக்கி மக்களை மயக்கும் சாதனமாக மாற்றுகிறார்கள். மயக்கத்தில் இருந்தால் பகுத்தறிவு வேலை செய்யாது அல்லவா?
பகுத்தறிவைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் இப்போதே கடவுள் நமக்குத் தேவையில்லாமல் போய்விடுவார். அது நம்ம உண்டாக்கின சரக்கு என்று புரிந்துவிடும்.
நான் ரொம்பச் சின்ன வயசிலேயே கடவுள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். பகுத்தறிவின்படி வாழத் தொடங்கிவிட்டேன்.
நீங்க எப்படி?
(முற்றும்)
நன்றி: பாரதி புத்தகாலயம்