அறிஞர்களின் வாழ்வில்…
எடுத்துக்காட்டு
தாகூர்
இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர் தாகூர். ஆரம்பத்தில் தாகூர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் கல்கத்தா பல்கலைக்கழகம் நடத்திய மெட்ரிகுலேசன் தேர்வில் இலக்கணப் பிழை திருத்துவதற்காக மாணவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி என்னும் நாவலினை, முதலில் தாகூர் வங்க மொழியில் எழுதினார். பின்னர் அவரே ஆங்கில மொழியாக்கம் செய்தார். ஆங்கில மொழிபெயர்ப்பினைப் படித்த அய்ரிஸ் கவிஞர் ஏட்ஸ் பாராட்டியதுடன், இங்கிலாந்தின் மேக்மில்லன் கம்பெனி மூலம் (ஆங்கிலம்) வெளியிட ஏற்பாடு செய்தார்.
தாகூரின் கட்டுரைகளை இலக்கணப் பிழை திருத்த மாணவர்களிடம் கொடுத்த கல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தாகூருக்கு சர் பட்டம் கொடுத்தனர்.
பஞ்சாபிலுள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் வெள்ளை ராணுவ தளபதி டயர் இந்தியர்களைச் சுட்டுக் கொன்றார். பிரிட்டிஷாரின் காட்டுமிராண்டிப் போக்கைக் கண்டித்தார் தாகூர். படுகொலைக்குக் காரணமான ஆட்சியினர் கொடுத்த சர் பட்டத்தை இனியும் வைத்திருப்பது சுயமரியாதையுள்ள தேசபக்தனுக்கு இழுக்கு என நினைத்து ராஜினாமா செய்தார்.
அப்போதைய பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு அவர் எழுதிய கடிதம் உணர்ச்சிமிக்க ஆங்கில நடைக்கு இன்றும் ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
போருக்கு நடுவே…
வாஷிங்டன்
இங்கிலாந்து நாட்டின் பிடியிலிருந்து வெளிவந்த அமெரிக்கர்கள் சுதந்திரப் போராட்டம் நடத்தினர். அப்போது, அமெரிக்க விடுதலைப் படைத்தளபதியாக வாஷிங்டன் இருந்தார். அமெரிக்காவை அடக்க அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் படைத்தளபதியாக சர் வில்லியம் ஹோ இருந்தார். இரு முகாம்களும் அருகருகே அமைக்கப்பட்டிருந்தன.
பலம் மிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து எப்படிப் போர் செய்வது என்பது பற்றிய ஆலோசனையினை இரவில் நடத்திக் கொண்டிருந்தார் வாஷிங்டன். அப்போது ஒரு நாய் வாஷிங்டனின் கூடாரத்தினுள் நுழைந்தது. நாயின் கழுத்துப் பட்டையைப் பார்த்த வாஷிங்டன், இது எதிரி நாட்டுப் படைத்தளபதி ஹோவினுடையது என தெரிந்து கொண்டார்.
போர்க்காலச் சூழலில் தங்களிடமே நாயை வைத்துக் கொள்வது கௌரவப் பிரச்சினை என நினைத்தார். ஹோ, நாய் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு உடையவர் என்பது வாஷிங்டனுக்குத் தெரியும்.
வெள்ளைக் கொடியுடன் சில வீரர்கள் சூழ நாயை அனுப்பி வைத்தார். அப்போது, ஜெனரல் ஹோ அவர்களுக்கு வாஷிங்டனின் வணக்கம். எங்கள் பாசறைக்கு வழி தவறி வந்த நாய் தங்களுடையதுதான் என்பதைக் கழுத்துப் பட்டையிலிருந்து அறிந்து கொண்டேன். எனவே, திருப்பி அனுப்பியுள்ளேன் என்று எழுதிய கடிதமும் கொடுத்தனுப்பினார். பரவசப்பட்ட ஹோ, நன்றி கூறி கடிதம் கொடுத்தனுப்பினார். இச்செயலால் போரின் போக்குக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
நடுநிலை தவறாதவர்
டோஜா
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் அட்மிரல் டோஜா. போரில் தோற்ற டோஜா யுத்தக் கைதிகளுள் ஒருவரானார். டோக்கியோவில் போர்க்கைதிகள் விசாரணை மன்றத்தின் முன் விசாரணை நடைபெற்றது. குறுக்கு விசாரணையின் போது, எதையும் மறைக்காமல், வருத்தம் தெரிவிக்கும்படிக் கேட்காமல், மன்னிக்கும்படிக் கூறாமல் தனது திறமையால் வாதாடினார் டோஜா.
ஜப்பான் நடத்தியது தற்காப்பு யுத்தம் என்றும் பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் நடத்திய திடீர்த் தாக்குதல் நியாயமானது என்றும் கூறி, பிரதமர் என்ற முறையில் முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக திறமையாக வாதாடினார். இவரது வாதத் திறமை வழக்குரைஞர்களையே திணற வைத்தது.
ஜப்பான் நாட்டு மக்களிடையே செல்வாக்குக் குறைந்திருந்த டோஜா, குறுக்கு விசாரணையின்போது நடைபெற்ற வாதத் திறமையால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றார். விசாரணை என்ற ஒன்று நடைபெற்றதே தவிர, டோஜாவுக்கு மரண தண்டனை என்பது முன்பே எழுதப்பட்ட தீர்ப்பாக இருந்தது.
டோஜாவை விசாரித்த நீதிபதி குழுவில் பால் என்ற இந்தியரும் இடம் பெற்றிருந்தார். இவரது தீர்ப்பு வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாக அமைந்தது. மற்ற நீதிபதிகளால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட டோஜாவுக்கு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என எழுதினார் நீதிபதி பால்.
ஹேன்கீ பிரபு எழுதிய அரசியல், விசாரணை, தவறுகள் என்னும் நூலில் பால் எழுதிய தீர்ப்பு பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றின் மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர் இந்திய நீதிபதி என்று நிரூபித்த பெருமைக்குரியவர் பால்.
ஒற்றுமை
லிங்கன் மற்றும் கென்னடி
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் பதவியில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலவே அமெரிக்க அதிபர் கென்னடியும் பதவியில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டவர்.
இரு அதிபர்களின் துயர முடிவுகளுக்கு ஒற்றுமை இருப்பதைப் போலவே வேறு பல ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு.
1. லிங்கன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு: 1860.கென்னடி அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு 1960.
2. ஃபோர்டு திரையரங்கில் நடைபெற்ற நாடகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று லிங்கனுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அலட்சியப்படுத்திவிட்டு நாடகம் பார்க்கச் சென்றார்; சுட்டுக் கொல்லப்பட்டார்.
டல்லாஸ் நகர் செல்ல வேண்டாம் என நண்பர்கள் கென்னடியிடம் கேட்டுக் கொண்டனர். மீறிச் சென்றார்; சுட்டுக் கொல்லப்பட்டார்.
3. இரு அதிபர்களின் மரணமும் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. இருவரும் மனைவி அருகிலிருக்கும்போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவரையும் சுட்டவர்கள் பின்னாலிருந்து சுட்டுள்ளனர். இருவரின் தலைகளிலும் குண்டு பாய்ந்துள்ளது.
4. லிங்கன் இறந்தபின் அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் ஆன்ட்ரூ ஜான்சன் (1808).
கென்னடி இறந்தபின் அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்டவர் லிண்டன் ஜான்சன் (1908).
5. இருவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தென் மாநிலத்தார். முன்னாள் செனேட்டர்கள்.
6. லிங்கனைச் சுட்டவன் திரையரங்கில் சுட்டான்; கடையில் பிடிபட்டான்.
கென்னடியைச் சுட்டவன் கடையிலிருந்து சுட்டான்; திரையரங்கில் பிடிபட்டான்.
7. இரு அதிபர்களைச் சுட்டவர்களும் விசாரணைக்கு வரும் முன்பே சுட்டுக் கொல்லப்பட்டனர்.