விந்தைச் செய்திகள்
பிரமிடு
– முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன்
எகிப்து என்றாலே பிரமிடுகள்தான் எவருக்கும் முதலில் நினைவிற்கு வரும். எகிப்தில் உள்ள பிரமிடுகளைச் சுமார் 36 லட்சம் மனிதர்கள் உழைத்துக் கட்டியுள்ளனர். கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆகியுள்ளன.
இவற்றைக் கட்டத் தேவையான சுண்ணாம்பு, கற்கள் எல்லாம் நைல் நதியில் வெள்ளம் வரும் காலங்களில் படகுகள் வாயிலாகக் கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு எத்தனை தடவை கொண்டு வந்திருக்கிறார்கள் தெரியுமா? அய்ந்து லட்சம் தடவைகள். இப்பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடில் இரண்டரைக் கோடி கற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
நம் நாட்டில் ரயில் வண்டிகள் குறித்த நேரத்தில் வந்து சேர்வதே அபூர்வம். ஆனால், ஜப்பான் நாட்டில் ரயில் வண்டிகள் தாமதமாக வருவது அபூர்வம். ஏன் தெரியுமா-?
ஜப்பானில் ரயில்கள் தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ஜப்பான் யென் எனும் காசு வீதம் கணக்கிட்டுத் தந்து விடுகின்றனர். இதனால் ஜப்பானில் ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடுகின்றன.
பஃபின் பறவை
அய்ஸ்லாந்தில் கடற்கரையோரம் கடற்பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அய்ஸ்லாந்தில் உள்ள கடற்கரைப் பகுதி, பொதுவாக ஆர்டிக் பகுதிகளில் குறைந்த அளவு பறவைகள்தான் வாழும். ஆனால், இந்த அய்ஸ்லாந்துப் பகுதியில் மட்டும் நிறையப் பறவைகள் வாழ்கின்றனவே. எப்படி?
இங்கே கடல்வாழ் தாவரங்கள் எண்ணற்ற அளவு கிடைக்கின்றன. அதோடு குட்டி மீன்களும், பெரிய மீன்களும் ஏராளமாய்க் காணப்படுகின்றன. அந்தப் பெரிய மீன்கள்தான் அப்பறவைகளின் முதன்மை உணவு.
எனவே உணவுக்குப் பஞ்சமே இல்லாததால் இங்கே பறவைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அந்தப் பறவைகளின் பெயர் பஃபின். இந்தப் பறவைக்குப் பெரிய அலகு உண்டு.