பயனுள்ள இணையதளம்
www.rubiks.com/gallery
மூளைக்கு வேலை தரும் பயனுள்ள விளையாட்டுகளை இந்த இணையதளம் சென்றால் விளையாடலாம். கற்பனைத் திறனுக்கும் அறிவுக்கும் சவாலான பகுதியாக உள்ளது.
எமோ ரூபிக் என்பவரால் 1974இல் கண்டுபிடிக்கப்பட்ட Rubiks Cube என்ற விளையாட்டு 1977இல் விற்பனைக்கு வந்துள்ளது. 1980ஆம் ஆண்டில் மேஜிக் க்யூப் (Magic Cube) என்ற பெயர் ரூபிக்ஸ் க்யூபாக (Rubiks Cube) மாற்றம் பெற்றது. முதல் சர்வதேச ரூபிக்ஸ் சாம்பியன்சிப் போட்டி படாபஸ்ட் நகரில் 1982இல் நடைபெற்றது.
Cube பயன்படுத்தும் முறை, விளையாட்டின் பல்வேறு வகைகள் மற்றும் எளிய முறையில் வண்ணங்களை ஒன்றுசேர்க்கும் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது. பதிவிறக்கம் (Download) செய்து பிரதி எடுத்தும் விளையாடலாம். இதில் கணிதப் புதிரான சுடோகும் இடம் பெற்றுள்ளது.
இணையத்திலேயே விளையாடும் வகையில் 3D puzzles, Electronic games, Mobile Apps போன்ற பல விளையாட்டுகள் விதிமுறைகளுடன் இடம்பெற்றுள்ளன. மேலும் Light Speed, Clock, Eclipse போன்ற பல விளையாட்டுகள் சிந்தைக்கு வேலை கொடுத்து விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
க்விஸ்(Quiz)?
Quiz என்ற வார்த்தையினை அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரைச் சேர்ந்த டாலி என்பவர் 1791ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
டாலி தன் நண்பர்களுடன் ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே, இதுவரை இல்லாத ஒரு புதிய வார்த்தையினைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தை மிகவும் பிரபலமடையும் வகையில் இருக்க வேண்டும் என்ற போட்டி உருவானது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையைக் கூறினர். அப்போது டாலி கூறிய வார்த்தையே Quiz என்பது. இந்த வார்த்தையை எப்படிப் பிரபலமடைய வைப்பது என சிந்தித்தார். நகரம், கிராமம் என்ற வேறுபாடின்றி சாக்பீசால் பெரிய பெரிய எழுத்துகளில் இரவு முழுவதும் எழுதி வைத்தார்.
மறுநாள் காலையில் அந்த வார்த்தையைப் பார்த்த மக்கள் குவிஸ்ஸா, அப்படி என்றால் என்ன? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். யாருக்கும் அர்த்தம் தெரியாததால் ஒரே புதிராக இருக்கிறதே என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதனைப் பார்த்துக்கொண்டு வந்த டாலி தன்னைப் பற்றியோ, வார்த்தையின் அர்த்தத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை.
புரியாத புதிராக நீடித்து வந்த குவிஸ் என்ற வார்த்தையினை, நாள்கள் செல்லச் செல்ல புதிர் என்பதற்கே உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒன்று புரியவில்லை எனில், என்ன ஒரே குவிஸ்ஸாக இருக்கிறதே என்று சொல்லிச் சொல்லியே அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்து கடைசியில் புதிர் என்ற சொல்லுக்கு அந்த வார்த்தை பொருந்தும் என்பதுபோல ஆகிவிட்டது.