டென்னிஸ் (Tennis)
செரீனா வில்லியம்ஸ்
அணிக்கு ஒருவர் என்று இருவரோ, அணிக்கு இருவர் என 4 பேரோ டென்னிஸ் விளையாட்டினை விளையாடுவர். இது ஒற்றையர், இரட்டையர் பிரிவு என்றழைக்கப்படுகிறது. சல்லடை மட்டையால் (ராக்கெட்) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி அரங்கத்திற்குள் விழுமாறு பந்தைத் தட்டி விளையாடும் விளையாட்டே டென்னிஸ்.
முதலில், கைகளால் பந்தினைத் தட்டி விளையாடியுள்ளனர். டென்னிஸ் மட்டையினைப் பிரான்ஸ் நாட்டினர் அறிமுகப்படுத்தினர். டென்னிஸ் என்பது பிரான்ஸ் சொல்லாகும்.
உலகில் மிக அதிக ரசிகர்களையும், வீரர்களையும் கொண்ட விளையாட்டுகளுள் டென்னிசும் ஒன்றாகும். இதன் விதிமுறைகள் 1875ஆம் ஆண்டு மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் வரையறுக்கப்பட்டன.
ஆடுகளம்
புல்வெளி, களிமண், செம்மண், கற்காரை(கான்கிரீட்), செயற்கைப் புல், மரப்பலகை என்ற இவற்றுள் ஒன்றால் தளம் அமைக்கப்பட்டிருக்கும். ஆடுகளத்தின் நீளம் 36 அடி (10.97 மீட்டர்), அகலம் இரட்டையர் ஆட்டத்திற்கு 78 அடி (23.77 மீட்டர்), ஒற்றையர் ஆட்டத்திற்குப் போடப்பட்ட கோட்டின் இருபுறமும் 14 மீட்டர் (4.5அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்குக் கோடு போடப்படும். ஆடுகளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீட்டர் (3அடி) உயரத்தில் நடுவலை அமைந்திருக்கும்.
பந்து
மென் கம்பளி மற்றும் செயற்கை இழைத் துணியால் மூடப்பட்டிருக்கும் பந்தின் உட்புறம் காலியாக இருக்கும் ரப்பர் பந்து பயன்படுத்தப்படுகிறது. பந்தின் விட்ட அளவு 6.35 செ.மீ முதல் 6.67 செ.மீ வரை இருக்கும். எடை 57.7 கிராம் முதல் 58.5 கிராம் கொண்டதாக இருக்கும். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வளைக்கோடு போட்ட பந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சல்லடை மட்டை
ரோஜர் பெடரர்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை மட்டைகளுக்கு இல்லை. எனினும், போட்டிகளில் 81.3 செ.மீ (32 அங்குலம்) நீளத்திற்கும் 31.8செ.மீ (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் உள்ள மட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மட்டையின் தலைப்பகுதி (வலைப் பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும் 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் எடைக்கு வரையறை இல்லை.
சிறப்புப் போட்டிகள்
சென்னை – நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டரங்கம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ஆகியன சிறப்புப் போட்டிகளாகும். 1877ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் விம்பிள்டன் என்னும் இடத்தில் முதன்முதலில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி ட்லைட் எப் டேவிஸ் என்பவரால் தொடங்கப்பட்டு கோப்பை வழங்கப்பட்டது.
உலகத் தரம் வாய்ந்த டென்னிஸ் விளையாட்டரங்கம் நமது சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதில் பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டுகள் ஆண்டுதோறும் நடக்கின்றன.