அன்பு மடல்
செவ்வாய்க்குப் போன இந்திய ராக்கெட்
மங்கள்யான் விண்கலம்
பாசத்திற்குரிய பேத்திகளே, பேரன்களே,
என்ன நலமா? நீங்கள்தான் எவ்வளவு வாய்ப்புப் பெற்றவர்கள்! அவ்வளவு வசதிகளும், கண்டுபிடிப்புகளும், உங்களது அறிவை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் உதவிட எத்தனை எத்தனை புதுமையான நவீன அறிவியல் கருவிகள் விஞ்ஞான தொழில்நுட்பப் பெருவளர்ச்சிக் காலமான இக்காலத்தில் உங்களுக்குக் கிடைக்கிறது; கிடைத்துக் கொண்டே இருக்கிறது!
முன்னொரு காலத்தில் தொலைப்பேசி என்றால் என்னவென்று தெரியுமா?
வீடியோ காட்சிகள் என்றால் விளங்குமா?
மாயாஜால வித்தைகளையும், கதைகளையும் தானே எங்கள் பாட்டி, தாத்தாமார்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்…
ஆனால், இப்போ… அப்படியா?
நீங்கதானே எங்களுக்கு எப்படியெல்லாம் கைத்தொலைப்பேசிகளை (செல்போன்களை) அழுத்தி, எதை எதைப் பேசுவது என்று கற்றுத் தருகிறீர்கள்!
இப்போதெல்லாம் தாத்தாக்கள் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தது போக, பேரக் குழந்தைகள் அல்லவா தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள், தொழில்நுட்பம் அடங்கிய பல செய்திகளை!
எனவே, இக்காலமும், இனி வரக்கூடிய காலமும் குமர-குருபரர்கள் ஆன உங்களது பொற்காலங்கள்தான்!
நம் தங்கத் தாத்தா பெரியார் தாத்தா அவர்கள்,
இனிவரும் உலகம் என்ற ஒரு பேச்சு (அது புத்தகமாகவும் வந்துள்ளதே) அதில் இப்போது வந்துள்ள கைத்தொலைப்பேசி காணொளிக் காட்சிகள் (வீடியோ கான்பரன்சிங் – video Conferencing) பற்றியெல்லாம் சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னேயே சொல்லிவிட்டார்களே!
என்ன ஆச்சரியம்!
இப்போது நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் எவ்வாறு பரப்பப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம்.
நல்ல நாள்; நல்ல நேரம்; என்றெல்லாம் பார்த்து (புரட்டர்கள் பிழைக்க இது ஒரு வழி) நமது நேரத்தில் முக்கியமான பகுதியை வீணடிக்கிறார்கள்!
உழைக்கும் மக்களுக்கு எந்த மணித்துளியும் முக்கியமல்லவா? நேரத்தை – காலத்தை வீணடிக்கலாமா?
செவ்வாய் கிரகம்
செவ்வாய் என்றால் வெறும் வாய் அந்த நாளில் எந்தப் பணியைச் செய்தாலும் விளங்காது; வெற்றி பெறாது என்று சொல்லி நம்மை ஏமாற்றினார்கள், காலங்காலமாய்!
இப்போது அது வெறும் டூப்பு என்பது புரிந்துவிடவில்லையா குழந்தைகளே!
செவ்வாய்க்கோள் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளதே! அதற்கே ஒரு விண்கலத்தை _- ராக்கெட்டை _- நமது விஞ்ஞானிகள் ஆயிரம் பேர்கள் கடுமையாக உழைத்து வெற்றிகரமாக செலுத்திவிட்டார்களே!
அமெரிக்காகூட நமக்குப் பின்னால் நாசாவிலிருந்து தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது!
இதுவரை 2 லட்சம் மைல்கள் பயணம் செய்து போய்க்கொண்டே இருக்கிறது. (இதை எழுதும்வரை) அடுத்த டிசம்பர் ஒன்றாம் தேதி அங்கே போய்ச் சேருமாம்!
என்னே அற்புதச் சாதனை!
செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட அந்த விண்கலம்பற்றி சுவையான தகவல்கள் இதோ!
மார்ஸ் ஓபிடெர் மிஷன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் மங்கள்யான் விண்கலம் 450 கோடி இந்திய ரூபா செலவில் மார்ஸ் ஓபிடெர் மிஷன் திட்டத்தின் கீழ் இந்த மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. இது உலகில் மிகக்குறைந்த செலவில் உருவான செய்மதித் திட்டமாகும். மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சிறீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்தக் காலத்திலும், மத்திய அரசின் தொல்பொருள் துறை, யாரோ சாமியார் கூறியதாகக் கூறி, தங்கவேட்டைப் புதையலை _- உத்தரப்பிரதேசம் உன்னா (Unno) என்ற இடத்தில் செய்து உலக அளவில் அவமானப்பட்டதுதான் மிச்சம்!
உலகமே நமது மத்திய அரசினைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறது.
ஆனால், மங்கள்யானைச் செலுத்தியுள்ளதன் மூலம் அறிவியலின் வெற்றியை _ அறிவியலின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அன்புடன்,
உங்கள் தாத்தா
கி. வீரமணி