பிரபஞ்ச ரகசியம் 6
சனி:மனிதனைப் பாதிக்குமா?
– சரவணா ராஜேந்திரன்
சனிக்கோளின் தட்டையான தென்துருவம்
கடந்த தொடரில் சனிக்கோளின் நிலவான டைடனில் இறங்கி வந்தோம். இப்போது நாம் அதன் தாய்க்கோளான சனி என்றழைக்கப்படும் கோள் நோக்கிப் பயணிப்போம். சனிக்கோள்: மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து பரந்து விரிந்த வான்வெளியை இரவு முழுவதும் பார்த்துகொண்டே வந்துள்ளான்.
எங்கும் சிறிய மின்னிடும் நட்சத்திரங்கள், ஒளிராத பொருட்களை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்த சிலவற்றைக் கோள்கள் என்றான், அவற்றில் ஒன்று மட்டும் காதுகளுடைய முகம்போல் வித்தியாசமாகத் தெரிய அதைப்பற்றி பல கட்டுக்கதைகளை மெல்ல மெல்ல கிளப்பிவிட்டார்கள்.
அந்தக் கட்டுக்கதைகள் மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு வளர வளர மக்களை ஏமாற்றும் காரணியாக மாறத் தொடங்கியது. தனது வாழ்வின் தற்செயல் நிகழ்வுகளை எல்லாம் விண்ணில் வித்தியாசமாகத் தெரிந்த அந்த ஒரு பொருளுடன் தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டு இருந்தான். நாட்கள் ஆகஆக சில சோம்பேறிகள் கூட்டம் அதையே வயிறு வளர்க்கும் கலையாக மாற்றிக் கொண்டது.
வானில் தெரிந்த அந்த வித்தியாசமான பொருள்தான் சனிக்கோள். ஏன் இது வித்தியாசமாகத் தெரிகிறது? சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள்தான் சனிக்கோளை அதிக ஆர்வம் கொண்டு பார்க்கக் காரணமாகிவிட்டது. சனி என்ற சொல்லிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இதுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை.
சனிக்கோள் பூமியைவிட 764 மடங்கு பெரியது. அதாவது, சனிக்கோளில் 764 பூமியை அடக்கிவிடலாம் (வியாழன் 1,321 மடங்கு பெரியது). இக்கோள் நமது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள் ஆகும், இக்கோள் நமது சூரியக் குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியாக அதிக ஈர்ப்புவிசை கொண்ட கோளாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களும் தன் அச்சில் சாய்ந்தே உள்ளன.
சனிக் கோளும் தன் அச்சில் 26.73 டிகிரி சாய்வாகவே சூரியனைச் சுற்றிக்கொண்டு இருக்கிறது. சனிக்கோள் ஒருமுறை தன்னைத் தானே சுற்ற 10 மணி, 32 நிமிடம் 35 நொடிகள் ஆகிறது. இந்தத் துல்லியமான தகவலினை 2007 செப்டம்பரில் வயோஜர் மற்றும் கசினி போன்ற விண்கலன்கள் அனுப்பிய தகவல்கள் மூலமாக அறிந்து கொண்டோம்.
இதுதான் சனியின் ஒருநாள் என்பதாகும். சனி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர நம் பூமியின் நேரக் கணக்கில் 29 ஆண்டுகள், 167 நாட்கள், 6 மணி மற்றும் 40 நிமிடங்கள் ஆகின்றது. இதுதான் சனிக்கோளின் ஓர் ஆண்டு ஆகும். வியாழன் கோளைப்போலவே இதுவும் ஒரு அடர்த்தியான வாயு அல்லது மெல்லிய மேற்புறத்தைக் கொண்ட கோள் என்று முன்பு முடிவு செய்திருந்தார்கள், ஆனால், கசினி விண்கலம் 2005ஆம் ஆண்டு சனிக்கோளில் நெருங்கிச் செய்த ஊடுகதிர் பரிசோதனை மற்றும் அகச்சிவப்புக் கதிர் பரிசோதனையில் சனிக்கோள் திடமான ஒரு கோள் என உறுதிப்படுத்தப்பட்டது.
சனி வளையத்தில் உள்ள பனிக்கட்டிகள்
இதன் மேற்பரப்பில் தனித்த ஆக்ஸிஜன் முற்றிலும் இல்லை என்றாலும் ஆக்ஸிஜனேற்றம் கொண்ட தனிமங்கள் காணப்படுகின்றன. சனிக்கோள் சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் இதன் மேற்பகுதி மிகவும் குளிர்ந்த நிலையில் உள்ளது. மேற்பகுதி வெப்பநிலை _130 டிகிரியிலிருந்து- _-191 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். இதன் அபரிதமான சுழற்சித் திறனால் இதன் துருவங்கள் தட்டையாக மாறிவிட்டன.
வியாழன் கோளைக் கண்டறிந்த கலிலியோதான் சனிக்கோளின் தனித்துவம் வாய்ந்த வளையங்களை முதன்முதலாக நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்தவர். சனிக்கோளின் மேற்பகுதி உயிரினம் வாழத்தகுதியான இடம் அல்ல. இதற்கு முக்கியக் காரணம் சனிக்கோளில் பல நூறு கிலோமீட்டர்வரை ஹைட்ரஜன் உறைந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக திடமான தரைப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை ஊகிக்க முடியவில்லை.
மேலும், நமது பூமியைப் போன்று பாறைகள் மற்றும் மணல் பகுதிகள் உள்ளதா என்றும் தெரியவில்லை. சனிக்கோளின் உட்கரு அதிக அளவு மின்னேற்றம் கொண்ட ஹீலியம் அணுக்களால் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இக்கோள் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிக அளவு காந்தப்புலன் கொண்ட இயற்கைக் காந்தமாகத் திகழ்கிறது.
அதிக அளவு கதிர்வீச்சு இதன் மேற்புறத்தில் காணப்படுவதால் இங்கு உயிர்மத் தனிமங்களான மீத்தேன் மற்றும் உயிர்ம கரிப்பொருள் (Organic compound) இருக்க வாய்ப்பில்லை. சனிக்கோளிற்கும் பூமிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்பதற்கு மற்றொரு உதாரணம், இதன் அதீதமான கதிரியக்க வீச்சுகள் சூரியப்புயலின் காரணமாக எதிர்த்திசையை நோக்கிப் பயணிக்கின்றன.
இதன் அருகில் உள்ள கோளான வியாழனில்கூட இந்தக் கதிரியக்கத்தின் வீச்சால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. அப்படி இருக்க சனியின் பாதிப்பு, ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனி, பாதச்சனி, கண்டச்சனி என்று ஜோதிடத்தில் ஏதோதோ பொய்களைக்கூறி மக்களை நம்பச் செய்வது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும். சனிக்கோளால் பூமிக்கோ மனிதனுக்கோ அல்லது வேறு உயிரினத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.
சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள்:
சனியின் வளையங்களைப் புரிந்து கொள்ள ஒரு எளிய செய்முறை:- அலங்கரிக்கப்பட்ட பம்பரம் அதிவேகத்தில் சுழலும் போது அதன் சக்தி அனைத்தும் மத்தியப்பகுதியில் வந்துவிடுகிறது. இதே போன்றுதான் சனிக்கோளும் தன்னைத்தானே 10 மணி நேரத்திற்குள் சுற்றுகிறது.
இதன் சுழற்சி வேகம் 9.87 m/sec என்ற விகிதத்தில் இருப்பதாலும் அதிக அளவு காந்தத்தன்மையும் சேர்ந்து தனக்கு அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் சனிக்கோளின் மத்திய ரேகைப் பகுதியில் ஈர்த்து விடுகிறது. இதனால்தான் சனிக்கோளும் அதன் வளையங்களும் மனித இனத்தை ஏதோ வித்தியாசமான ஒன்றாக பார்க்கவைத்து விடுகிறது. சனிக்கோளின் வளையங்களில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வியந்து போவீர்கள்.
அதன் வளையங்களில் 80 சதவீதம் பனிக்கட்டிகள். ஆம், பிரபஞ்சம் எங்கும் நீர் இருப்பதைப் போல சனிக்கோளில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. தற்போதைய கணக்கின்படி சனிக்கோளின் வளையத்தில் உள்ள பனிக்கட்டிகளால், நமது அனைத்துக் கோள்களிலும் மாபெரும் சமுத்திரங்களை உருவாக்கிவிடலாம்.
இந்தப் பனிக்கட்டிகள் சூரிய மண்டலத்தை நெருங்கிய ஏதோ ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து சிதறியவைகளாக இருக்கலாம் என்றும் அப்படிச் சிதறிய காலம் சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கும் முன்பு நடந்தவையாக இருக்கும் என்றும் தெரிகிறது. ஆனால், இதற்கும் நமது பூமியில் உள்ள தண்ணீருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்தப் பனிக்கட்டிகளில் சூரிய ஒளி பட்டுச் சிதறும் போதுதான் நமக்கு அழகான வளையங்கள் புலப்படுகிறது.
சனிக்கோள்களின் வளையங்களை 6 பிரிவாகப் பிரிக்கலாம். ஆங்கிலத்தில் ஏ முதல் எஃப் வரையிலான அடுக்குகளாகப் பிரித்துள்ளனர். முதல் அடுக்கு மிகவும் பெரியது. பல நூறு கிலோமீட்டர்கள் கொண்ட தனித்த பனிக்கட்டிகளைக் கொண்டுள்ளது.
சூரிய உதயத்தில் சனி, வளையம், டைடன்
சில பனிக்கட்டிகளின் அளவு நமது இமயமலையைவிடப் பெரிதாக உள்ளது. இங்கு தூசுமண்டலங்கள் அதிகமாகச் சேர்ந்து உள்ளதால் நமக்கு அந்தப் பகுதி மங்கலாகத் தெரிகிறது. இதனை அடுத்த வளையம் மிகவும் வெண்மையாக அழகாகக் காணப்படுகிறது. இந்த வளையத்தில் தூய்மையான நீர் பனிக்கட்டி வடிவில் உள்ளது. இங்கு எப்போதும் ஒன்றுடன் ஒன்று மோதிச் சிதறி மீண்டும் ஒன்றிணைந்து பலவித வடிவங்களில் பனிக்கட்டிகள் உருவாகிக் கொண்டே இருக்கும்.
டி மற்றும் சி வளையங்கள் சனிக்கோளை ஒட்டி இருப்பதால் அதன் வளிமண்டலத்தில் இருந்து வரும் கதிரியக்கம், சனிக்கோளில் இருந்து வெளிப்படும் சில கந்தகம் மற்றும் இதர கரிம தனிமங்கள் இந்தப் பகுதிகளில் வந்து ஒன்றுகூடி சனிக்கோளைச் சுற்றிவருகிறது.
இந்த முதல் இரண்டு வளையங்கள் நமது சூரிய மண்டலத்திலேயே அதிக அளவு நச்சுத் தன்மையுடைய பகுதியாகும். இந்த வளையத்தில் சிக்கிக் கொண்ட எந்தப் பொருளும் வெளியேற முடியாது. அந்த அளவிற்கு இந்த வளையத்தில் உள்ள வாயு மற்றும் தூசிகள் அன்னியப் பொருட்களை ஈர்த்துக் கொள்கின்றன.
இறுதியாக உள்ள எஃப் வளையம் வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் விண்கற்களைத் தனக்குள் ஈர்த்து ஒரு ஒழுங்கான பாதையில் சுற்றும்படி அமைந்துள்ளதால் இந்தப் பகுதி மிகவும் அழகாகத் தென்படுகிறது. இந்த வளையத்தில் விண்கற்கள் எப்போதும் தங்களுக்குள் மோதிக்கொண்டு கடுமையான வெப்பத்தை வெளியிடுவதால் அலங்கார விளக்குபோல் ஒளிர்கிறது.
சனியும் – கசினியும் (நாசா 2009)
மேலும், இந்த வளையத்தைப்பற்றி நாசா தனித்து ஆய்வு செய்து வருகிறது. ஒருவேளை பனிக்கட்டிகளுக்கு அருகில் உள்ள இந்த விண்கற்கள்தான் ஈரப்பதமான சூழலில் உயிர்களை ஈர்த்து பூமிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்ற கூற்றும் அறிவியலாளரிடம் உள்ளது.
சனிக்கோளின் வளையங்கள் 6,630 கிலோமீட்டரில் இருந்து 1,20,700 கிலோ மீட்டர் வரை தங்களது இருப்பிடமாகக் கொண்டு சனிக்கோளைச் சுற்றிவருகின்றன.
நமது சூரியக் குடும்பத்தில் சில கோள்களுக்கு இருக்கும் துணைக்கோள்கள் போல் (நிலவு) சனிக்கோளிற்கும் பல நிலவுகள் உண்டு.
அவையாவன:
1.டைடன் (Titan), 2.ரேஹ (Rhea), 3.அய்ப்டஸ் (Iapetus), 4.டையோன் (Dione), 5.தித்தேஸ் (Tethys), 6.என்சிலாடுஸ் (Enceladus), 7.மிமாஸ் (Mimas), 8.ஹைபெரின்(Hyperion), 9.ப்ரொமெதெஸ் (Prometheus), 10.பண்டொர (Pandora shepherd moons), 11.பொயிபி (Phoebe), 12.ஜனஸ் (Janus), 13.எபிமெதியஸ் (Epimetheus), 14.ஹெலெனே (Helene), 15.டெலிஸ்டொ (Telesto), 16.கலிப்ஸோ (Calypso), 17.அட்லஸ் (Atlas), 18.பான் (Pan), 19.யாமீர்(Ymir), 20.பாலிஅஃக் (Paaliaq), 21.சிரனஃக் (Siarnaq), 22.டார்வொஸ் (Tarvos), 23.கிவியுக் (Kiviuq), 24.இஜிரக் (Ijiraq), 25.த்ரியெமர் (Thrymr), 26.ஸ்கதே (Skathi), 27.மெந்தலிஃபராரி (Mundilfari), 28.ஏரிப்போ (Erriapo), 29. அல்பிஒரக்ஸ் (Albiorox) என்பன இதுவரை சனிக்கோளைச் சுற்றிக்கொண்டு இருக்கும் நிலவுகளில் கண்டுபிடிக்கப்பட்டு பெயர் வைக்கப்பட்டவையாகும்.
இந்தப் பெயர்கள் அனைத்தும் கிரேக்கப் புராணக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஆகும். 2007 வரை சுமார் 60க்கும் மேற்பட்ட நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. மேலும் பல நிலவுகள் அங்கு இருப்பதால் அவற்றைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் சூரியன் வெடித்துச் சிதறும் போது சனிக்கோள்களின் டைடன் போன்ற நிலவுகள் உயிர்வாழ ஏற்றவையாக இருக்கும். கோள்கள் உருவாகத் தொடங்கும்போது சூரியனின் அபார ஈர்ப்பு விசையால் அணுப்பிணைப்புகள் உருவாகிறது.
இதன் காரணமாக ஹீலியம், ஹைட்ரஜன் போன்றவை பல்வேறு வெப்ப நிலையில் உலோகங்களாகவும் அலோகங்களாகவும் மாறி குளிர்ந்து கோளாக மாறியுள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களுள் 50 விழுக்காடு ஒரே வகையான குணத்தைக் கொண்டு உள்ளன. அதாவது சூரியனின் ஈர்ப்புவிசையை விட்டு வெளியே செல்லாமல் சூரியனைச் சுற்றிவருவது. சனிக்கோளைப்பற்றிய புதிய செய்திகளை அறிந்துகொண்டோம்.
சனிக்கோளை கலிலியோ 17ஆம் நூற்றாண்டிலேயே கண்டறிந்து கூறிவிட்டாலும், அதன் அருகில் சென்று தற்போது நாம் அறிந்த பல உண்மைகளை வழங்குவதற்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 4 விண்கலங்களை அனுப்பியது. இதில் முதலாவதாக அமெரிக்க நாசாவின் பயோனிர் 11 என்ற விண்கலம் 1979-இல் சனிக்கோளை அருகில் சென்று ஆய்வு செய்துவிட்டுத் திரும்பியது.
பின்னர் வயோஜர் 1 (செப்டம்பர் 12, 1980) மற்றும் வயோஜர் 2 (ஆகஸ்ட் 25, 1981) விண்கலன்கள் அனுப்பப்பட்டன. இறுதியாக கசினி விண்கலம் 2004-ஆம் ஆண்டு சனிக்கோளை நோக்கிப் பறந்தது. சனிக்கோளை மிகவும் அருகில் சென்று ஆய்வு செய்த கசினி, சனியின் பல இரகசியங்களை நமக்குக் கொடுத்தது.
அமைதியான விண்வெளியில் சனிக்கோளின் வளையங்களில் உள்ள விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் ஓசையை முதன்முதலில் கசினி பதிவு செய்து அனுப்பி நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.
இனி, நமது சூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி மற்றும் புதன் கோள்கள் பற்றி நமக்குத் தெரியாத பல புதிய தகவல்களை அறிய அந்தக் கோள்களை நோக்கிப் பயணிப்போம்.