முதல் மதிப்பெண்ணுக்கு மோதாதீர்!
– சிகரம்
முதல் மதிப்பெண் மோகம், வேகம், தாகம், கிடைக்காவிடின் சோகம் என்பவை பெற்றோர், நிர்வாகம், மாணவர் என்ற முத்தரப்பிலும் முனைந்து நிற்கும் முதன்மை உணர்வு.
சில நிர்வாகமும், சில பெற்றோரும் இதற்காக மாணவர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும், நிம்மதிச் சிதைப்பும், உளைச்சலும், உதையும், வதையும் ஏராளம்!
100க்கு 97 மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டாள். காரணம், முதல் மதிப்பெண் பெற 1 மதிப்பெண் குறைந்துவிட்டதாம்! எவ்வளவு கொடுமையான முட்டாள்தனம்; மூளைச்சலவை; மூடநம்பிக்கை பாருங்கள்!
ஒரு மதிப்பெண்தான் வாழ்வா? 97 மதிப்பெண் பெற்றது என்ன சாதாரண சாதனையா? சாதாரண உழைப்பா? அதைவிட ஒரு மாணவர் என்ன சாதிக்க வேண்டும்?
இங்கு அவள் ஆயுளைப் பறித்தது எது? அறியாமையா? வறட்டுப் பெருமையா? மானப் பிரச்சனையா? பெற்றோர் கொடுத்த உளைச்சலா? விசாரித்தபோது பெற்றோர் திட்டியதுதான் காரணம் என்று தெரிந்தது. இப்படி ஒரு படிப்பாளிப் பெண்ணைப் பாராட்டுவார்களா? பழிப்பார்களா?
படிக்காத பெற்றோர் யாரும் இப்படிச் செய்வதில்லை; படித்த முட்டாள்கள் படுத்தும் பாடுதான் இது! முதல் மதிப்பெண்ணில்தான் தன் மானமும், மரியாதையும் அடங்கியிருப்பதாக அலையும் அவலம்.
40 மாணவர்களில் முதன்மை வந்தால், நாலு பள்ளிகளில் முதன்மை இல்லை; மாவட்டத்தில் முதன்மை வந்தால் மாநிலத்தில் முதன்மை இல்லை.
மாநிலத்தில் முதன்மை வந்தவர் மேற்படிப்பில் முதன்மை இல்லை! இதுதானே யதார்த்த நிலை? இதற்கா இத்தனைப் போட்டி? பொறாமை?
பகுத்தறிவின்பாற்பட்ட முயற்சி எது என்றால், நாம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அதற்கேற்ற தகுதி மதிப்பெண்ணை அடைய உழைப்பதே! சரியான அணுகுமுறை அதுவே!
நமக்குத் தேவையான உணவை உண்பதுதானே உடல்நலம் காக்கும் அறிவுடைய செயல்? அடுத்தவனைவிட ஒரு உருண்டை கூடுதலாகச் சாப்பிட வேண்டும் என்று முனைவது முறையா? அதுதானே மதிப்பெண்ணுக்கும்!
பணிக்குப் போகும்போதும், படிக்கப் போகும்போதும், அவை கிடைக்க என்ன மதிப்பெண் தேவையோ அதைப் பெற திட்டமிட்டு முயலுவது என்ற செயல்திட்டமே சிறந்தது, உகந்தது; சமூக நல்லிணக்கம், மனிதநேயம், நட்பு இவற்றிற்கு ஏற்றது. மற்றபடி போட்டியிட்டு மோதுவது மூடத்தனம் என்பதை பெற்றோர் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கில் தன் பள்ளி முதலிடம் பெறவேண்டும் என்ற சுயநலத்தில், மாணவர்களை வாட்டி வதைப்பது கண்டிக்கத்தக்கது.
ஒரு மாணவனை முதல் மதிப்பெண் வாங்க வைக்க அலைவதைத் தவிர்த்து, 100 மாணவர்களைத் தரமாக உருவாக்க முயற்சிப்பதே உண்மையான கல்விச் சேவை. தன் பிள்ளைக்குத் தேவையான மதிப்பெண் கிடைக்க பிள்ளைக்கு வேண்டிய கடமைகளைச் செய்வதே பெற்றோரின் பொறுப்பு.
தன் எதிர்காலத் திட்டத்திற்கு – இலக்கிற்கு ஏற்ற மதிப்பெண்ணைப் பெறப் பாடுபடுவதே படிப்போர்க்குச் சிறப்பு. அதை விடுத்து முதல் மதிப்பெண்ணுக்காக மோதுவதும், சாவதும் முட்டாள்தனம்; மூடத்தனம்! எனவே, பெற்றோரும், நிர்வாகத்தினரும், மாணவரும் இந்த மூடத்தனத்திலிருந்து முதலில் விலக வேண்டும்.
முயற்சிக்கு ஓர் உந்துதல் வேண்டாமா? சிலர் கேட்பர். முதல் மதிப்பெண்தான் உந்துதலா?
அது போட்டிக்கும் பொறாமைக்குமே வழிவகுக்கும். தனக்குத் தேவையான மதிப்பெண் இவ்வளவு. அதைப் பெறவேண்டும் என்றால் உந்துதல் வராதா?
கல்வி என்பது விளையாட்டுப் போட்டியோ, பந்தயமோ அல்ல. அது அறிவுத் தெளிவு; ஆற்றல் வளர்ப்பு.
ஓட்டப் பந்தயத்தில்தான் முதல், இரண்டு, மூன்று என்பதெல்லாம். படிப்பில் மதிப்பெண்ணில் அல்ல.
விளையாட்டில் போட்டி ஆர்வம் தரும்; கல்வியில் போட்டி உளைச்சல் தரும்.
98% மதிப்பெண் பெற்றிருக்கிறோம் என்று உண்மையில் மகிழ்வதற்குப் பதில், 99% இன்னொருவன் பெற்று முதலிடம் வந்து விட்டானே! என்று ஏங்கிக் கவலைப்படுவது அறிவிற்கு அழகா?
98% பெறும் அளவிற்கு நாம் படிப்பாளி என்று பெருமை கொள்ளமுடியாமல் செய்வது முதல் மதிப்பெண் மோகம் என்றால், அது மூடத்தனம் அல்லவா?