ஆரோக்கிய உணவு எல்லாருக்கும் ஏற்ற கொய்யாப் பழம் சாப்பிடுங்க…! (Guava)
ஏழைகளின் பழம் என்றழைக்கப்படும் கொய்யாப் பழத்திற்கு வெப்ப நாடுகளின் ஆப்பிள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மத்திய ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட கொய்யாப் பழம் இந்தியாவில் போர்த்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிசிடியம் கௌஜவா என்ற தாவரவியல் பெயரினை உடையது. ஆங்கிலத்தில் Guava என்றழைக்கப்படும் பெயரின் அடிப்படையிலேயே தமிழில் கொய்யா எனப்படுகிறது.
வைட்டமின் சி சத்து அதிகமாக கொய்யாவில் இருப்பதால் இது வைட்டமின் சி சுரங்கம் என்று பெயர் பெற்றுள்ளது. இதனால் சளித்தொல்லையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். சிறுகுடல், பெருங்குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யும்.
புரதம், நார்ச்சத்து, மாவுச் சத்து, பெக்டின், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி போன்ற சத்துக்களையும் உள்ளடக்கி நரம்புகளுக்கு வலுவூட்டும் தன்மையுடையது.
கொய்யாப் பழத்தினை நன்கு கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, தோலுடன் கடித்துச் சாப்பிட வேண்டும். தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
கொய்யாப் பழத்தினைப் பக்குவம் செய்து கூழ், ஜெல்லி, சிரப், பேஸ்ட், பாலேடு, கொய்யா முரப்பா, ஜாம் போன்ற பலவிதங்களில் உண்ணலாம்.
இரத்த சோகை உடையவர்கள் கொய்யாப் பழத்தினைக் கூழ் செய்து குடித்து வந்தால் இரத்தம் விருத்தியாகி சோகை நோய் நீங்கும். கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொய்யாப்பழக் கூழிற்கு உண்டு.
கொய்யாக்காய் சாப்பிட்டால் உடலுக்கு உறுதியும் தோலுக்குப் பாதுகாப்பும் கிடைக்கும். மலச்சிக்கலைப் போக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் கலந்திருக்கும் அதிக அளவிலான வேதிப் பொருள்கள் நமக்கு அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகின்றன. உணவு உண்டபின் இரண்டு மணி நேரங்கழித்து கொய்யாப் பழம் சாப்பிட இந்த வயிற்றுப் புண் குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கொய்யாக்காய் குறைக்கிறது. அதிக இரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொய்யாவுக்கு உண்டு.
தினமும் 2 கொய்யாப் பழங்கள் சாப்பிட்டு வர கொழுப்புச் சத்து குறையும் என்கிறது இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் (Heart Research Laboratory of India). கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதால் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.