விளையாட்டு
மேசைப் பந்தாட்டம்(Table Tennis)
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிக்-_பாங் என்று அறியப்பட்ட மேசைப் பந்தாட்டம் தற்போது அனைவராலும் விளையாடப்பட்டு வருகிறது.
மேசையின் இருபுறமும் நின்று சிறிய கைப்பிடி அமைந்த வட்டமான மட்டையைக் கொண்டு தக்கைபோல் உள்ள பிளாஸ்டிக் பந்தினை எதிரே விளையாடுபவர் தடுத்து அடிக்க முடியாமல் முன்னும் பின்னுமாக அடித்து விளையாடும் விளையாட்டே மேசைப் பந்தாட்டம் எனப்படுகிறது.
மேசையின் நடுவில் உயரம் குறைவாகக் கட்டப்பட்டிருக்கும் சிறிய வலையைத் தாண்டி எதிராளியின் மேசைப் பகுதியில் பந்து விழும்படி அடிக்க வேண்டும். எதிராளியின் மேசையில் பட்டு குதிக்கும் பந்தினை எதிராளி அவருக்கு எதிர்ப்புற மேசையில் படும்படி திருப்பி அடிக்கத் தவறினால் அந்தப் பந்துக்கான புள்ளிக் கணக்கினை இழந்துவிடுவார்.
எதிராளியின் மேசையின்மீது ஒருமுறைக்கு மேல் பந்து குதித்து விழுந்தால் எதிராளி புள்ளி இழப்பார்.
எதிராளியின் மேசையின் மாற்றுப் புறத்தில் (இட வலமாக அல்லது வல இடமாக) பந்து விழுமாறு அடிக்க வேண்டும்.
மேசை
2.74 மீட்டர் (9 அடி) நீளமும், 1.525 மீட்டர் (5 அடி) அகலமும், 76 செ.மீ. (30 அங்குலம்) உயரமுமுடைய மேசையின் நடுவில் 15.25 செ.மீ. (6 அங்குலம்) உயரத்தில் வலை அமைக்கப்பட்டிருக்கும். மேசையின் மீது அடர்ந்த நிறத்தில் மேட் (Matte) அமைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக மரத்தினால் அமைந்த மேசை விளையாட்டிற்குப் பயன்படுத்தப்படும்.
ராக்கெட் (Racket):
மட்டையின் கைப்பிடி வழுக்காமல் இருக்க கட்டையின்மீது ரப்பரால் ஒட்டப்பட்டிருக்கும் பகுதி ராக்கெட் எனப்படும். இதன் ஒரு பக்கம் சிவப்பு நிறத்திலும், மறுபக்கம் கருப்பு நிறத்திலும் காணப்படும்.
மேசையின் பரப்பு அடர்ந்த பச்சை அல்லது நீல நிறத்தில் இருக்கும். கோடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். மேசையின் நடுவில் நீளவாக்கில் போடப்பட்ட வெள்ளைக்கோடு இருவர் விளையாட்டிற்குரியது. இந்தக் கோடு, முதல் பந்து அடிப்பவர் மாற்றுப்புறத்தில் விழும்படி அடிப்பதற்கு அடையாளமாகவும் பயன்படும்.
டாஸ் போட்டுப் பார்த்து விளையாட்டு ஆரம்பிக்கப்படும். பந்தினை உள்ளங்கையில் வைத்து மட்டையால் அடித்து விளையாட்டினைத் தொடங்குவர். இதற்கு Freehand என்று பெயர். பந்தானது முதலில் அடிப்பவரின் பகுதியின் கோட்டினைத் தொட்டு (வலையில் படாமல்) எதிர் அணியினரின் பகுதியில் உள்ள கோட்டினைத் தொட வேண்டும்.
உடலினாலோ, துணியினாலோ பந்தினைத் தடுக்கக்கூடாது. எதிரணியில் விளையாடுபவரும் நடுவரும் பந்தினைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு ஆட்டத்திற்கு 21 புள்ளிகள் உண்டு. எதிராளியைவிட 2 புள்ளிகள் அதிகமாக எடுக்க வேண்டும். ஆண்கள் போட்டியில் 5 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும் பெண்கள் போட்டியில் 3 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும் வெற்றி பெற்றவராக அறிவிப்பர்.
உலக சாம்பியன் போட்டியில் 7 வகையான பரிசுகள் வழங்கப்படும். அவற்றில் ஆண்கள் அணிக்கான கோப்பை ஸ்வாதிலிங் கோப்பை (Swathyling Cup) எனவும் பெண்கள் அணிக்கான கோப்பை கார்பில்லோன் கோப்பை (Corbillon Cup) எனவும் அழைக்கப்படுகின்றன.
2014இல் டோக்கியோவில் குழு போட்டிகளும், 2015இல் சீனாவின் சூசௌ-_வில் தனிநபர் போட்டிகளும் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டியில் 1988ஆம் ஆண்டு இவ்விளையாட்டு சேர்க்கப்பட்டது.