மேதைகளின் வாழ்வில்
பாடம் புகட்டிய கென்னடி
குருஷேவுடன் கென்னடி
ரஷ்ய நாட்டின் அதிபராக குருஷேவ் இருந்தபோது, அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்தவர் கென்னடி. இரு வல்லரசு அதிபர்களும் வீட்டோ அதிகாரம் உடையவர்கள்.
வீட்டோ என்பது, உலகத்தின் எந்த ஒரு பிரச்சினையையும் அய்.நா. சபையில் ஆராயும்போது இந்த இரு நாட்டு அதிபர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இருவரில் ஒருவர் மறுப்புத் தெரிவித்தாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது!
அய்க்கிய நாடுகள் சபையில் அப்போது பொதுச் செயலாளராக இருந்தவர் திடீரென்று இறந்துவிட்டார். அந்த இடத்திற்கு உடனே ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறினார் கென்னடி. இதனைக் கேட்ட குருஷேவ், அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமித்தால் போதாது. மூன்று பேர் தேவை, அப்போதுதான் உலகப் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க முடியும் என்றார்.
ரஷ்ய அதிபரின் கூற்று கென்னடிக்குப் பிடிக்கவில்லை. அதேநேரம், அவரது கூற்று தவறானது என உணர்த்த விரும்பினார். எனவே, ஒரு குட்டிக் கதையினை ரஷ்ய அதிபருக்கு எழுத நினைத்தார்.
ஒரு விவசாயியிடம் வண்டி ஒன்று இருந்தது. அந்த வண்டியில் ஒரு மிருகத்தைப் பூட்ட அவன் விரும்பவில்லை. மூன்று விதமான பிராணிகளைப் பூட்டினால் வண்டி விரைவாக இழுக்கும் என நம்பினான். வண்டியின் ஒரு பக்கம் ஒரு பெரிய மீனைப் பூட்டினான். இன்னொரு பக்கம் அன்னப் பறவையையும் நடுவில் நண்டினையும் பூட்டினான்.
வண்டி மிகவும் வேகமாகச் செல்லும் என்று நினைத்து வண்டியை ஓட்டினான். மீன் அந்த வண்டியைத் தண்ணீருக்குள் இழுத்தது. அன்னம் ஆகாயத்திற்குத் தூக்கிக் கொண்டு பறக்க நினைத்தது. நண்டு பின்பக்கமாக இழுத்தது. வண்டி எந்தப் பக்கமும் போக முடியாமல் திண்டாடியது.
ஒன்று சரியாகும் என நினைத்து அதற்கு முரண்பாடு செய்வது தவறான முடிவைத்தான் தரும் என்பது வண்டிக்காரனுக்கு அப்போதுதான் புரிந்தது. இது எந்த நாட்டுக் குட்டிக்கதை தெரியுமா? உங்கள் ரஷ்ய நாட்டுக் குட்டிக் கதைதான் என்று எழுதி அனுப்பினார்.
கதையினைப் படித்த குருஷேவ், ஒப்புதல் பதில் எழுதி அனுப்பினார். ரஷ்ய நாட்டுக் குட்டிக்கதை மூலம், ரஷ்ய அதிபருக்கே பாடம் புகட்டிய கென்னடியின் புத்திசாலித்தனத்தை – திறமையைப் பாராட்டித்தானே ஆக வேண்டும்.
நம்பிக்கை
அலெக்சாண்டர்
உலகத்தை வெல்வதற்குப் புறப்பட்ட அலெக்சாண்டர் சிட்னஸ் நதிக்கரையை அடைந்தபோது கடுமையான நோய்க்கு ஆளானார். அலெக்சாண்டருடன் இருந்த கிரேக்க வைத்தியர்களால் நோயைக் குணப்படுத்த முடியவில்லை. அலெக்சாண்டர் இருந்த இடமோ அவரது எதிரி பாரசீக மன்னனுக்கு உட்பட்ட பகுதி.
பாரசீக மன்னனின் அரண்மனை வைத்தியர் வந்து நோயின் தன்மையறிந்து மருந்து கொடுத்தால் குணமாகும் என்று உடன் இருந்தவர்கள் கூறினர். மேலும், எதிரி நாட்டு வைத்தியனை எப்படி வரச் சொல்வது என்றனர். எதைப்பற்றியும் கவலைப்படாத அலெக்சாண்டர் வைத்தியரை அழைத்து வரச் சொன்னார்.
அலெக்சாண்டரைப் பரிசோதித்த வைத்தியர், நோயைக் குணப்படுத்த 2 நாளில் மூலிகை ரசத்துடன் வருவதாகக் கூறிச் சென்றார்.
வைத்தியர் வரும் நாள் காலையில், அலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவர், எதிரி நாட்டு வைத்தியர் மருந்தில் விஷம் கலந்து வருகிறார். எனவே, சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினார். கடிதம் வந்த சிறிது நேரத்தில் வைத்தியரும் வந்து மருந்து கொடுத்தார்.
மருந்தைக் குடித்த அலெக்சாண்டர் கடித விவரம் கூறினார். அலெக்சாண்டர் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையினை நினைத்துத் திகைத்த வைத்தியர், மன்னரே, விஷம் எதுவும் கலக்கவில்லை என்றார்.
நம்பிக்கை என்னும் அச்சாணியை ஆதாரமாகக் கொண்டுதான் இந்த உலகமே சுற்றுகிறது. பாரசீக மன்னனின் அரண்மனை வைத்தியன் தொழில் ஒழுக்கமின்றி இருப்பின் அரண்மனையில் வைத்திருப்பார்களா என நினைத்து நம்பினேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை என்றார்.