தவற்றை எண்ணி வருந்தாதீர்
– சிகரம்
தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது என்பர். தப்பு என்பது வழக்கத்தில் சொல்லப்பட்டாலும் தப்புதல் என்பது துணி துவைத்தல், தப்பித்தல் என்று பொருள் உடையது. எனவே, தெரிந்து செய்வதை தப்பு என்பதைவிட குற்றம் என்பதே சரி. தப்பு என்பது சரியென்பதன் எதிர்ச்சொல் என்று கொள்ளலாம்.
தவறு என்பது தவறிச் செய்வதுதான். வேண்டும் என்று செய்யப்படுவது அல்ல. தவறுதல் என்பது இயல்பு. தவறால் யாரும் எதையும் சாதிக்கமுடியாது. இது உலக உண்மை.
ஆனாலும், இதை பெரியவர்களும் தப்பாகவே அணுகுகிறார்கள், குழந்தைகளும், மாணவர்களும் தப்பாகவே கருதுகிறார்கள். இவை சரியா? கூர்ந்து எண்ணினால் இவை சரியல்ல.
பெற்றோரும், ஆசிரியரும், மற்றோரும் பிள்ளைகள் தவறு செய்தால் உடனே தண்டிக்கின்றனர். குற்றத்திற்குத் தான் தண்டனையே ஒழிய, தவறுக்குத் தண்டனை தருவது குற்றமாகும்.
எனவே, தவறு என்பது என்ன என்பதை பெரியவர்களும் பிஞ்சுகளும் ஆழமாக உள்ளத்தில் கொள்ள வேண்டும். தவறு என்ற சொல்லே ஆழமான பொருளுடையது. தவறி நடப்பது; நம்மையறியாமல் நடப்பது; நம்மையும் மீறி நடப்பது என்ற பொருள் உடையது.
நடந்து செல்கிறோம், வழுக்கி விழுகிறோம்; ஓடும்போது இடறி விழுகிறோம். இது தெரிந்து, வேண்டுமென்று செய்யப்படுவதா? யாராவது வேண்டுமென்று விழுவார்களா? வேண்டுமென்று இடறிக் கொள்வார்களா?
நாம் கவனமாய் இருந்து இவை தவறி நடப்பதால்தான் தவறு எனப்படுகிறது. ஒரு பொருளை எடுத்து வருகிறோம். தவறி விழுகிறது. இது தவறே ஒழிய, குற்றமல்ல.
ஒரு சிறுவன் ஒரு கிண்ணத்தில் பால் எடுத்துக் கொண்டு வருகிறான். திடீரென்று கை நழுவி கிண்ணம் விழுந்து பால் ஊற்றப்படுகிறது. இது தவறு. ஆனால், பெரியவர்கள் குடம் நிறைய பாலை எடுத்துச் சென்று கோவிலில் உள்ள கற்சிலையில் ஊற்றி வீணடிக்கிறார்களே அது குற்றம்.
மேற்கண்டவற்றைச் சிந்தித்தால் குற்றம் எது? தவறு எது என்பது எளிதில் விளங்கும்.
தவறி பாலைக் கொட்டிய சிறுவனைத் தண்டிக்கிறோம்; தெரிந்தே பாலை வீணடிக்கிற பெரியவர்களைப் பாராட்டுகிறோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
தவறு என்பது இயல்பு என்று சொன்னேன். இயல்பு மட்டுமல்ல, தவறுகள்தான் சாதனைகளுக்கே அடிப்படை. தவறுகள்தான் சரிகளுக்கே தாய்.
எனவே, பிள்ளைகள் தவறு செய்தால் திட்டாமல் தண்டிக்காமல், பரவாயில்லை இது எல்லோருக்கும் இயல்புதான். நான் உன் வயதில் இன்னும் தவறு செய்திருக்கிறேன். நீ என்னைவிடப் பரவாயில்லை; நீ சாமர்த்தியம்; நீ கெட்டிக்காரன் என்று சொல்லிப் பாருங்கள். தவறு செய்த சிறுவனுக்குக் குற்ற உணர்வு நீங்கி, ஊக்கம் பிறக்கும்.
மாறாக, நீ எதற்கும் லாயக்கு இல்லை, உன் சாமர்த்தியம் இதுதான்; உன்னை இனி இதைச் செய்யச் சொல்லவே கூடாது என்று கடுகடுத்தால் பிஞ்சு உள்ளம் பேதலிக்கும்; நிலைகுலையும்; தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்; தான் தகுதியில்லாதவன் என்று எண்ணும். எனவே, பெரியவர்கள் தங்கள் அணுகுமுறையை நேர்மறையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகளும் தவறு செய்ததைப் பற்றியே நினைத்து வருந்தவோ, அதைக் குற்றமாகக் கருதவோ கூடாது.
ஒன்று சிறப்பாக செம்மையாக இருக்கிறது என்றால் அதற்கு முன் பல தவறுகள் நடந்திருக்கிறது என்று பொருள். படித்த பாடத்தை ஒரு மாணவன் தவறே இல்லாமல் தேர்வில் எழுதுகிறான் என்றால், அவன் அதற்குமுன் பலமுறை தவறாக எழுதியதால்தான் அது சாத்தியப்பட்டது.
பலமுறை தவறாகப் பாடியவர்தான் மிகச் சரியாக பின்னாளில் பாட முடியும். பலமுறை தவறுகளைச் செய்துதான் பல விஞ்ஞானிகள் சாதனை படைத்திருக்கின்றனர்; பலவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
தவறுகள் ஒருவருக்கு மிகச் சிறந்த ஆசிரியர். பல தவறுகள் போதிப்பதை, வேறு யாரும் போதிக்க முடியாது; உணரும்படி போதிக்க முடியாது!
விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுகின்றவர் பலமுறை தவறு செய்தவர்தான்! சுவையாகச் சமைக்கின்ற நம் தாய் பலமுறை தவறாகச் சமைத்தவர்தான்!
நாடகம் நடிக்கின்றவர்கள் ஏன் ஒத்திகை பார்க்கின்றனர்? தவறுகளைத் திருத்திக் கொள்ளத்தான்!
மாணவர்களுக்குத் திருப்புத் தேர்வுகள் ஏன் நடத்தப்படுகின்றன. தவறுகளைத் திருத்திக் கொள்ளத்தானே!
தவறே நிகழக் கூடாது என்று செயல்படத் தயங்குகின்றவர்களால் எதையுமே செய்ய முடியாது. தவறி, விழுந்து, எழுந்து வருவதே சாதனை.
எனவே, மாணவர்கள் ஒவ்வொரு முறை தவறு செய்யும்போதும் அதைக் குற்றமாக எண்ணி வருந்தாமல், தவறு செய்ததன் மூலம் சரியான ஒன்றைக் கற்றுக்கொண்டோம் என்று நிறைவு கொள்ள வேண்டும். தவறுகள்தான் நமக்குச் சரியானதைக் காட்டும் வழிகாட்டி!