அறிஞர்களின் வாழ்வில்….
நிம்மதி
ஆபிரகாம் லிங்கன்
அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். ஒரு நாள் அவர் அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் ஒரு பன்றிக்குட்டி சேறு நிறைந்த ஒரு பள்ளத்தில் மாட்டித் தவித்துக் கொண்டு இருந்தது. அதைக்கண்ட உடனே வண்டியை நிறுத்துமாறு சொன்ன ஆபிரகாம் லிங்கன்,
வண்டியை விட்டு இறங்கி அந்தப் பன்றிக் குட்டியை நோக்கிச் சென்றார். அருகில் சென்ற லிங்கன், தன் கைகளால் அந்தப் பன்றியைச் சேற்றிலிருந்து வெளியே தூக்கிக் கரையேற்றினார்.
பன்றியைத் தூக்கிவிட்ட ஆபிரகாம் லிங்கனின் ஆடையில் சேறும் சகதியும் அப்பியிருந்தன. ஒரு பன்றியைக் காப்பாற்றுவதற்காக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.
அங்கிருந்தவர்களைப் பார்த்து, நண்பர்களே உண்மையில் பன்றியின் துன்பத்தைப் போக்குவதற்காக மட்டும் நான் உதவவில்லை என்றார் ஆபிரகாம் லிங்கன். அனைவரும் புரியாமல் விழித்தனர்.
அதற்கு அவர், பன்றிக்கு உதவவில்லை என்றால் என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருந்திருக்கும். ஓர் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நிம்மதி பெற்றது. அதுதான் உண்மை என்றார்.
நாட்டு மக்களைக் காப்பதில் மட்டுமல்லாமல் ஒரு அய்ந்தறிவு உயிரினத்தைக் காப்பதிலும் அக்கறை கொண்டு திகழ்ந்ததால்தான் வரலாற்றில் வாழ்கிறார் ஆபிரகாம் லிங்கன்.
– மு.அன்புக்கரசன், பெரியகுளம்
புரட்சியின் பயன்
லெனின்
மாணவர் இயக்கம் ஒன்றில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த 17 வயது மாணவர். கைது செய்யப்பட்ட மாணவர், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது, உடன் வந்த காவலரில் ஒருவர், இளைஞனே, இப்படிப் புரட்சி செய்வதால் பயன் என்ன? உனக்கு முன்னால் பெரியதொரு சுவர் இருப்பது உனக்குத் தெரியவில்லையா? என்றார். சுவர் இருப்பது தெரிகிறது. ஆனால், அது முற்றிலும் பழுதடைந்துள்ளது.
ஒரு தடவை முட்டித் தள்ளினால் போதும், சுவர் நிலைகுலைந்து கீழே சரிந்துவிடும் என்ற அந்த மாணவர், பின்னாளில் பொதுவுடைமைப் பூங்காவாகத் திகழ்ந்து ரஷ்யாவை உருவாக்கிய லெனின் ஆவார்.