உலகின் அதிசய ரயில் தடங்கள்
டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேதான் உலகின் மிக நீளமான ரயில் பாதையை அமைத்து ரயிலை இயக்கும் ரயில்வே ஆகும். 9,289 கி.மீ. நீளம் ரயில் தண்டவாளங்களை அமைத்துள்ளது என்றால் அது எவ்வளவு நீளம் என்பதை அறியலாம். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து ரஷ்யாவின் கிழக்கு முனையையும், அதனையும் தாண்டி ஜப்பான் கடல்வரை நீண்டுள்ளது இந்த ரயில் பாதை. மங்கோலியா, சீனா மற்றும் வடகொரியாவுக்கும் இதன் ரயில் தொடர்வழிகள் உள்ளன. 1916ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தாய்லாந்தில் உள்ள மேக்லாங் காய்கறி மார்க்கெட்டின் நடுவே அமைந்துள்ள இந்த ரயில் தடத்தில், ரயில் வரும் போது காய்கறிக் கடையை ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். ரயில் சென்றதும் மீண்டும் தண்டவாளத்துக்கு கடைகள் வந்துவிடுகின்றன.
தென்கொரியாவில் 3 இலட்சத்து 40 ஆயிரம் செர்ரி மரங்களுக்கு அடியில் செல்லும் ரயில் பாதை இது. வசந்த காலத்தில் இந்த மரங்களில் இருந்து பூத்துக் குலுங்கி மலர்கள் உதிர்வதும் அது பயணம் செய்யும் ரயில்களின் மீது விழுவதும் கண்கொள்ளாக் காட்சியாம். அதனைக் காணவே இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.
உக்ரைன் நாட்டில் உள்ள க்ளெவென் என்னுமிடத்தில் அடர்ந்த பசுமையான மரங்களுக்கிடையே அமைந்துள்ள ரயில் தடத்தில் இந்த ரயில் சென்று வருகிறது. பச்சைப் பசேலெனெ தாவரங்கள் ஒரு குழாய் போல 3 கி.மீ. நீளத்துக்கு வளர்ந்துள்ளன. அந்தப் பசுங்குழாயின் நடுவில்தான் இந்த ரயில் பயணம் செய்கிறது. அனைவரின் கண்கவர் சுற்றுலாத் தலமான இங்கு காதலர்களும் ஒளிப்படக்காரர்களும் தவறாமல் வந்து செல்கின்றனராம்.
நியூசிலாந்தில் கிஸ்போர்ன் விமான நிலைய ஓடுபாதையின் குறுக்கே அமைந்துள்ள ரயில் பாதை.