ஆரோக்கிய உணவு
நினைவாற்றலைத் தரும் மாம்பழம்
குளிர் முடிந்து கோடை வெயில் வரப்போகிறது. தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றன அதிக அளவில் விற்பனைக்கு வரும் என்றாலும், பார்த்தவுடன் தன் நிறத்தால் நம்மை ஈர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு.
முக்கனிகளில் முதலிடத்தையும் பழங்களின் ராஜா என்ற சிறப்பையும் பெற்ற மாம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
Mangisera Indica என்பது மாம்பழத்தின் தாவரவியல் பெயராகும். இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையினையுடையது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. தெளிவான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும்.
உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் கொழுப்புச் சத்தைக் குறைக்கும் பொருள் மாம்பழத்தில் உள்ளது. எனவே, இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பினை நீக்கி உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.
மாம்பழத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் அளவுடன் சாப்பிட்டுப் பயன் பெறலாம்.
அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் புற்று நோயினை எதிர்த்துப் போராடுவதிலும் உடலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதிலும் செயல்படுகிறது. பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பி6, மக்னீசியத்துடன் இரும்புச் சத்தையும் அதிகம் கொண்டுள்ளது. இரும்புச் சத்து ரத்த சோகையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
ரத்த சோகை, ஈறுகளில் ரத்தம் வருதல், இருமல், காய்ச்சல், குமட்டல் போன்ற நோய்களுக்கு மாம்பழத்தைப் பரிந்துரைத்துள்ளது சீன மருத்துவம்.
தேர்வு நேரங்களில் இரவு நேரத்தில் கண் விழித்துப் படிக்கும் குழந்தைகள் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு மாம்பழத் துண்டுகளைச் சாப்பிடலாம். மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம் அதிக கவனம் செலுத்துவதற்கும் நினைவாற்றலுக்கும் துணை புரியும்.
தினமும் 100 கிராம் அளவு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும். தொடர்ந்து ஒருமாதம் மாம்பழமும் பாலும் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான வலிமையும் எடையும் கிடைக்கும். கல்லீரல் குறைகளைப் போக்கும் தன்மை வாய்ந்த மாம்பழம் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.