இரட்டைத் திமில் ஒட்டகம்(Siberian Camel)
மத்திய ஆசியப் புல்வெளியைப் பூர்வீகமாகக் கொண்ட பேக்ட்ரியன் (Bactrian) ஒட்டகம் என்றழைக்கப்படும் இரட்டைத் திமில் ஒட்டகம் பாலூட்டும் வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும்.
அனிமலியா (Animalia) பிரிவினுள் கமெலிடே (Camelidae) பிரிவைச் சேர்ந்த இவை ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு.2500ஆம் ஆண்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டுள்ளதால் பாக்ட்ரியன் (Bactrian) ஒட்டகம் என்ற பெயரினைப் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
நாம் அறிந்த பாலைவனக் கப்பல் என்றழைக்கப்படும் ஒட்டகங்கள் பாலைவனத்தில் மட்டுமே வாழும் உடல் அமைப்பினைப் பெற்றவை.
குளிர்ப் பகுதியில் வாழும் உடல் அமைப்பினைப் பெற்றவை அல்ல. இரட்டைத் திமில் ஒட்டகங்களோ, உடலிலுள்ள அடர்த்தியான உரோம அமைப்பினால் குளிர்ப் பகுதியிலும் வறட்சிப் பகுதியிலும் வாழும் இயல்புடையன என்றாலும், குளிர்ப் பகுதியிலேயே பெரும்பாலும் வசிக்கக்கூடியன.
இரட்டைத் திமில் ஒட்டகங்களின் தோள் 180_230 செ.மீ. உயரம் வரை இருக்கும். உடலின் நீளம் 225 _ 350 செ.மீ., வால் 35_55 செ.மீ., திமில் 213 செ.மீ. உயரம் என்ற அளவில் இருக்கும். ஆண் ஒட்டகங்கள் சுமார் 300 கிலோவிலிருந்து 1000 கிலோ எடை வரையிலும், பெண் ஒட்டகங்கள் சுமார் 350 கிலோவிலிருந்து 500 கிலோ வரையிலும் எடை கொண்டதாக இருக்கும்.
உடல் முழுவதும் அதிக உரோமத்துடன் காணப்படும் இவற்றின் மூக்குத் துளைகள் இறுக மூடும் வசதியுடன் அமைந்துள்ளன. காற்றில் மணல் கண்களைத் தாக்கும்போது, காப்பதற்கேற்ற தடிமனான கண்ணிமைகளைப் பெற்றுள்ளன.
குளிர்காலம், கோடை காலம் என்ற வேறுபாடின்றி வணிகர்கள் பயணம் செய்ய பயன்படுகிறது. நடக்கும்போது இடப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒன்றுபோல முன்னே எடுத்து வைக்கும். பின்னர், வலப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒன்று போல எடுத்து வைத்து நடக்கும்.
ஒரு நாளைக்கு 200 கிலோ எடையினைச் சுமந்து கொண்டு 50 கி.மீ. தூரம் வரை நடக்கும் திறனும், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறனும் பெற்றுள்ளன. சுமையினைத் தாங்கும் வகையில் இதன் கால்கள் இரட்டைக் குளம்புகளுடன் அமைந்துள்ளன.
பகல் நேரத்தில் உற்சாகத்துடன் இரை தேடும் இவை, தனியாகவோ அல்லது 30 விலங்குகள் வரை கொண்ட குழுக்களாகவோ காணப்படும். தண்ணீர் கிடைக்கும்போது ஒரே நேரத்தில் 57 லிட்டர் வரை குடித்து சேமித்துக் கொள்ளும். தண்ணீரின்றி ஒரு மாதம் வரை இருக்கும் இயல்புடையன.
தாவரவுண்ணி வகையைச் சேர்ந்த இவற்றின் வாய்ப்பகுதி கடினமான முட்களையும் சாப்பிடும் அமைப்பில் அமைந்துள்ளது. உணவுப் பையினுள் உணவினைச் சேகரித்து வைத்துவிட்டு, ஓய்வு கிடைக்கும்போது அசை போட்டுச் சாப்பிடும். நன்கு நீந்தும் திறன் பெற்ற இவை கூர்மையான பார்வைத் திறனையும், மோப்ப சக்தியையும் பெற்றுள்ளன.
பிறந்த சிறிது நேரத்தில் ஓடும் திறன் பெற்ற ஒட்டகக் கன்று 36 கிலோ எடையுடையது. மூன்றிலிருந்து 5 ஆண்டுகள் தாயின் அரவணைப்பில் வாழும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகள் ஆகும். சாம்பல் நிற ஓநாய் இவற்றின் முதல் எதிரியாகும். அடுத்து காஸ்பியன் புலி இதன் எதிரியாகும்.