வறுமையிலும் நேர்மை
சாமுவேல் ஜான்சன்
புத்தக வியாபாரியின் மகனாகப் பிறந்து சிறு வயதிலேயே கண்ட மாலை என்ற உருக்குலைக்கும் நோயினால் ஒரு கண்ணை இழந்து முகத்தில் வடுக்களுடன் விகாரமான தோற்றத்துடன் காட்சியளித்தவர். அறிவில் அழகு ததும்ப விளங்கியவர்.
ஒரு நாள் தாயார் ஸ்தோத்திரப் புத்தகத்தைக் கொடுத்து, இதில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பி என்றதும் உடனே எடுத்து வாசித்து ஒரு வரிகூட விடாமல் ஒப்பித்தார். மகனின் அறிவுத் திறனைக் கண்ட தாய் வியந்தார்.
பள்ளிப் படிப்பினை முடித்ததும் தனது தந்தையின் புத்தகக் கடையில் வேலை செய்து அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்தார். பள்ளியில் ஆசிரியரானார். மாணவர்கள் அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கேலி செய்ததால் வேலையை விட்டார்.
உடுத்த நல்ல ஆடையோ, காலில் போடுவதற்கு நல்ல செருப்போ இல்லாது வறுமையில் வாடினார். நண்பர்கள் தன்மீது இரக்கப்பட்டுச் செய்த உதவிகளை மறுத்தார் -_ கோபப்பட்டார். அவரது தாயார் உயிருக்குப் போராடியபோது மருத்துவச் செலவுக்குப் பணமின்றித் தவித்தார். தாயினருகில் அமர்ந்து, அபிசீனிய இளவரசர் ரசேல்ஸ் என்ற நாவலை ஏழு நாளில் எழுதினார். அதற்குச் சன்மானமாகக் கிடைத்த 100 பவுண்ட் பணம் அவரது தாயின் மரணச் செலவிற்குத்தான் பயன்பட்டது.
இவரிடம் நல்ல செருப்புக்கூட இல்லையே என வருந்திய நண்பர், புதுச்செருப்பு வாங்கி அவரது அறையின் ஜன்னல் வழியே உள்ளே போட்டுவிட்டார். வெளியில் சென்றுவிட்டு உள்ளே வந்தவர், உள்ளே கிடந்த செருப்பினைப் பார்த்ததும் எனது வறுமையைக் காரணம் காட்டி என்னை இழிவுபடுத்தியது யாரோ? என்றபடி அதனைத் தூக்கி வெளியில் எறிந்தார்.
படிப்பு படிப்பு என இருந்து சொந்தமாக குறிக்கோள் என்ற பெயரில் பத்திரிகை நடத்தினார். ஆங்கிலேயப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துக் கவுரவித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக 7 ஆண்டுகள் அல்லும் பகலும் அயராது உழைத்து ஆங்கில மொழிக்கு அகராதி தயாரித்துப் பெருமை சேர்த்த இவர் அனைவராலும் அறியப்பட்ட சாமுவேல் ஜான்சன் ஆவார்.