விளையாட்டு
சுவர்ப் பந்தாட்டம்(squash)
இங்கிலாந்தில் 16ஆம் நூற்றாண்டில் தோன்றியதே சுவர்ப் பந்தாட்டமாகும். டென்னிஸ் விளையாட்டிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. வலைக்குப் பதில் ஒரு மட்டையை வைத்து நான்கு சுவர்களுக்குள் விளையாடும் விளையாட்டாகும். இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று விளையாடுவர்.
எதிர்ச் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தினை, தரையில் ஒரு முறைக்கு மேல் விழுவதற்குள் எதிரணியில் விளையாடுபவர் அடிக்க வேண்டும். ஒற்றையர், இரட்டையர் ஆட்டமாக ஆடப்படுகிறது.
சுவர்ப் பந்தாட்டத்தின் முதல் விளையாட்டு அரங்கம் வட அமெரிக்காவின் நியூ ஹாம்சையர் நகரில் 1884ஆம் ஆண்டு தோன்றியது. 1904ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய விளையாட்டு என்ற நிலையினை அடைந்தது. எனினும், இந்த விளையாட்டிற்கான விதிமுறைகள் 1923ஆம் ஆண்டு பிரிட்டனில் ராயல் ஆட்டோமொபைல் கிளப்பினால் வகுக்கப்பட்டன.
மட்டை (Racquets)
கிராபைட், கெவ்லர், டைட்டானியம், போரான் போன்ற உலோகக் கலவையினால் மட்டை (Racquets) உருவாக்கப்படுகிறது. 686 மி.மீ. நீளமும், 215 மி.மீ அகலமும், உள்ளே உள்ள கம்பி வலையின் நீளம் 500 சதுர செ.மீட்டரும் இருக்கும். இதன் மொத்த எடை 255 கிராம் ஆகும். பெரும்பாலும் 90லிருந்து 150 கிராம் எடை கொண்டதே பயன்படுத்தப்படுகிறது.
பந்து
பந்தின் சுற்றளவு 39.5லிருந்து 40.5 செ.மீ. வரையும், எடை 23லிருந்து 25 கிராம் வரையும் இருக்கும். 7 வகையான நிறங்களில் பந்து காணப்படும். பந்தின் இயல்பு வேகத்தை அதன் மேல் உள்ள வண்ணப் புள்ளியை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளையாட்டுகளில் பெரும்பாலும் ஒளிரும் பந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.
ஆடுகளம்
இரு பாதியாகப் பிரிக்கப்பட்டு, பின் பாதி வல இடது என பிரிக்கப்படும். பின் பாதியில் முதலில் அடித்தெறிய (Service) இரு கருப்புப் பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.
அடித்தெறிதல் (Service)
இடது காலை அடித்தெறியும் பெட்டிக்கு முன்னால் வைத்து வலது காலைப் பெட்டிக்குள் வைத்து இடது தோள் முன் சுவற்றைப் பார்த்தவாறு நிற்க வேண்டும். இடது கையில் உள்ள பந்தைத் தூக்கிப் போட்டு மட்டையை வலது கையில் பின்னாலிருந்து முன்னோக்கி வீசி அடிக்க வேண்டும். பின்னர், வலது காலை முன் வைத்து உடலை நேராகத் திருப்பி அடுத்த அடியினை அடிக்கத் தயாராக வேண்டும்.
ஆடும் முறை
எதிர்ச் சுவற்றின் அடிப்பாகத்தில் 48 செ.மீ. உயரத்திற்கு போர்ட் (Board) எனப்படும் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். அடிக்கும் போது எதிர்ச் சுவற்றில் இந்த போர்டில் படாமல் அடிக்க வேண்டும். எதிர்ச் சுவரில் முதலில் பட்டபின் பக்கவாட்டுச் சுவர்களில் பந்து படலாம். இதன் மூலம் எதிரில் விளையாடுபவரைத் திணறடிப்பார்கள். இவ்வாறு சுவற்றில் பட்டு நேரடியாகவோ அதன் பின் தரையில் ஒரு முறை பட்டோ வரும் பந்தை மற்ற ஆட்டக்காரர் எதிர்ச் சுவற்றை நோக்கி அடிக்க வேண்டும்.
எதிராளி அடிப்பதற்குள் பந்து இரு முறை தரையில் பட்டால் பந்தை அடித்தவருக்குப் புள்ளிகள் வழங்கப்படும். பந்தை அடித்தவர் அந்த முறை சர்வ் (Serve) செய்தவராக இருந்தால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும். ஒருவேளை, எதிராளி பந்தை சர்வ் செய்திருந்தால் சர்வ் மாற்றம் மட்டும் வழங்கப்படும். அதாவது, பந்தை அடித்தவருக்கு அடுத்த சர்வ் வழங்கப்படும்.
ஒன்பது புள்ளிகள் பெற்றால் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறலாம். ஒரு போட்டியின் வெற்றி / தோல்வி, மூன்று அல்லது அய்ந்து ஆட்டங்களைக் கொண்டு முடிவு செய்யப்படும்.