சாதனைப் பெண் ஹெலன் கெல்லர்
அமெரிக்காவின் வட அலபாமா மாகாணத்தில் டஸ்கும்பியா என்ற சிறிய ஊரில் 1880ஆம் ஆண்டு பிறந்தார் ஹெலன் கெல்லர். எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தவர் 2 வயதிற்குப் பிறகு வந்த காய்ச்சலினால் பார்க்கும், பேசும், கேட்கும் திறன்களை இழந்தார். தனது விடாமுயற்சியால் ஓரளவு பேசும் திறன் பெற்று 24ஆம் வயதில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
மருத்துவர், ஹெலன் கெல்லரைத் தனது வண்டியில் அழைத்துச் சென்றபோது, தனது ஒருமுனைப்படுத்திய பயிற்சி மற்றும் சிந்தனையின்மூலம் சென்ற வழியின் இயல்புகளை _ நிகழ்வுகளைக் கூறிச் சென்ற விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடியது.
திறந்தவெளியில் பயிர் நிலங்களுக்கிடையே செல்கிறோம்; மரங்களுக்கு நடுவே செல்கிறோம்; விறகு அடுப்பு எரியும் வீட்டின் அருகே செல்கிறோம்; பெரிய வீடுகளைக் கடந்து செல்கிறோம்; மருத்துவமனையின் அருகே செல்கிறோம்; அச்சகம் வழியே செல்கிறோம் என சென்ற பாதையினை நுகர்வின் மூலமே சரியாகக் கூறி வந்து மருத்துவரை ஆச்சரியப்பட வைத்தாராம்.
ராட் கினிப் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது என் கதை என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். 1908ஆம் ஆண்டு நான் வாழும் உலகம் (தொடும் உணர்ச்சி, மோப்பம், என் உலகம்) பின்னர் இருளுக்கு வெளியே (தன் கை எப்படி உதவியுள்ளது) எழுதினார். பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஒருவரின் குரலைக் கேட்காமலேயே தன் கையால் குரல் நரம்பைத் தொட்டே யார் எப்படிப்பட்ட திறமை பெற்றவர் என்பதைச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார். வாழ்க்கை என்பது தீரமான சாகசச் செயலாக இருக்க வேண்டும். இல்லையேல் அது சூன்யம் என்றார். கொள்கை என்பதற்கு அவரது படைப்புகளும் செயல்களும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
ஜவஹர்லால் நேருவுடன் ஹெலன் கெல்லர்
உலக நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மனம் உண்டு. அதை உணர்ந்து பக்குவப்படுத்தி வாழ வைக்க தொழிற்பயிற்சி தேவை என்றார். இந்தியா வந்தபோது ஜவஹர்லால் நேருவைச் சந்தித்துக் கைகுலுக்கி அவரது உயர்ந்த பண்புகளைக் கூறியுள்ளார்.
தனது 75ஆம் வயதில் 40,000 மைல்களுக்கு மேல் 35 நாடுகள் சுற்றுப் பயணம் செய்து பார்வையற்றோர், செவித்திறன் குன்றியோருக்கு உலகம் முழுவதும் பள்ளிகள் திறந்து உதவும்படி பிரச்சாரம் செய்துள்ளார். பள்ளிகளுக்குத் தானே நிதி வழங்கியதுடன், மீட்சி என்று தன் வாழ்க்கையைப் படமாக எடுத்து தானே நடித்து பார்வையற்றோர் நலனுக்காக வழங்கிய பெருமைக்குரியவர்.
பார்வையற்றோர் தேசிய நூலகம் உருவாக்கி, உலகெங்கிலுமிருந்து நூல்கள் வர ஏற்பாடு செய்தார். ஹெலன் கெல்லர் ஆங்கிலம், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளைக் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.