ஃபோட்டோவின் கதை
போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. போட்டோ என்பதற்கு கிரேக்க மொழியில் ஒளி என்று பொருள். கிராபி என்ற சொல்லுக்கு வரைதல் என்பது பொருளாகும். இந்த இரு சொல்லும் இணைந்தே ஒளியில் வரைதல் என அர்த்தம் கொள்ளப்பட்டது.
கிரேக்கச் சொல்லான இதுவே உலகம் முழுவதும் போட்டோகிராபி என அழைக்கப்படுகிறது.
முதல் புகைப்பட கேமரா – உலகின் முதல் ஒளிப்படக் கலைஞர்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் டாக்குரே போட்டோ கேமராவைக் கண்டறிந்தார். 1787 நவம்பர் 18ஆம் தேதி பிறந்த இவர் தனது 63ஆவது வயதில் இறந்தார்.
இவர் இயல்பில் ஒரு சிறந்த ஓவியர். ஓவியப் பள்ளியும் நடத்தி வந்தார். நாடக மேடைகளின் துணிகளுக்கு ஓவியங்கள் வரைந்து தந்துவந்தார். அவர் ஒளி மூலம் வரைந்த ஓவியங்களை காப்பி எடுக்க விரும்பி ஆய்வு செய்யத் தொடங்கினார்.
அவரைப்போலவே, நைஸ் ஃபோர் நிப்ஸ் என்பவரும் இதே ஆய்வில் ஈடுபட்டிருந்தார். முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா டாக்குரே வகை கேமராக்கள் என்று கண்டுபிடித்தவரின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டு, அதே பெயரில் பதிவும் செய்யப்பட்டது.
170 ஆண்டுகளுக்குப் பின் டாக்குரே கேமரா என்று வடக்கு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தால் செய்யப்பட்ட இந்தக் கேமரா இன்னும் இயங்கும் நிலையில் உள்ளதாம். இதை ஒரு ஏல நிறுவனம் ஏலம் விட்டுள்ளது. 47 கோடிக்கு இந்தக் கேமரா விலை போயுள்ளது. இந்தக் கேமராதான் தற்போது விலை அதிகமுள்ள கேமராவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெகட்டிவ் கேமரா
ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவர்தான் நெகட்டிவ் கேமராவைக் கண்டறிந்தார். 1854இல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தவர். 1885இல் கேமராவில் நெகட்டிவ் மூலம் படம் எடுக்கும் முறையைக் கண்டறிந்தார். 1888இல் அது விற்பனைக்கு வந்தது.
1892இல் அவருக்குப் பிடித்தமான கே என்ற எழுத்தில் கோடாக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நெகட்டிவ் கேமராக்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அமெரிக்க அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது. இவரின் கோடாக் நிறுவனம்தான் முதன் முதலில் டிஜிட்டல் கேமராவை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
உலகின் முதல் புகைப்படம்
சிறுவன் ஒருவன் குதிரையை அழைத்துச் செல்வது போன்ற புகைப்படமே உலகின் முதல் புகைப்படமாகும். 1825இல் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம், ஏலம் மூலமாக பிரெஞ்சு நாட்டில் 4 லட்சத்து 50 ஆயிரம் யூரோக்களுக்கு விற்பனையானது.
ஆகஸ்ட் 19 உலக ஒளிப்பட தினம்
1839 ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட வணிக போட்டோ எடுக்கப்பட்டது. அந்த நாளே போட்டோகிராபர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர்
ஹோமை வியாரவாலா,1913இல் குஜராத் மாநிலம் வதோராவில் பிறந்தவர் ஆவார்.முதல் பத்திரிகைப் பெண் புகைப்படக் கலைஞரும் இவரே. சைக்கிளில்தான் இவரது பயணம். 1939 முதல் 1970 வரை இந்திய, உலக வரலாற்றில் இடம்பெற்ற பல புகைப்படங்களை எடுத்த பெருமைக்குரியவர். 2010ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதைப் பெற்றுள்ளார்.
ரகுராய்
சிறந்த புகைப்பட நிபுணர். 1984இல் போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களை இவர் எடுத்ததன் மூலம் புகழ்பெற்றார். மண்ணில் புதையுண்டு தலை மட்டும் தெரிந்த ஒரு குழந்தையை இவர் எடுத்த படம் உலகத்தை அதிரவைத்தது. இவரது புகைப்படங்கள் பல மேலைநாடுகளில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
பல பிரபலமான இதழ்களில் இவரது கட்டுரைகள், புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவரை அமெரிக்க அரசு சிறந்த புகைப்படக் கலைஞர் என பெருமைப்படுத்தியுள்ளது. 1971இல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
பன்ளாஸ்
பிளாஸ் (flash) கண்டுபிடிப்பதற்கு முன்பு மாக்னிசியம் பவுடரைக் கொட்டி அதைப் பற்ற வைப்பார்கள். பற்ற வைத்த சில நொடிகள் வரை அதன் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும். அந்த வெளிச்சத்தில் தான் ஆரம்பகாலத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதுதான் கேமராவின் ப்ளாஸ்சாக இருந்தது. அதனை பன்ளாஸ் என அழைப்பார்கள்.
அரசவை புகைப்படக் கலைஞர் – லாலா ராஜா தீன்தயாள்
1844இல் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த ஓவியர். மேற்கத்திய நாடுகளில் போட்டோகிராபி இடம் பெற்றதும் அதைக் கற்க மேற்கத்திய நாடுகளுக்குப் பயணம் சென்று கற்றுக்கொண்டு வந்தார். அய்தராபாத்தின் ஆறாம் நிஜாமான மீர் மஹபூப் அலி பாஷா அரசின் அரசுப் புகைப்படக்காரராக இருந்தார்.
1880களிலேயே இந்தூர், மும்பை, செகந்திராபாத் போன்ற இடங்களில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தவர். வெளிநாட்டு ஒளிக் கலைஞர்களைவிட சிறந்த புகைப்படங்களை எடுத்தவர். இந்தியாவில் புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது என்றால் அது இவருக்கு மட்டும்தான். 125ஆவது ஆண்டு விழாவில் அது வெளியிடப்பட்டது.
கின்னசில் இடம்பிடித்த போட்டோகிராபர்
நியூயார்க் நகரில் வசிக்கும் பிரபல புகைப்படக் கலைஞர் ஜோசன் கூப், 300 பிளாஸ்களை மின்ன வைத்து தனது கேமரா மூலம் ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். இது சாதனை என புகழ்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளைப் படம் எடுக்கும் தமிழர்
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் புகைப்படம் எடுக்க ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவரைத் தேர்வு செய்து போட்டி நடக்கும் இடத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சுகுமார் என்ற புகைப்படக் கலைஞர் இலண்டன் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சீனாவில் நடந்த போதும் சென்றுள்ளார்.