கடல் நாய்(Ross Seal)
வட பசிபிக் கடலின் வடக்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடல் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மர நாய் வகையினைச் சேர்ந்த இவற்றினால் தரையில் நடக்க முடியுமெனினும், பெரும்பாலும் கடலின் உள்ளேதான் இருக்கின்றன.
அனிமலியா இனத்தினுள் போசிடே (Phocidae) குடும்பத்தைச் சேர்ந்தன. 1758ஆம் ஆண்டு கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த லினோஸ் கடல் நாய் பற்றிய குறிப்பினைக் கொடுத்துள்ளார். 13 வகையான நீர் நாய்கள் இருந்தாலும் அடர்ந்த உரோம அமைப்பினால் கடல் நாய்கள் தனித்துக் காணப்படுகின்றன.
தோலின் மேற்பரப்பில் ஒரு சதுர செ.மீட்டருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் உரோமங்கள் வரை இருக்கும். மேற்பகுதியில் உள்ள உரோமங்கள் நீளமாகவும் கடல் நீர் தோல் பகுதியினுள் போகாத வகையிலும் அமைந்திருக்கும். மேலும், அடிப்பகுதியில் சிறுசிறு உரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். இந்த அமைப்பு, குளிர்ந்த தண்ணீரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை உரோமங்கள் உதிர்ந்து புதிய உரோமங்கள் முளைக்கின்றன.
கடலின் மேற்பரப்பிலிருந்து 50 முதல் 75 அடி ஆழத்தில் இருக்கும் கடல் நாய்கள் கடற்கரையிலிருந்து 1 கிலோ மீட்டருக்கும் குறைவான பகுதியிலேயே பாதுகாப்பான இடத்தில் வசிக்கின்றன. கடலில் மட்டுமன்றி, மணல்பரப்பு மற்றும் கடல்தரை திட்டுகளிலும் வாழும் இயல்புடையன.
பெண் நாய்கள் 3.3 அடி முதல் 4.7 அடி நீளத்தில் 14_-33 கிலோ எடையுடனும் ஆண் நாய் 3.11 அடி முதல் 4.11 அடி நீளத்தில் 22_45 கிலோ எடையுடனும் இருக்கும். இதன் எடை அதிகமாகத் தெரிந்தாலும் கடலில் வாழும் பாலூட்டிகளின் உருவத்தில் சிறியதாகத் தோற்றமளிக்கக் கூடியன.
இவற்றின் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும். தரையில் நடக்கும்போது, அங்கும் இங்கும் ஓர் உருளை உருளுவதுபோல இருக்கும்.
பகல் நேரங்களில் நன்கு தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகின்றன. நண்டுகள், எலும்பு இல்லாத மெல்லுடலிகள், நத்தைகள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன.
ஆண் நாய்கள் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும், பெண் நாய்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரையும் உயிர் வாழக்கூடியன. அதிகபட்சமாக 23 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழ்வன.
அடர்ந்த உரோமங்களுக்காகவும், உணவிற்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. கடல் நாய்களின் தோல் நஞ்சு தாக்கப்படாத தன்மையினைப் பெற்றிருப்பதால் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. மெக்சிகோ, கலிபோர்னியா, ஸ்பானிஷ் நாட்டு வியாபாரிகள் தோல்களைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இவற்றின் தோல் மிருதுவான தங்கம் என்றழைக்கப்படுகிறது.