கோடையும் குழந்தைகளும்
– சிகரம்
குழந்தைகள் உள்ளத்தில் குதூகலம்; கல்வி நிறுவனங்களுக்கு கல்லா நிரப்பும் துடிப்பு; பிள்ளைகளுக்கு எதையாவது திணித்துவிட வேண்டும் என்ற பெற்றோரின் முனைப்பு; பயிற்சி என்ற பெயரில் பணம் பண்ணிவிட பல பயிற்சி நிறுவனங்களின் படையெடுப்பு; சுற்றுலாவில் சுரண்டிவிட அந்நிறுவனங்களின் முயற்சி;
அடுத்த ஆண்டுப் பாடத்தை இப்போதே முடித்துவிட வேண்டும் என்ற தனிப்பயிற்சி ஆசிரியர்களின் தவிப்பு என்று பலதரப்புப் போட்டா போட்டிகள் மாணவர்களை நெருக்கி, இறுக்கி, கோடை வெயிலின் வியர்வையோடு, அவர்களின் வேதனையையும் வெளித்தள்ளும் நிலையே இன்றைய நடப்பு!
இந்த நெருக்கடியில் பிள்ளைகளும் பெற்றோரும் அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக, உடல்நல, உளநலக் கண்ணோட்டத்தோடு, முடிவுகள் மேற்கொண்டு, பொறுப்புடனும், விழிப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.
நாம் நிலநடுக்கோட்டிற்கு அருகில் வாழக் கூடியவர்கள் என்பதால், கோடை வெயிலின் கொடுமையிலிருந்து தப்ப கோடை விடுமுறை விடப்படுகிறது.
அலுவலகங்கள் இயங்கினாலும், கல்வி நிறுவனங்களுக்கு விடுப்பு விடப்படுவதன் நோக்கு, மாணவர்களின் உடலும், உள்ளமும் பாதுகாக்கப்பட வேண்டும்; புத்துணர்ச்சி பெற்று மீண்டும் கல்விக்கூடம் வரவேண்டும் என்பதேயாகும். எனவே, அந்த நோக்கத்தைச் சிதைக்காமல் மாணவர்களை மற்றவர்கள் நடத்த வேண்டும்; மாணவர்களும் நடக்க வேண்டும்.
வெயிலின் கொடுமையிலிருந்து (கடுமையிலிருந்து) தப்ப வேண்டும் என்ற நோக்கில் விடப்படும் விடுமுறை நாள்களில், உச்சிவெயில் சுட்டெரிக்கின்ற வெப்ப வெயிலில் கிரிக்கெட் மட்டையைப் பிடித்துக்கொண்டு, மணிக்கணக்கில் நிற்பது தப்பு என்பது மட்டுமல்ல, கேடு தருவதும் ஆகும்.
விளையாட நினைப்பவர்கள் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு மேலும் விளையாட வேண்டும். அந்த நேரங்களில் கிரிக்கெட் மட்டுமன்றி நமது பாரம்பரிய விளையாட்டுகளையும் விளையாட வேண்டும்.
இரவு நேரங்களில் பெற்றோருடன் அமர்ந்து பல்வேறு கருத்துகள் குறித்து கலந்து பேசுதல், தொலைக்காட்சி பார்த்தல், நண்பர்களுடன் கலந்து பேசுதல் செய்ய வேண்டும்.
காலை 10 மணிமுதல் 12 மணிவரை ஏதாவது ஒரு பயிற்சி. அது விருப்பத்திற்கு உகந்ததாகவும்; ஆளுமை வளர்ப்பதாகவும்; வாழத் தகுதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
பிற்பகல் 2.30 மணிமுதல் 4.00 மணிவரை கட்டாயம் தூங்க வேண்டும்.
40 நாள்கள் விடுமுறையில் 4 நாள்கள் சுற்றுலா (குளிர்ந்த இடங்களுக்கு) செல்லலாம். வசதிக்கு ஏற்ப இடங்களைத் தேர்வு செய்து கண்டுகளிக்கலாம். ஊட்டிக்குச் செல்ல இயலாதவர்கள் ஏற்காடு செல்லலாம்; ஏலகிரி மலைக்குச் செல்லலாம்.
மைசூருக்குச் செல்ல முடியாதவர்கள் பிச்சாவரம் செல்லலாம் அல்லது அருகிலுள்ள இயற்கைசூழ் இடங்களுக்குச் செல்லலாம். நகரத்தில் உள்ளவர்கள் பசுமரங்கள் நிறைந்த கிராமங்களில் சென்று தங்கலாம்.
கோடைக்காலத்தில் உணவிலும், உடையிலும் கவனம் செலுத்த வேண்டும். இறுக்கமில்லா பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் இருக்கும்போது பனியன், லுங்கிகள் போதும். ஷு, சாக்ஸ், டை போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் ஒருவர் குடிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிந்த நீரைக் குடிக்க வேண்டும். நீர் மோர் சிறந்தது.
சோற்றுக் கற்றாழையைச் சுத்தம் செய்து தேன் கலந்து சாப்பிட வேண்டும். மணத்தக்காளி, தர்பூசணி, எலுமிச்சை, வெள்ளரி போன்றவை கோடைக்கு உகந்தது. எல்லா நாள்களும் உண்ண வேண்டிய மாதுளை கோடைக்கும் ஏற்றது. வாழைப்பழம் தவறாது உண்ண வேண்டும். கரும்புச்சாறு பருகலாம். ஜீனியைத் தவிர்க்க வேண்டும்.
வேப்ப இலை மஞ்சள் தூளுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து, சாறு எடுத்து எல்லோரும் அருந்த வேண்டும். அம்மை வராது தடுக்கும்; வந்தால் விரைவில் போக்கும். கோடையில் இஞ்சியைத் தவறாது பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய், கொழுப்பு, காரம், உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இளநீர், கீரை, காய்கறி, பழம் அதிகம் உண்ண வேண்டும். செயற்கைப் பானங்களை, அய்ஸ்கிரீம் போன்றவைகளை அறவே விலக்க வேண்டும்.
கடும் வெயிலில் கட்டாயம் செல்ல நேர்ந்தால், தலையில் குல்லா அல்லது குடையுடன் செல்ல வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் அடைவதைவிட வேப்பமரம், புங்கமர நிழலில் அமரலாம், படுக்கலாம். பூங்காக்களில் அமர்ந்து உரையாடலாம்.
வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அரை டம்ளர் அளவு மென்று சாப்பிட்டால் உடல் சூடு தணியும். பெரியவர்களுக்கு சர்க்கரையும் கட்டுப்படும்.
பொன்னாங்கண்ணிக் கீரை அதிக அளவிலும், கீழாநெல்லிக் கீரை சிறிதளவும் வேகவைத்துச் சாப்பிட்டால் வெயில் கால நோய், குடற்புண் தீரும்.
தினம் இரு நெல்லிக்காய் உண்பது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயன்தரும். நெல்லிக்காய் கிடைக்காதபோது அதன் வற்றலைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட வேண்டும்.
கோடையில் டைபாய்டு காய்ச்சல் எளிதில் பரவும். எனவே, வெளியில் தூய்மையற்ற உணவு, நீர், தின்பண்டம் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
மேற்கண்டவற்றை முறையாகக் கடைபிடித்தால் கோடைக் கொடுமையிலிருந்தும் கேட்டிலிருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதோடு, உளநலம் உடல்நலம் இரண்டையும் ஒருசேரப் பெறலாம்.
கோடையிலும் படிப்பு, படிப்பு என்று அடைக்கப்பட்டால் மாணவர்களுக்கு மனச்சோர்வே மிகும்.
மாணவர்கள் மனஇறுக்கம் நீங்க, மகிழ்ச்சியாகத் துள்ளித்திரிந்து கோடைக்காலத்தை மேற்கண்ட வகையில் கழித்தால், புத்துணர்ச்சி பெற்று உற்சாகத்தோடு அடுத்த கல்வியாண்டில் அடிஎடுத்து வைக்கலாம்!