காற்றே…. காற்றே…. நீ…
(நாமனைவரும் காற்றைச் சுவாசிக்கிறோம். ஆனால் அந்தக் காற்றை நம்மால் கண்ணால் பார்க்கவோ, மூக்கால் நுகரவோ, நாக்கால் சுவைக்கவோ முடிவதில்லை. அதனால்தான் காற்றின் முக்கியத்துவத்தை நாம் சரியாக உணராமல் போகிறோம்.செயல்படும்போது காற்று எவ்வாறு இருக்கும் என்பதைச் சோதித்து அறிவதுதான், காற்றைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்வதற்கான சிறந்த வழியாகும்)
படகுகளை நீர்நிலைகளில் செலுத்துவதற்கு அவற்றின் மீது பாய்மரங்களைக் கட்டும் பழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஒரு டயருக்குள் நாம் காற்றடிக்கும் போது, காற்றின் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்ய, ஒரு சிறிய கலனுக்குள் நாம் அதிக அளவு காற்றைச் செலுத்துகிறோம்.
இவ்வாறு ஒரு கலனுள் அடைக்கப்படும் காற்று ஒரு பாதுகாப்புக் கவசம் போல செயல்படுகிறது. இக்காரணம் பற்றிதான் குளிரில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடிமனான பருத்தி அல்லது கம்பளி ஆடைகளை அணிகிறோம்.
பறவைகள் தங்கள் சிறகுகளை அசைத்துக் காற்றில் பறக்கின்றன. ஆனால் பறவைகள் கீழே விழாமல் ஆகாயத்திலேயே இருப்பது எவ்வாறு? பறவைகள் தங்கள் சிறகுகளை மாற்றி மாற்றி அசைக்கின்றன.
அப்போது அவற்றின் மேற்பரப்பில் இருக்கும் காற்று தள்ளப்படுவதால், பறவைகள் கீழே விழுந்துவிடாமல் கீழ்ப் பரப்பில் உள்ள காற்றினால் தாங்கிப் பிடித்துக் கொள்ளப்படுவதுடன், இறகுக்குக் கீழே இருக்கும் காற்றில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால், பறவைகள் மேலே செலுத்தப்படுகின்றன.
ஓர் உயர்ந்த மலையின் உச்சிக்கு எப்போதாவது நீங்கள் சென்றிருக்கிறீர்களா? சமதரையில் அல்லது கடல் மட்டத்தில் இருப்பதைவிட மலைமேல் இருக்கும்போது அதிக அளவு காற்றைச் சுவாசிக்க வேண்டிய தேவையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். மலையின்மீது இருக்கும்போது உங்களைச் சுற்றி காற்றில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறைவதால், காற்றின் அழுத்தமும் குறைகிறது.
உயிர்க் காற்றின் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை மட்டுமே நீங்கள் சுவாசிக்க நேர்வதால், சுவாசிப்பதற்கான காற்றின் குறைபாட்டைச் சரிசெய்ய, காற்றில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை உங்கள் நுரையீரலுக்குள் கொண்டு வருவதற்காக, நீங்கள் வேகமாகச் சுவாசிக்க வேண்டியிருக்கும். அதனால்தான் உலகின் உயர்ந்த மலைச் சிகரங்களில் ஏறுபவர்கள் தங்களுடன் உயிர்க்காற்று அடைப்பான்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
உயிரினங்கள் வாழும் உலகம் இந்தப் பூமி மட்டும்தான் என்று நம்பப்படுகிறது. காற்று மண்டலம் என்றழைக்கப்படும் காற்று அடுக்குகள் பூமியின் மீது உள்ளன.
சுவாசித்தல் மற்றும் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரித்துக் கொள்வது போன்ற நடைமுறைகளின் வழியே இக்காற்றுகள்தான் உயிரினங்களை வாழவைக்கின்றன. காற்று மண்டலத்தில் இருக்கும் காற்றில் கோடிக்கணக்கான காற்றணுக்கள் உள்ளன.
இந்த அணுக்களின் மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று முட்டிமோதித் தள்ளிக் கொண்டே இருப்பதால் ஓர் ஆற்றல் உருவாகிறது. இதனை நாம் காற்று மண்டல அழுத்தம் அல்லது காற்றின் அழுத்தம் என்று அழைக்கிறோம்.
பூமியின் மேல் உள்ள காற்று மண்டலத்தின் அழுத்தம் நமது ஒவ்வொரு சதுர அங்குலத்தின் மீதும், சதுர அங்குலத்திற்கு 14.7 பவுண்டு வீதம் அழுத்தத்தைத் தருகிறது. 1000 சதுரசென்டிமீட்டரின் மேல் தரப்படும் காற்றின் அழுத்தம் ஒரு டன் அளவினதாக இருக்கும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி அதன் வாயை ஒரு காகிதத்தினால் மூடி ஒரு பரிசோதனை செய்வதன் மூலம் இந்தக் காற்று மண்டல அழுத்தத்தை நம்மால் அளவிட முடியும். நீர் நிரம்பிய டம்ளரை நீங்கள் தலைகீழாகப் பிடித்தாலும், அதில் உள்ள நீர் டம்ளரிலிருந்து கீழே கொட்டிவிடுவதில்லை;
டம்ளரில் உள்ள நீரும் அதை மூடி உள்ள காகித அட்டையும் முன்பிருந்த அதே நிலையில் இருக்கும். டம்ளரில் உள்ள தண்ணீர் மற்றும் காற்றின் அழுத்தத்தைவிட டம்ளருக்கு வெளியே இருக்கும் காற்றின் அழுத்தம் அதிகமாக இருப்பதால், டம்ளரில் உள்ள நீர் கொட்டிப்போவதில்லை.
சாதாரணமான சில பொருள்களை வைத்துக் கொண்டு உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்து பார்க்க இயன்ற சில சோதனைகள் சில இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து, நமது அன்றாட வாழ்க்கை அறிவியலை காற்றின் அழுத்தம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீங்கள் அறியலாம்.
காற்று இடத்தை அடைத்துக் கொள்கிறது
காற்று இடத்தை அடைத்துக் கொள்கிறது என்பதைக் காட்டுவதற்கான ஒரு வழி இது. உங்கள் உள்ளங்கைகளை உங்கள் மார்பு எலும்புகள் மீது வைத்துக் கொண்டு பலமாக மூச்சு விடுங்கள்.
உங்கள் நுரையீரலுக்குள் உள்ள காற்றின் மூலக்கூறுகள் அதிகரிப்பதால் உங்கள் மார்பும் விரிவடைகிறது. கூடுதலாக சுவாசிக்கப்படும் காற்றின் மூலக்கூறுகளுக்கு இடம் கொடுப்பதற்காகவே உங்கள் நுரையீரல் விரிவடைகிறது.
குறைந்த இடத்தையோ அல்லது அதிகமான இடத்தையோ காற்றினால் அடைத்துக் கொள்ள முடியும்.
ஒரு பாட்டிலின் உள்புறத்தில் பொருந்தும் அளவுக்கு ஒரு பலூனுக்குள் சிறிது காற்றடித்து தளர்வாக இருக்கச் செய்யவும். காற்று வெளியேறாதபடி பலூனின் வாயை ஒரு கயிற்றால் கட்டிவிடவும். பலூனை ஒரு பாட்டிலின் உள்ளே வைக்கவும்.
பாட்டிலின் கழுத்தை ஓர் அடைப்பானால் மூடிவிடவும். ஒரு ஸ்டிராவில் களி மண்ணை நிரப்பிவிட்டு பாட்டிலின் மூடியில் ஒரு துளையிட்டு அதில் அதனைப் பொருத்திவிட்டு. பாட்டிலை மூடியால் மூடிவிடவும்.
ஸ்டிராவில் வாயை வைத்து பாட்டிலினுள் இருக்கும் காற்றில் சிறிது காற்றை உறிஞ்சவும். காற்று திரும்பவும் பாட்டிலினுள் சென்றுவிடாதபடி ஸ்டிராவின் மேற்புறத்தை விரலால் மூடிக்கொள்ளவும். பாட்டிலினுள் இருக்கும் காற்றின் அழுத்தம் குறைவதால், பலூனுக்குள் இருக்கும் காற்று விரிவடைந்து பலூன் பெரியதாகும்.
காற்றில் மூலக்கூறுகள் அதிகமாக இருந்தால் அழுத்தமும் அதிகமாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர் இணையாக அந்த இடத்தில் உள்ள காற்றின் அழுத்தமும் இருக்கும்.
ஒரு கலனுக்குள் அதிக எண்ணிக்கையிலான காற்று மூலக்கூறுகள் இருந்தால், கலனுள் இருக்கும் காற்றின் அழுத்தமும் அந்த அளவுக்கு அதிகமாகவே இருக்கும். ஒரு பாட்டிலுக்குள் இருக்கும் காகிதப் பந்தினை ஊதுவது எவ்வளவு கடினமானது என்பதை இந்தச் சோதனையின் மூலம் அறியலாம்.
காலி பாட்டில் ஒன்றைப் படுக்கை வாட்டில் வைத்துக் கொண்டு அதன் கழுத்திற்குள் ஒரு சிறிய காகிதப் பந்தினை வைத்து, அதனைப் பாட்டிலுக்குள் ஊதித் தள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் அவ்வாறு ஊதி அதனைப் பாட்டிலினுள் தள்ளிவிடுவதற்கு உங்களால் முடியாது. பாட்டிலுக்குள் அந்தக் காகிதப் பந்து போகாது என்பது மட்டுமல்ல; அது பறந்து வந்து உங்கள் முகத்தின் மீதே விழும்.
இதன் காரணம், நீங்கள் ஊதும்போது பாட்டிலினுள் இருக்கும் காற்றின் அழுத்தம் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் பாட்டிலின் கழுத்துப் பகுதியுள் அதற்கு இணையான வெற்றிடம் ஒன்று உருவாகிறது. பாட்டிலினுள் இருக்கும் காற்றின் அழுத்தம் காகிதப் பந்தை வெளியே தள்ளுகிறது.
தமிழில்: த.க.பாலகிட்டிணன்
(தொடரும்)
நன்றி: CSIR-National Institute of Science
Communication And Information Resources, New Delhi.